புதன், 19 பிப்ரவரி, 2020

அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்றத் தேர்தலை கட்சிக்குள் யாருக்கும் எவ்வித குறையும் இல்லாத அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்ததைத் தொடர்ந்து ஆட்சியை முழுமையாக முடிக்க எவ்வித ‘நம்பர் ‘ தடையும் இல்லாத நிலையில், அதிமுகவில் அடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கான புயலையும் சமாளிக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி.

நாடு முழுவதிலும் இந்த வருடம் 73 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் வரும் ஏப்ரல் மாதத்தோடு 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்கள். இந்த ஆறு உறுப்பினர்களில் இப்போதைய நிலவரப்படி அதிமுகவைச் சேர்ந்த முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யானந்த மற்றும் (அண்மையில் பாஜகவில் சேர்ந்த) சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, சிபிஎம் கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் வரும் ஏப்ரல் மாதத்தோடு தங்கள் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்கள். இவர்களில் 4 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள். டி.கே.ரங்கராஜன் அதிமுகவின் ஆதரவோடு சென்றவர். ஆனால் இன்றைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ் தொடங்கிவிட்டது. தற்போது டெல்லியில் அதிமுகவுக்கென மக்களவை உறுப்பினர் என்றால் அவர் ஓ.பன்னீரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டும்தான். ராஜ்யசபாவில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் பதவிக் காலம் முடிகிறது. இந்த நிலையில் எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவருமே அடுத்து அதிமுக ஆட்சி வந்தாலும், வராவிட்டாலும் டெல்லியில் தங்களுக்கென ஒரு பிடி இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.
அந்தவகையில் இப்போது ராஜ்யசபாவுக்கு செல்வதற்காக இருவருமே தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களை பரிந்துரை செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கும் தம்பிதுரைக்கும் ஏற்கனவே சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும் பின்னர், மக்களவையில் துணை சபாநாயகராக டெல்லியில் எடப்பாடிக்கு பெரிய உதவியாக இருந்தவர் தம்பிதுரை. அதனால் மீண்டும் தம்பிதுரையை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்க எடப்பாடி முடிவு செய்திருக்கிறார். அதேபோல தர்மயுத்தத்தில் தன்னுடன் உறுதுணையாக இருந்த கே.பி.முனுசாமிக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைதான் பன்னீரால் வாங்கிக் கொடுக்க முடிந்ததே தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. எனவே கே.பி. முனுசாமியை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குவதில் உறுதியாக இருக்கிறார் பன்னீர். மீதியிருக்கும் ஒரு இடத்துக்கு வேலூரில் இரு முறை போட்டியிட்டு பெரும் செலவு செய்த ஏ.சி. சண்முகத்தின் பெயர் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
அதிமுக சார்பில் தமிழ் மகன் உசேன், அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் போட்டியில் இருந்தாலும் ராஜ்யசபா ரேஸின் முன்னணியில் இருப்பவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை. ஏ.சி.சண்முகம் ஆகியோரது பெயர்கள்தான். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ராஜ்யசபாவுக்காக தீவிர முயற்சியில் இருந்தாலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான அரசியல் சூழலை ஒட்டி எடப்பாடியும், பன்னீரும் சிந்திப்பதால் அதிமுகவினருக்கே ராஜ்யசபா என்ற நிலையே இப்போது நிலவுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாடஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக