செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

பேதிமேளா – இந்தியன் காலரா உறுபிணி – சென் பாலன்

uyirmmai.com - சென்பாலன் : அத்தியாயம் – 3 : ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)
பெயரோ அழகான பெயர் – விப்ரியோ காலரே.
காலராவின் கிருமியான விப்ரியோ காலரே பல்கிப் பெருக அதிக உப்புத் தன்மை இல்லாத கடல் நீர் வேண்டும். நீரின் வெப்பநிலை 20 டிகிரி செண்டிகிரேடிற்கு அதிகம் இருக்க வேண்டும். இவையிரண்டும் வெப்ப நாடுகளின் நதிக்கழிமுகப் பகுதிகளில்தான் கிடைக்கும். இந்தியாவில் கங்கை நதி கடலில் சேரும் வங்கப் பகுதி காலரா கிருமியின் சரணாலயம். அக்கிருமி எப்படியெல்லாம் தனது வாழ்விடம் இருக்க வேண்டும் என எண்ணியதோ அப்படி அமைந்த இடம். விப்ரியோ காலரேக்கள் இன்றுவரை அங்கு சுகமாக வாழ்ந்து வருகின்றன.
வங்க தேசத்தின் நதிக் கழிமுகப்பகுதியில் சுகமாக வசித்துவந்த விப்ரியோ காலரே கிருமிகள் அவ்வப்போது கங்கை நதிப்படுகையின் ஓரமாக உள்நாடுகளுக்குப் பரவி சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தன. 1817 ஆம் ஆண்டு கங்கை நதியில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்ட கும்ப மேளா நடத்தப்பட்டது. அவர்களோடு விப்ரியோவும் கும்பமேளா கொண்டாடியது. அதில் கலந்துகொண்டவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காலரா கிருமியைத் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். திறந்த வெளி மலம் கழித்தலைக் கூறாகக்கொண்ட இந்தியக் கலாச்சாரம் விப்ரியோக்களை மஞ்சள் கம்பளம் விரித்து வரவேற்றது.

இந்தியா முழுவதும் கொள்ளை நோயாக காலரா பரவியது. ஊரை அழித்த உறுபிணி என்று பேச்சுக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே ஊர் ஊராக அழித்துக்கொண்டே பரவியது.
எத்தனை பேர் செத்தார்கள் என்று கணக்கே இல்லை. இறப்பின் அளவு எவ்வளவு எனப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு: கல்கத்தாவில் இருந்து வங்கக்கடல் மூலம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியது. அப்படிப் பரவி தாய்லாந்தின் பாங்காக்கில் இறந்தவர்கள் மட்டுமே 30,000 பேர் எனில் நோயின் தோற்றுவாயான இந்தியாவில் எத்தனை லட்சம் பேர் இறந்திருப்பர் என யூகித்துக் கொள்ளலாம். பிரிட்டிஷ் இராணுவத்தினரும், அதிகாரிகளும் தப்பவில்லை. எஞ்சியோர், நோய் கண்டு அஞ்சியோர் கப்பல் ஏறிச் சொந்த நாட்டிற்குப் பறந்தனர். அவர்களோடும் விப்ரியோ சென்றது. ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. ஆசியாவில் காலரா இல்லாத நாடே இல்லை எனும் அளவு பாதிப்பை உண்டாக்கியது. போதுமான அளவைவிட அதிக சேதாரத்தை உண்டாக்கியபின் 1824 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் முதல் காலரா உறுபிணி முடிவுக்கு வந்தது. ‘இந்தியன் காலரா’ என வரலாற்றில் குறிக்கப்படும் முதல் காலரா உறுபிணி 1824ல் முடிந்த பின்னரும், அடுத்த 200 ஆண்டுகளில் ஏழுமுறை உலகக் கொள்ளை நோயாகப் பரவி பல இலட்சம் மக்களைக் கொன்றது. கும்பமேளா வந்தால் போதும், காலரா காலில் சலங்கை கட்டி நர்த்தனம் ஆடியது. சமீபத்தில் கூட போரினால் பாதிக்கப்பட்ட ஏமன், புயலினால் பாதிக்கப்பட்ட ஹைதி தேசங்களில் காலரா பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தியன் காலரா
காலம் : கிபி 1817 முதல் 1824 வரை, அதைத் தொடர்ந்து 200 வருடங்களில் ஏழு முறை கொள்ளை நோயாக பரவியுள்ளது.
நோய் : காலரா
நோய்க்கிருமி : விப்ரியோ காலரே எனும் பாக்டீரியா
பரவும் முறை : மலத்தால் அசுத்தமான நீர் வழி
இடம் : ஜெஸ்ஸூர், வங்க தேசத்தில் ஆரம்பித்து உலகம் முழுவதும்
இறந்தவர்கள் எண்ணிக்கை : சரியான எண்ணிக்கை இல்லை. கோடிக்கணக்கில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நோயின் இன்றைய நிலை : வளர்ச்சி அடைந்த நாடுகளில் நோய் பாதிப்பு குறைவு, வளர்ச்சி அடையாத நாடுகளில் அதிகம்.

முதல் காலரா உறுபிணி இந்தியாவில் இருந்து லண்டனுக்குப் பரவிய போது நோயை உண்டாக்கும் விப்ரியோ கிருமி கண்டறிந்திருக்கப்படவில்லை. நோய் பரவும் வழிமுறையும் தெரிந்திருக்கவில்லை. கெட்ட காற்றின் மூலம் பரவுவதாக மக்கள் நினைத்தனர். அப்போது லண்டனில் மருத்துவராக இருந்த ஜான் ஸ்னோ என்பவர், குறிப்பிட்ட அடிகுழாய்களைப் பயன்படுத்தும் பகுதிகளில் காலரா அதிகம் இருப்பதைக் கண்டறிந்தார். லண்டன் முனிசிபல் அதிகாரிகளிடம் பேசி இரவோடு இரவாக அந்த அடிகுழாய்களின் கைப்பிடியைக் கழற்றி எடுத்துவிட்டார். அந்த இடங்களில் எல்லாம் காலரா உடனடியாக முடிவுக்கு வந்தது. ஜான் ஸ்னோவின் இந்த அவதானிப்பு மருத்துவத்துறையில் புதிய திறப்பை உண்டாக்கியது. நோய் பரவியல் பற்றிய துறையான epidemiology துறையின் தந்தை என ஜான் ஸ்னோ போற்றப்படுகிறார்.
காலராவில் மற்றொரு வித்தியாசமான அவதானிப்பு உள்ளது. O இரத்தவகை கொண்ட மக்களுக்கு காலரா கடும் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் AB இரத்தவகை உள்ள மக்களைச் சற்றுக் கருணையுடன் நோக்கும். இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
வயிற்றுப்போக்கு என்பது, நாம் உண்ணும் உணவும், நீரும் குடலால் உறிஞ்சப்படாமல் வெளியேறுவது என்று தான் பொதுவாக நினைப்போம். ஆனால் காலரா வயிற்றுப்போக்கு வித்தியாசமானது. “மாமா கெட்டவன்னு நினைக்காத பொண்டாட்டி, கேடு கெட்டவன்”என்ற குத்து வசனம் மாதிரி, சாதாரண வயிற்றுப்போக்கு கெட்டவன்னா, காலரா கேடு கெட்டவன்.
சிறுகுடலின் பக்கவாட்டுச் செல்களில் விப்ரியோ காலரே உண்டாக்கும் ஒருவகை நஞ்சு ஒட்டிக்கொள்ளும். அது உடம்பில் இருந்து உப்பை குடலுக்குள் தள்ளும். உடலில் உள்ள நீரும் அதன் இணைபிரியா நண்பனான உப்பிற்கு பின்னாலேயே குடலுக்குள் வந்துவிடும். அனைத்தும் சேர்ந்து வயிற்றுப்போக்காக பீய்ச்சி அடிக்கும். அதாவது, நோயாளி தண்ணீரே குடிக்காமல் இருந்தாலும், தண்ணீராக வயிற்றுப் போக்கு ஆகும்.
அதற்காக வெளியேறும் நீரின் அளவு குறைவாக இருக்கும் என எளிதாக எண்ணிவிட வேண்டாம். 80 கிலோ மனிதன் காலரா வயிற்றுப்போக்கினால் 60 கிலோ ஆகிவிடுவான். உடம்பில் இருந்து 20 லிட்டர் நீரை 24 மணி நேரத்தில் உறிஞ்சி வெளியேற்றிவிடும். ஒரு சாதாரண மனிதனின் உடலில் இருந்து 20 லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்தால், அவனது நிலையை யோசித்துப் பாருங்கள், காலராவின் கொடூரம் புரியும். மிகப்பெரிய பயில்வானையும் சிலமணி நேரங்களில் சவமாக்கிவிடும். அதனால் தான் மற்ற எந்த உறுபிணிகளையும் விட காலரா அதிக மரணங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறான காலராவின் கொடூரத் தன்மையால் தான் “பேதியில போக, கொள்ளையில போக” என்பதெல்லாம் சாபமிடும் வசைச்சொற்களாக உருவாயின.
காலரா கிருமியின் விசத்தால் உறிஞ்சி வெளியேற்றப்படும் வயிற்றுப்போக்கு நீர் பார்ப்பதற்கு “அரிசி களைந்த நீர்” போல இருக்கும். அது தான் நோயைக் கண்டறிய முக்கியக் குறியீடு. காலராவின் வயிற்றுப்போக்கு ஆரம்பத்தில் பெரும்பாலும் வலியில்லாமல் தான் இருக்கும். ஆனால் சோழவந்தான் ஆற்றுக்கரை கிணற்றில் பம்புசெட் போட்டது போல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். சில மணி நேர வயிற்றுப்போக்கிற்குப் பிறகு வலி வரலாம். நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு சில மணி நேரங்களில் மரணம் நேரும்.
ORS எனப்படும் வாய்வழி நீரேற்றுக் கரைசல் அல்லது உப்புக் கரைசல் தான் காலரா மருத்துவத்தில் முக்கிய மருந்தாக உள்ளது. சிரை வழித் திரவம் ஏற்றும் முறையும் உயிர் காக்கும் சிகிச்சையாகப் பயன்படுகிறது. நோயின் கால அளவைக் குறைக்க பாக்டீரிய எதிர்ப்பு மருந்துகள் தரப்படுகின்றன. ஆனால் இவை அனைத்துமே தாமதமின்றி உரிய நேரத்தில் தரப்பட வேண்டும். சில நிமிடத் தாமதம் கூட காலரா நோயாளியின் உயிரைப் பறித்துவிடும்.
காலரா நோய்க்கு தடுப்பு சொட்டு மருந்துகள் உள்ளன. ஆனால் அவை ஆறு மாதங்கள் வரையே நோயைத் தடுக்க வல்லவை. எனவே கொள்ளை நோயாக பரவும் போது மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் ஹைதி தீவில் காலரா பரவும் நிலை தோன்றிய போது அங்கு காலரா தடுப்பு சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
தடுப்பு மருந்துகளை விட காலரா நோயைத் தடுக்கும் சிறந்த முறை என்பது அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவதும், மலக்கழிவுகளை சுகாதாரமான முறையில் வெளியேற்றுவதும் தான். சமூக நீதி சார்ந்த இவையிரண்டும் தான் மக்கள் “பேதியில் போவதைத்” தடுக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக