சனி, 22 பிப்ரவரி, 2020

இந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாடற்று போன கதை

Thavamuthalvan Davan : இந்திய  தேசமெங்கும் கடந்த பல மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்
நடந்துகொண்டேயிருக்கின்றன. கைதுகள், வழக்குகள் , வன்முறை வெறியாட்டங்கள், போலீஸ் துப்பாக்கி சூட்டில் மக்கள் பலி என ஒவ்வொரு நாளும் போராடும் மக்களை அடக்கி ஒடுக்குகிறது மத்திய-மாநில அரசுகள்.
இலங்கையில் மலையக மக்களாகவும் ,
தமிழகத்தில் தாயகம் திரும்பியோர் என்ற சொல்லிலும் அழைக்கப்படும் நாங்கள் ஏறக்குறைய இரண்டு நாடுகளிலும் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகை கொண்டவர்களாக வாழ்கிறோம்.
சமூகப் பொருளாதார வாழ்வில் மற்ற மக்களோடு ஒப்பிடும்போது, எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் , தேயிலைத் தோட்டத்தில் தொடரும் "நவீன கொத்தடிமை" வாழ்வே இன்றுவரை நீடிக்கிறது.
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தொடங்கிய இந்த அவல வாழ்வு இன்னுமும் நீடிக்க, புறச்சூழல் மட்டும் காரணங்களாக கொள்ள முடியாது.
இலங்கை: சிங்களவர்கள்,மலையகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், பறங்கிகள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், என பல்வேறு இன,மொழி பண்பாடு, கலாச்சாரங்களைக் கொண்ட தேசம் தான். இந்த பன்மைத்துவம் கொண்ட நாட்டை சிங்களப் பேரினவாதம் என்கிற ஒற்றை துருவத்தில் யோசித்து, சிங்களத்தலைவர்கள் செயல்பட்டதன் விளைவே மலையகத் தமிழர் வெளியேற்றம்.

ஆக, சிங்களப் பேரினவாதிகள் தொடர்ச்சியாக கொண்ட இனவிரோத போக்கின் காரணமாக, முதன்முதலாக பலியானவர்கள் மலையக மக்களே.
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தொடங்கிய இலங்கையின் தேயிலை, காப்பிபயிர் செய்கைதான் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க முதுகெலும்பாக திகழ்ந்தது. அதனை சுமந்தவர்கள் இங்கிருந்து போன தமிழர்கள்....நாங்கள்.
"ஆசைதான் துன்பத்திற்கெல்லாம்" காரணம்
என்று , சொன்ன புத்தமதம்தான் மலையகத் தமிழர்களை குடியுரிமை சட்டம் என்கிற பெயரில் சுதந்திரம் பெற்ற ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதுகளில் நாடற்றவர் ஆக்கியது.
தமிழ் சமூகத்தின் பெரும்பகுதி மக்கள் முதன்முதலாக, நாடற்றவர்கள் என்கிற பெயரை சுமந்தவர்கள் மலையக மக்கள்தான். அன்றைக்கு தலைவர்களின் சில எதிர்ப்புகளோடும் மற்ற ஏனைய தமிழ் சமூக மக்களின் மௌனத்தோடும்‌ அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர், பதினைந்து ஆண்டுகள் கழித்து அறுபத்துநான்குகளில் லட்சக்கணக்கான மக்களை, சிரிமாவோ- சாஸ்திரி உடன்படிக்கையில் இந்தியாவிற்கு நாடு கடத்தியது.
பிறகு சிங்களப்பேரினதவாதம் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது. பிறகு நடந்த வரலாற்றுச் சம்பவங்களை நீங்களே இந்த நேரத்தில் நினைவுபடுத்திகொள்ளுங்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் பொதுப்புத்தியில் 'ஏதோ புலம்பெயர்ந்து வந்துவிட்டார்கள்'
'வேலைதேடி போனவங்க திரும்பி வந்திட்டாங்க'
என்கிற சிந்தனையோட்டமே நிலவுகிறது.
இலங்கையின் முழுமையான வரலாற்றை உணர்ந்த எவரும் மலையகத் தமிழரான
உழைக்கும் மக்களின் வாழ்வை விடுத்து‌
அரசியல் பேசுதல் அபத்தம். இன்று வரையும் இங்கே நீடிக்கிறது. இது அடையாள அரசியல் அல்ல; பேசாமல் விடப்பட்ட அரசியல்.
இன்றும்‌ இரண்டாம்தர குடிமக்களாக‌ நடத்தப்படுகிற கண்ணோட்டத்தின்‌ வெளிப்பாட்டை இரண்டு நாடுகளிலும் காணலாம். இலங்கைகூட பரவாயில்லை என்று சொல்வேன்.
ஒரு நாட்டில் பன்னெடுங்காலமாக மக்களோடு மக்களாக வாழ்ந்துவந்த மக்களை, பெயர்த்து எடுத்து இன்னொரு நிலத்தில் வீசி எறிந்தால், அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு நாங்களே
உதாரணம்.
இலங்கையில் குடியுரிமைப் பறிப்புச் சட்டம்
நிறைவேற்றப்பட்டு எழுபது ஆண்டுகளை கடந்து விட்டோம். இன்னமும் மீளமுடியவில்லை. அதன் பாதிப்பு நீடிக்கிறது.
ஆரோக்கிப்பூர்வமான தேசத்தின் வாழ்வு
ஆவணங்களிலும், ஒரு பகுதி மக்களை நாடற்றவர் ஆக்குவதிலும்தானா இருக்கிறது.
இதைவிட மனத்துயரும் அவமானமும்
ஒர் குடிமகனுக்கு வேறு உண்டா??
எல்லோரும் கரம்கோர்ப்போம்!
திரும்ப பெறும்வரை போராடுவோம்!!
கதைப்போம்!
பகிருங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக