சனி, 29 பிப்ரவரி, 2020

சென்னை மாதவரம் பயங்கர தீ .. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியுள்ளது ..இரசாயன கிடங்கில் ...

   தினத்தந்தி :சென்னை, திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன
தீ மளமளவென எரிந்து வருவதால் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகளவு கரும்புகை எழுவதால் மாதவரம் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
 கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பக்கத்திலுள்ள ஆவடி பகுதிகளுக்கும் புகை பரவியுள்ளது.

 இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி தனது உயர் அதிகாரிகளுடன் தானே நேரடியாக தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 'மருந்து தயாரிக்கும் கெமிக்கல் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம் பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை. புகை காற்றில் பரவுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தகவல் எதுவுமில்லை. மருந்துப்பொருள் என்பதால் ஆபத்தில்லை என்றே நினைக்கிறேன். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றுப்பக்கமும் சூழ்ந்து தீயை அணைத்து வருகிறோம், ஒருபக்கம் மட்டும் செல்ல முடியவில்லை. அங்கும் வீரர்கள் சென்றுள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லாரிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர், மேலும் 500 தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் வர உள்ளனர். தீ பற்றி எரிந்த இடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அகற்றப்பட்டுவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக