புதன், 11 மார்ச், 2020

பறவைக் காய்ச்சல் வதந்தியால் 2.5 கோடி கோழிகள் தேக்கம்; தமிழக அரசுக்கு நெருக்கடி!

birdflu,TamilNadu,chicken,பறவைக்காய்ச்சல்,வதந்தி,கோழிகள்,தேக்கம்,தமிழகஅரசு,நெருக்கடிதினமலர் : சென்னை : பறவைக் காய்ச்சல் வதந்தியால் தமிழகத்தில் 2.5 கோடி கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. கிலோ கோழி இறைச்சி 50 ரூபாய்க்கு சரிந்துள்ளதால் வியாபாரிகளும், பண்ணை அதிபர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். வதந்தியை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது.
சீனாவில் உருவெடுத்துள்ள 'கொரோனா வைரஸ்' தொற்று பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் 'பிராய்லர்' கோழி வாயிலாக பரவியதாக வதந்திகள் பரவின. இதற்கிடையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சில பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் நாடு முழுவதும் கோழி இறைச்சி விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. இதனால் கோழி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த பாதிப்பை சரி செய்வது குறித்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சென்னையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து சென்னை மொத்த கோழி வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் ஞானசெல்வம் கூறியதாவது: இந்தியாவில் தினமும் 1.25 கோடி கோழிகள் விற்பனை செய்யப் படுகின்றன. தமிழகத்தில் தினமும் 20 லட்சம் கோழிகள் வரை விற்பனையாகின்றன. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விற்பனையாகும். ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸ் பறவைக் காய்ச்சல் வதந்தியால் கோழி இறைச்சி விற்பனை 90 சதவீதம் சரிந்துள்ளது.

இதனால் சில்லரை விலையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கிலோ கோழி இறைச்சி 50 முதல் 70 ரூபாயாக சரிந்துள்ளது. சில இடங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சி வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்ற நிலை உள்ளது. மொத்த விற்பனையில் 10 முதல் 13 ரூபாய்க்கு கிலோ கோழி விற்பனையாகிறது. ஒரு கோழி உற்பத்தி செய்ய 70 - 80 ரூபாய் வரை செலவாகிறது. விலை குறைந்ததால் மக்களிடையே மேலும் பீதி ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி வாங்கும் எண்ணமும் குறைந்துள்ளது. இதனால் 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி கோழிகள் தேக்கமடைந்துள்ளன.

இப்படியே சென்றால் கோழி உற்பத்தி மற்றும் இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். 'கோழி இறைச்சியால் கொரோனா பரவவில்லை; பறவைக் காய்ச்சலும் தமிழகத்தில் இல்லை' என கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் கோழி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுபோன்ற வதந்தியை கட்டுப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: கேரளாவில் இரண்டு ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும் கோழிகள் அழிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 26 தடுப்பு மருத்துவ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கேரளாவில் இருந்து வரும் கோழிகள், தீவனம், முட்டை போன்றவற்றை முழுமையான பரிசோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். அதேபோல் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தடுப்பு பணிகளுக்கு போதிய அளவில் மருந்துகள் உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் தணிகைவேல் கூறுகையில் ''கேரளாவில் சில பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 டிகிரி செல்ஷியஸ் வெயிலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு. எனவே பெரியளவில் பாதிப்பு இருக்காது'' என்றார்.



சிக்கன் - 65 குறையுமா
கோழி இறைச்சி விலை கிலோ 50 ரூபாயாக சரிந்துள்ள போதிலும் அசைவ ஓட்டல்களில் 'சிக்கன் - 65 சிக்கன் பக்கோடா ஜில்லி சிக்கன் தந்துாரி சிக்கன்' என கறிக்கோழியில் செய்யப்படும் உணவு வகைகளின் விலை குறையவில்லை. ஓட்டலின் வகைக்கு ஏற்ப பிளேட் 100 முதல் 300 ரூபாய் வரை தொடர்ந்து விற்கப்படுகிறது. எந்த சிக்கன் வகையாக இருந்தாலும் ஒரு பிளேட்டில் மூன்று முதல் ஆறு துண்டுகள் வரை தரப்படுகிறது. எனவே சிக்கன் - 65 விலை குறையுமா என அசைவ பிரியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.



கேரள கோழிகளுக்கு தடை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கேரளாவில் பறவைக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் கோழிகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் தமிழகத்திற்கு வராத வகையில் தடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இதர வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கோழிக்கோடு பகுதியில் இருந்து ஒரு மாதத்தில் வாங்கி வரப்பட்ட முட்டைகள், கோழிகள், குஞ்சுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழக கோழி பண்ணைகளில் இருந்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவினரால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஈரோடு, நாமக்கல்லில் உள்ள கோழியின நோய் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது. அனைத்து சரணாலயங்கள், விலங்கியல் பூங்காக்களில் பறவைகள், கழுகுகள் போன்றவை நோய் தாக்குதலுக்கு உட்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்தும் கோழிக் குஞ்சுகள் முட்டைகள் தீவனம் போன்ற பொருட்களை வாங்க அரசு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக