வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா மேற்கொள்கிறது

Chinniah Kasi : கொரோனா வைரசும் புதிய பனிப்போரும் ! தீக்கதிர்கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகமே அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை மக்கள் சீனம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பத்தே நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டியதோடு மேலும் 12,500 படுக்கைகளுக்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டது. சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் உஹான் நகரத்திற்கு விரைந்துள்ளனர். நோய்க்குள்ளானவர்களை ‘தனிமைப்படுத்தி மீட்கும்’ (quarantine) மிகப்பெரிய காரியமும் விரைந்து நடந்துள்ளன. மேலை நாட்டு ஊடகங்களும் நம் நாட்டு பத்திரிகைகளும் ‘சீனாவின் பெரும் நகரங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன’ என்று எழுதுவது உண்மையிலேயே அந்த மக்களின் கட்டுப்பாட்டைத்தான் காட்டுகின்றது. இதற்கும் மேலாக, வைரசின் மரபணு (genome) கட்டமைப்பை மிக விரைவாக கண்டறிந்தது மட்டுமல்லாமல் அதை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக பொது தளங்களில் பதிவேற்றியுள்ளார்கள். அதனால் தான் உலக சுகாதார கழகத்தின் செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான் அதை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்கது’ என்றும் அதன் மூலம் விரைவான தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்றும் பாராட்டியுள்ளார்.

இதையெல்லாம் பாராட்டுவதற்கு மனமில்லாத மேலை நாட்டு ஊடகங்களும் அமெரிக்க பத்திரிகைகளும் இதுதான் சமயம் என்று தங்கள் எதிரியான சீனாவையும் அதன் சமூகக் கட்டமைப்பையும் தாக்கி பிரச்சாரம் செய்கின்றன. சீனர்கள் வௌவால்களையும் பாம்பு களையும் சாப்பிடுவார்கள் என்றும் அதுதான் இந்த வைரஸ் தாக்குதலுக்கு காரணம் என்றும் இனவெறி கலந்து பிரச்சாரம் செய்கின்றன. அதற்கு உதாரணமாக, ஒரு சீனப்பெண் வௌவால் சூப்பை ரசித்து சாப்பிடுவது போன்ற காணொலி இணைய தளங்களில் வெகு வேகமாக பரவியது. வெளியில் வராதது என்னவென்றால், அந்தப் பெண் பிரபல சுற்றுலா தொகுப்பாளர் என்பதும் அவர் சாப்பிடுவது பலாவ் எனும் மேற்கு பசிபிக் தீவுகளில் கிடைக்கும் ஒரு பானம் என்பதும் ஆகும். சீனர்கள் வௌவால் உண்பது இல்லை. மேலும் நன்றாக சமைக்கப்பட்ட உணவில் எந்த வைரசும் பிழைத்திருக்க முடியாது.
சீனர்களின் உணவுப் பழக்கத்தை தாக்குபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்; அல்லது வேண்டுமென்றே ஒன்றை மறைக்கிறார்கள். பறவைக் காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும் எதனால் வந்தது? பன்றிகளையும் பறவைகளையும் நாம் வீட்டுப் பிராணிகளாக வளர்த்ததால்தான். இதற்கு முன் 2009-2010ல் வந்த H1N1 பன்றிக் காய்ச்சல் அமெரிக்காவிலிருந்து தொடங்கியது. அப்பொழுது 61 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்; 2.74 லட்சம் பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்; அமெரிக்காவில் மட்டும் 12,500 மக்கள் மடிந்தனர். உலகம் முழுவதும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பன மதிப்பிட முடியவில்லை. ஏனென்றால் பல நாடுகளில் தொற்று நோயை உறுதிப்படுத்தும் முறைகள் இல்லை. உறுதியாக தெரிந்தது 70 லட்சம். உண்மையில் அது 25-35 மில்லியன் இருக்கலாம். அப்பொழுது உலக சுகாதார மையம் அதிக பட்ச கண்காணிப்பையும் பயண கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஆனால் இப்பொழுது அதே மையம் விதிக்கும் கட்டுப்பாடுகளைவிட அதிகப்படி யான பயணத் தடைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் அறிவிப்பது அந்த நாடுகளின் இனவாதத்தையும் அரசியல் உள் நோக்கத்தையும் காட்டுகிறது.
சீனாவிற்குள் எழும் சில விமர்சனங்களை ஊதிப் பெருக்கி அவர்கள் அஞ்சும் சீன சோஷலிச சமூகத்தை இந்த நோய்க்குக் காரணம் என்கிறார்கள். ஆனால் உலக மருத்துவ மையங்கள் தெரிவிப்பது இதற்கு நேர் மாறாக இருக்கிறது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை. மிக நம்பகமான பத்திரிகைகள் என்று சொல்லப்படும் நியூயார்க் டைம்ஸும் வாஷிங்டன் போஸ்ட்டும் இராக்கில் சதாம் உசேனிடம் அழித்தொழிப்பு ஆயுதங்கள் இருக்கிறது என்று கூசாமல் சொன்னவைதான். அதுவும் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொன்ன பிறகும். நோய்வாய்ப்பட்ட மக்களைக் கண்காணிக்கவும் தோற்று நோய்களை தடுக்கவும் தேவைப் படும் அலுமினியக் குழாய்களையும் நடமாடும் சோதனை சாலைகளையும் ‘அழித்தொழிப்பு ஆயுதங்களுக்கான’ ஆதாரங்கள் என்று இந்த ஏடுகள் காட்டின.
இப்பொழுது சீனாவில் இந்த தோற்று நோயால் ஏற்படும் இறப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்குக் காரணம், சீன மக்கள், தங்களது அரசாங்கத்திடம் வைத்திருக்கும் நம்பிக்கைதான். அதனால்தான் அவர்கள், அரசாங்கம் அறிவிக்கும் அத்தனை அறிவிப்புகளையும் ஏற்று நடக்கிறார்கள். மாஸ்க் அணிவது, வீட்டிற்குள்ளேயே இருப்பது, தொற்று நோய் இருப்பவர்கள் என்று சந்தேகப்படும் நபருடன் தொடர்பு ஏற்பட்டால் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்வது, அது குறித்து தகவல்கள் தருவது, சுகாதாரநிலையங்களுக்கு செல்வது என எல்லா நடவடிக்கைகளையும் அவர்கள் செய்கிறார்கள்.
உலக சுகாதார செயல் இயக்குனரும் இயக்குனர் தலைவரும் தொற்று நோய்க்கு எதிராக இந்த அளவு பெரிய நடவடிக்கைகளும் கடப்பாடும் பார்த்ததில்லை என்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் வெளிப்படை யான தன்மைக்கும் பெரிய பாராட்டு தெரிவிக்க வேண்டு மென்கிறார்கள். ஆனால் மேலை நாட்டினர் எறியும் இன வாதத்தில் தோய்ந்தெடுத்த குற்றக் கணைகள் பழைய பனிப் போரின் தொடர்ச்சியாகவும் புதிய பனிப்போரின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றன. போரில் முதலில் பலியாவது உண்மைதான். அது பனிப்போராக இருந்தாலும் வெம்மைப் போராக இருந்தாலும்!
பிப்ரவரி 03-09 தேதியிட்ட ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில்
பிரபீர் புர்காயஸ்தா அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக