வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனம் !

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனமா?மின்னம்பலம் : தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் பட்டினப் பிரவேசத்தை நிறுத்த வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதினகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 13ஆம் தேதி பொறுப்பேற்றார். வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்ற தருமபுரம் ஆதீனம், வெள்ளிப் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். அதுபோலவே திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடந்த பட்டினப்பிரவேச நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். இந்த நிலையில் மனிதர்கள் வைத்து பல்லக்கு தூக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு எதிர்ப்பு எழத் துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “ தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் ‘மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்' என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது” என்று தெரிவித்ததுடன்,
”திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதீனத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று - அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது” என்ற தகவலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதீனகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதீனகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்த வீரமணி, நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக