திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!

Asiriyar K Veeramani : ஆரிய சனாதனங்களையும்  மூடநம்பிக்கைகளையும் சாடிய
வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!
இன்று வடலூர் இராமலிங்க அடிகளார் நாள்.
வடலூரில் வாழ்ந்து இறுதிக் காலத்தில் ஜாதி, மதம், மூடச் சடங்குகள் - இவைகளை வெறுத்து - தெளிவடைந்த நிலையில், ஆரியப் பண்பாட்டை எதிர்த்து, அதன் அடிக்கட்டுமானம் எத்தகைய அறிவுக்கு ஒவ்வாத - மக்களை மதம், ஜாதி என்று பிளவுபடுத்தும் ஹிந்து மதம் - சனாதனம், வேத மதம் என்று பேதம் பரப்பிய நிலைகளைக் கண்டித்து ஆறாம் திருமுறை என்ற அருட்பாவின் பகுதியில் தாம் உணர்ந்தவைகளை ஓதினார்.
அதன் காரணமாகவே வடலூரார் வள்ளலார் - இறுதி முடிவு மர்மமானதாகவே ஆரியச் சூழ்ச்சியினால் அமைந்தது.
சோதியில் கலந்தார் என்பது உண்மையா?
சோதியில் கலந்தார் என்று கூறிமுடித்து, அவரை வெறும் சடங்கு, ஆச்சார நிகழ்வுகளுக்கு உரியவராகவே ஆக்கி விட்டனர்.

தைப்பூசம் - அதில் காவடி என்றெல்லாம் மூடநம்பிக்கையைப் புகுத்தி அவரின் முக்கிய கொள்கைத் தத்துவங்களை எல்லாம் மண் மூடச் செய்து விட்டனர்.
‘சத்திய ஞான சபை’ என்பதன் முழுப் பொருள் - உண்மைப் பொருள் என்ன என்பதாகும்.
‘உண்மையான அறிவு’ என்பது தானே அதன் மெய்ப் பொருள்!
உண்மை அறிவை ஒவ் வொருவரும் பெற வேண்டும் என்பதைத்தான் அவர் உணர்ந்தார் - பரப்பினார்.
பசி என்னும் மூல நோய்!
மக்களின் பல்வகைத் துன்பங்களுக்கும், வறுமைக்கும் மூலநோய் - பசியே என்று உணர்ந்த வள்ளல் பெருமான் - பசிப் பிணி போக்கிட வயிற்றுக்குச் சோறிடும் வாழ்நாள் திட்டத்தை அறிவித்துத் துவக்கினார்!
அவரது அரிய அறிவுரை - கொள்கை - தத்துவங்களை அவர்களது விழாவைக் கொண்டாடும் பல வள்ளலார் பக்தர்கள் பின்பற்றுகிறார்களா?
வடநாட்டு சாயிபாபாக்களுக்கு இருக்கும் மவுசும், மரியாதையும் வடலூர் அறிவுச் சுரங்கத்திற்கு - மனிதநேயம் காத்த மாண்பு செறிந்த இராமலிங்க அடிகளாருக்கு ஏன் ஏற்படவில்லை இன்றளவும்? காரணம் வெளிப்படையானதே!
வள்ளலார் கூறியது என்ன?
ஆரிய சனாதனத்தின் வேரறுக்கும் கொள்கைகள் - அவர் கண்டறிந்த உண்மைகள்!
இதோ அவருடைய திருவாய் மொழிகளை, சில அறிவுரைகளான அறிவுரையைக் கேளுங்கள்.
1. “கொள்ளை வினைக் கூட்டுறவால்
கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்
கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறு அக்கலைகள் காட்டியபல்
கதியுங் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்
எல்லாம் பிள்ளை விளையாட்டே”
2. “நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச்சரிதம்
எல்லாம் பிள்ளைவிளையாட்டே”
“மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.’’
3. “இருட் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செவியில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்க ளாச்சிரம
வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு”
என்று பாடியுள்ளார்.
மேலே காட்டியது மட்டுமா?
“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று முழங்கியவர்.
வள்ளலாரின் இறுதி உணர்வுகள் யாவை?
எனவே வள்ளலாரின் இறுதி உணர்வுகள் ஆரிய சனாதன மதத்தின் வேர் அறுத்தவையாகும்.
மதம் - வர்ணாசிரமம் - கடவுள் சிலைகளை வைத்துக் கொண்டாடப்படும் ‘கும்பாபிஷேகம்’ என்ற பெயரால் தமிழ் உணர்வை அழித்து, சடங்குகளின் தொகுப்பாகவே உள்ள மதத்தின் ஜாதி ஆணவமும், பிறவி இழிவும் நீடிக்க விட்டு விடலாமா?
தமிழைப் பழித்து சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்று சங்கராச்சாரி சொன்ன பொழுது அப்படி என்றால் எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று முகத்துக்கு முகம் சொன்னவர் வடலூரார் என்பதை மறந்து விடக் கூடாது.
தைப்பூசக்காவடி தூக்கிகளே!
வெறும் வெளிப்பகட்டுக்காக சிலவற்றை மட்டும் காட்டி வள்ளலாரைக் கொண்டாடுதல் சாலச் சிறந்ததா?
சிந்திக்க வேண்டும் இராமலிங்க தைப் பூசக் காவடி தூக்கிகள்.
இதில் முருகக் கடவுள் என்று முதலில் கூறி, வடக்கே இருந்து வந்த ஸ்கந்தன், பிறகு கந்தன், சுப்ரமணியன் என்று ஆக்கி, வள்ளலாரை அவரது ‘தனித்திரு விழித்திரு’ என்பதை அழித்து வருவது ஆரியத்தின் கைவரிசை!
இதனால்தான் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் வள்ளலார் சமதர்ம சிந்தனை முத்துக்களை 2 அணாவில் பல்லாயிரம் போட்டுப் பரப்பினார்!
‘வடலூரும் - ஈரோடும்’ என்ற தலைப்பில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களால் தொகுக்கப்பட்ட சிறு நூலும் வெளியிடப்பட்டது.
வள்ளுவரும் வள்ளலாரும்
வள்ளுவரும், வள்ளலாரும் நமது பண்பாட்டின் மீதான படையெடுப்பை முன்பே எதிர்த்த கருத்துப் போராளிகள் என்பதை அடையாளம் காட்ட நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தவறவில்லை!
எனவே வள்ளலார் கூறிய, ‘கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போக’ நாளும் உழைத்து வரும் திராவிடர் கழகத்தின் கொள்கை - லட்சியப் பரப்புக்கு வள்ளலார் பக்தர்கள் என்றென்றும் துணை நிற்க கடமைப்பட்டுள்ளனர்!
வள்ளலார் வெறும் சிலையல்ல
வள்ளலார் வெறும் சிலை அல்ல - ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, சடங்குகள் ஒழிப்புக்கான சீலங்களின் சிறந்த அடையாளம் என்பதை மறவாதீர்!
சடங்கு சம்பிரதாயங்களை ஒழித்த வள்ளலாரை சடங்கு சிமிழ்க்குள் அடைத்து சிறைப்படுத்திக் கொண்டாடாதீர் நண்பர்களே - வள்ளலார் சிந்தனை வளரட்டும்!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
9.2.2020
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இராமலிங்க அடிகளாரும் சமஸ்கிருத வழிபாடும்
இது திருவருட்பா 6ஆவது திருமுறையில் வசன பாகத்தில், “சத்தியப் பெரு விண்ணப்பம்” என்னும் தலைப்பின்கீழ், (தென்மொழி - தமிழ்) என்னும் துணைத் தலைப்பில் உள்ளது.
“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத் தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடைய தாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடைய தாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென் மொழியொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பல வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்” என்கிறார்.
அவர் நம்பும் கடவுளை நோக்கி கூறு கிறார் வடலூர் இராமலிங்க அடிகளார். அத்தகைய தமிழ் வழிபாட்டு மொழியாகத் தகுதி இல்லை என்கின்றனர். எப்படி இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக