சனி, 1 பிப்ரவரி, 2020

திமுக வரலாற்றில் முதல் முறையாக குத்துவிளக்கு ஏற்றல்- மங்கல இசை.. திருச்சியில் திருப்பம்!

Trichy Conference: DMK to compromise Dravidian ideology? tamil.oneindia.com : திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக அக்கட்சியின் மாநாடு ஒன்று குத்துவிளக்கேற்றப்பட்டு மங்கல இசையுடன் தொடங்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 திராவிட கொள்கைகளில் இருந்து திமுக விலகிச் செல்கிறதோ என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது.
இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் 30,000 பேர் பங்கேற்றுள்ளன்னர். பொதுவாக திமுகவின் எந்த ஒரு மாநாடாக இருந்தாலும் கட்சி கொடி ஏற்றுதல் என்பது முதலில் நடைபெறும். திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் கட்சி பிரசார பாடல்கள் குறிப்பாக நாகூர் ஹனீபாவின் பாடல்கள்தான் ஒலித்து கொண்டே இருக்கும்.
கொடி ஏற்றிக் கொண்டு இருந்தாலும் இப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும். இதனைத்தான் அத்தனை திமுக மாநாடுகளிலும் கட்சி தொண்டர்கள் பார்த்து வந்துள்ளனர். ஆனால் திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு அக்கட்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது.
திமுகவின் வரலாற்றிலேயே முதல் முறையாக அக்கட்சியின் மாநாட்டில் இந்துமத சம்பிரதாயப்படி குத்துவிளக்கேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ. பெரியசாமி ஆகியோருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் குத்துவிளக்கேற்றினர்.

இதனைத் தொடர்ந்து மங்கல இசையும் இசைக்கப்பட்டது. இது கொள்கை ரீதியான திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் திமுக தமது திராவிட சித்தாந்த கொள்கைகளில் எவ்வித சமரசத்துக்கும் தயார் என்கிற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்கிற பிரசாரத்துக்கு பதிலடி தரும் வகையில்தான் திருச்சி மாநாட்டில் இப்புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் திராவிடர் இயக்க கொள்கைகளில் இப்படியான சமரசங்களை செய்வதை எப்படிதான் ஏற்பது என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக