ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர் எடப்பாடி சந்திப்பின் ரகசியம்?

தினகரன்:  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 6ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். முதல்வரை சந்தித்து பேசிய சீமான் நிருபர்களிடம் கூறும்போது, சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியதுடன், நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராகவும் கருத்துக்களை கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அதிமுகவை எதிர்த்து சீமான் பேசவே இல்லை. ஆனால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து தமிழக அரசை சீமான் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதிமுக அரசின் முடிவுகளை கடுமையாக எதிர்த்ததுடன், ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை பொதுக்கூட்டங்களில் கடுமையாக விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் பேசினார்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், சீமான் திடீரென முதல்வர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீமான் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதையே இந்த சந்திப்பு எடுத்துக் காட்டுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. எப்படியும் இந்த கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும். அதனால் பிரச்னைகள் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினால் அதை சமாளிக்க சீமான் கட்சியை கூட்டணியில் சேர்க்க முதல்வர் முடிவு செய்துள்ளார். மேலும், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு மேடைகளில் பதிலடி கொடுக்க சீமானை பயன்படுத்தவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது” என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக