புதன், 12 பிப்ரவரி, 2020

எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.
“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதை ஒட்டி திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாந்த் கிஷோர் திமுகவை வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான வியூகப் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
ஸ்டாலினுடன் பிகே நடத்தியிருக்கும் முதல் கட்ட உரையாடலில், ‘தமிழ்நாட்டில் திமுகவுக்கு இப்போது சாதகமான அம்சங்களே இருக்கின்றன. ஆனால் கட்சி அளவில் சில வேலைகளை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் தலைவரான உங்களையே முன்னிலைப்படுத்தும் போக்கு இருப்பதாக நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தலைவர் போக வேண்டிய இடத்துக்குதான் தலைவர் போக வேண்டும். திமுகவில் ஒரு காலத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாம் கட்டத் தலைவர்களே அந்த மாவட்டத்தின் முதல் கட்டத் தலைவர் மாதிரி இருப்பார். அப்படிப்பட்டவர்களை ஊக்குவிக்க வேண்டும். இரண்டாம் கட்டத் தலைவர்களிடம்தான் மற்ற நிர்வாகிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். அதனால் நிர்வாகிகளின் மன ஓட்டத்தைப்பெற முடியும். எனவே இரண்டாம் கட்டத் தலைவர்களை மீண்டும் அந்தந்தப் பகுதிகளில் முன்னிலைப்படுத்த வேண்டியது தேவையாகிறது’என்று குறிப்பிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். இதன் எதிரொலியாகவோ என்னவோ சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி முதல்வர் எடப்பாடி கூறிய கருத்துகளுக்கு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விரிவான அறிக்கை கொடுத்தார். வழக்கமான அணுகுமுறையாக இருந்தால் உடனடியாக ஸ்டாலினே விளக்கம் கொடுத்திருப்பார். பிகேவின் அட்வைஸே, ‘எடப்பாடிக்கு நீங்கள் பதில் அளிக்காதீர்கள்’என்பதுதான்.
அடுத்து அவர் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விஷயம் உதயநிதி பற்றியதுதான். உதயநிதி ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இருந்து முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின் அனைத்து மாவட்ட அமைப்புகளிலும் உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி என்று சொல்லி உதயநிதிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் திமுக இளைஞரணியில் இருந்து திமுகவில் இரண்டு மாசெக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி, இப்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முதலில் 1989 இல் நின்று வென்றார் ஸ்டாலின். அதன் பின் 96, 2001, 2006 என்று தொடர்ந்து வென்றார். 2011 இல் கொளத்தூருக்கு மாறிவிட்டார். 2011 இல் ஆயிரம் விளக்கில் திமுக சார்பில் ஹசன் முகமது ஜின்னா நின்றார். அவரை 7,592 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் வளர்மதி. ஆனால் கடந்த 2016 தேர்தலில் திமுகவின் கு.க. செல்வம் ஆயிரம் விளக்கைக் கைப்பற்றினார். இந்தப் பின்னணியில் திமுகவுக்கு மிகவும் பாதுகாப்பான ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினிடம், ‘இந்தத் தேர்தலில் உதயநிதி நிற்க வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள். உதயநிதியை பிரசாரத்துக்குப் பயன்படுத்துங்கள்’என்று யோசனை சொல்லியிருக்கிறார். பிகேவின் இந்த அட்வைசால் உதயநிதியை தேர்தலில் போட்டியிட வைக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.
மேலும்...பாஜக தேர்தல் ரீதியாக மட்டுமல்ல மற்ற எல்லா வகைகளிலும் திமுகவை தோற்கடிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றிபெற்றுவிட்டாலும் ஸ்டாலினை முதல்வர் பதவி ஏற்கவிடாமல் இருக்க என்ன செய்யலாம் என்ற அளவுக்கு பாஜகவின் அமித் ஷா திட்டமிட்டு வருகிறார். எனவே பாஜகவிடம் எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பிகேவின் மூன்றாவது முக்கியமான மெசேஜ். இதற்கு வலுவூட்டும் வகையில் அண்மையில் சென்னை சாலிகிராமத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக பொறுப்பாளரான முரளிதர் ராவ், ‘தமிழகத்தில் பாஜக இருக்கும் வரை ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் வாக்குகள் அடிப்படையில் திமுகவுக்கு பாஜக தடையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஸ்டாலினைப் பொறுத்தவரை பாஜகவுக்கு ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கிறது என்பதுதான் பிகே ஸ்டாலினுக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக