செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அம்பேத்கரை படித்தவுடன் பாரதியர்களின் முகமூடி....பாலச்சந்தர்களின் குறுகிய ..... ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : 'பெண்களின் குரல்' மாத இதழ் தொடரின் ஜனவரி மாத
கட்டுரை.
அப்பொழுது எனக்கு சரியாக 7 வயது இருக்கும்.தமிழார்வம் அதிகம் என்பதினால் அந்த வயதிலேயே தமிழ் நன்கு படிக்க வரும் .அம்மா அதிகம் புத்தகங்கள் படிப்பார்கள் .நல்ல வாசகி .அம்மா அப்பொழுது தமிழில் பிரபலமான பல எழுத்தாளர்களை படித்தாலும் அவருக்கு அதிக பரிச்சயம் சிவசங்கரியும் இந்துமதியும் .அம்மா படித்து போட்ட புத்தகங்களை நேரம் கிடைக்கும்போது விளையாட்டாக எடுத்து படிப்பது எனது வாடிக்கை ."எனக்கு ஒரு துப்பாக்கி கிடைத்தால் எல்லா ஆண்களையும் நிற்க வைத்து சுடுவேன்" என்று துவங்கிய சிவசங்கரியின் வரிகள் தான் எனக்கு பெண் எழுத்தின் முதல் அறிமுகம் .பின்பு சிவசங்கரியின் கதைகளில் பெண்கள் படும் பாடுகளை படித்து "சரி பெண்கள் என்றாலே இது தான் விதி போல " என்று நினைத்துக்கொள்ளலானேன் .
பின்புதான் என் ஒன்பதாவது வயதில் சசி அக்காவின் கைகளை பிடித்து கொண்டு தெருவில் கதைபேசி நடந்து கொண்டிருந்தபோது சசி அக்கா சொன்னாள் "ஆண்களிடம் பெண்கள் அடிமையாக இருக்க கூடாது ,ஆண் அடித்தால் பெண் திருப்பி அடிக்க வேண்டும் ". அப்படியே இன்னும் கொஞ்சம் பாரதியார் பெண்ணுரிமை கவிதைகளை காதுக்குள் ஓதிவைத்தாள்.

அப்பொழுது சசி அக்கா வெறும் பத்தாம் க்ளாசில் தான் இருந்தால் .எனக்கு தெரிந்த முதல் பெண்ணியவாதி அந்த 15 வயது சசி அக்கா தான் .அக்காளின் கைகளை விட்டுவிட்டாலும் அவள் பரப்பி சென்ற கொள்கைகள் நெஞ்சில் தீப்போல் பற்றியது .பாரதியார் பாட்டுக்கேட்கும் போதெல்லாம் மயிர்கூச்செரியும் ."பெண்ணியம் என்றால் பாரதியார் ".மனதிற்குள் போட்டுக்கொண்டேன் .பெண்ணியம் என்றால் பெண் கல்வி ,வேலைக்கு செல்லுவது ,நெஞ்சை நிமிர்த்தி நடப்பது .பாலப்பாடம் .
பின்பு வழக்கமாக அம்மாவின் ரசனைகள் வழி போகலானேன் .அதன் விளைவுதான் கே பாலச்சந்தர் .பாலச்சந்தரின் படங்கள் முரண்களை பேசியவை ,உறவுகளுக்குள் முற்போக்கை பேசியவை .பாலச்சந்தரின் ஹீரோயின்கள் முற்போக்கு முரணும் கலந்த சரியான கலவைகள் .பாலச்சந்தரின் ஹீரோயின்கள் கண்களை விரித்து உரையாடுவார்கள் , கூரான வாளைக்கொண்டு எதிரியின் நெஞ்சை சரக்... சரக்...என்று கிழிப்பதுபோல் பேசுவார்கள் ,பச்சாதாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் ,இழப்புகளை வலியோடு ஆனால் இயல்பாய் கடப்பார்கள் ,வேலைக்கு செல்லுவார்கள் ,ஆண்களிடம் வழிய மாட்டார்கள் ,மாடர்னாக உடை அணிந்து கொள்ளுவார்கள் ,உறவுகளே தப்பு செய்தலும் தட்டி கேட்பார்கள் .இத்தனை முற்போக்கு கதாபாத்திரங்களை பாலச்சந்தர் இயக்கினார் என்று சொல்வதைவிட ஒருவேளை அத்தனை பெண்களை போலவும் பாலச்சந்தரே நடித்தாரோ என்று கூட தோன்றும் .
ஆக வளரிளம் பருவத்தில் பெண்ணியம் என்றால் அது எனக்கு பாலச்சந்தர் தான். அதிலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலச்சந்தர் படங்களில் எல்லாம் பாரதியார் இருப்பார் .நல்ல காம்பினேஷன் அது.இது பெண்ணியத்தின் டபுள் டோஸ் ."கண்களை விரித்து பேச வேண்டும் ,பட பட என்று பேச வேண்டும் ,வந்த சண்டையை விட கூடாது .தப்பை எதிர்த்து கேள்விகேட்க வேண்டும்" .இதுதான் பெண்ணியம்.மனதிற்குள் ஏற்றிக்கொண்டேன்.
காலம் மாறியது காட்சியும் மாறியது .கல்லூரி காலம் முழுவதும் ஆண்களின் கவனத்தை பெற வேண்டும் ,ஆண்களின் ஆண்களுக்கு அழகாய் தெரியவேண்டும் என்கின்ற ஹார்மோன் தூண்டுதலின் பெயரில் இந்த பெண்ணியம் என்கின்ற சப்ஜெக்ட்டையே தூக்கி பரணையில் போட்டாயிற்று .இன கவர்ச்சியை எல்லாம் காதல் என்று தவறாக சித்தரித்தது தமிழ் சினிமா .நானும் சினிமா வழியே பெண்ணியத்தை தொலைத்தேன் . இதே காலகட்டத்தில் கல்லூரியில் பெரியார் அறிமுகமாகி இருந்தார் ஆனால் பெரியாரை முழுதாக படித்தும் கூட மனம் போனதெல்லாம் வைரமுத்து பக்கம் தான் .
"காதலித்து பார் ..பெரியார் தேவைப்படாது ,பெண்ணியம் கசக்கும் ,மணாளனே மங்கையின் பாக்கியம் ஆவான் "
அடுத்த கட்டமாக வேலைக்கு சென்றதும் கையில் பணம் .புதிதாய் சம்பாரிப்பவர்களுக்கு சமரசமே வாழ்வாய் இருக்கும்.எனக்கும் இருந்தது .
பெண்கள் குறித்தான இரட்டை அர்த்த ஜோக்குகளுக்கு சிரித்து வைத்தாயிற்று.தீபாவளி ,ஆயுத பூஜை என்று சுபநாட்களில் சீவி சிங்காரித்து அலுவலகம் வந்து கோலம் போட்டு ஆண்கள் முன் சிறந்த அடிமைகளாய் காட்டி கொண்டாயிற்று .ஒரே பதவி ஆனால் ஆண் என்பதால் சம்பளம் அதிகம் என்கிற விஷயத்தை கண்டும் காணாமல் போனது ,தோற்ற கேளிகளுக்கு பயந்து அழுது ,பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்லாமல் மனதிற்குள் சுருண்டு பெண்ணியம் பழகாத மாடர்ன் அடிமையாய் மாறி போய் நின்றுருந்தேன் .சுயம் தொலைத்திருந்தேன் .
நல்ல வேலையும் ,வசதியும் நண்பர்களும் போதும் வாழ்வு செம்மையாக போய் கொண்டிருக்கிறது என்று நினைத்த வேளையில்தான் சுனாமி ஒன்று தாக்க,தூக்கி சுருட்டி அடித்தது வாழ்க்கை என்னை .குற்றம் செய்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களுக்கே தண்டனை தரும் சமூகம் இந்தியாவில்.புறக்கணிக்கப்பட்டேன் ,விலக்கிவைக்க பட்டேன்.நொறுங்கினேன் .
நிலைகுலைந்து தரையில் விழுந்த முற்பட்டபொழுது எழுந்து நிற்க ஏதோ ஒன்று கையில் தென்பட ,நிமிர்ந்தபோது உணர்தேன் அது பெரியாரின் கைத்தடியேன.
பெரியாரோடு பயணம் செய்தேன் .உடல் அரசியலை பெரியார் சொல்லி தந்தார் .என் உடல் ,என் உரிமை ,என் அந்தரங்கம் அதில் யார் தலையிடும் இருக்க கூடாது என்று தெளிந்தது.
இந்த சமூகத்தின் பொய் முடிச்சுகளை அவிழ்த்தார் பெரியார் தன் பகுத்தறிவினால் .நீ ஏதுவாய் வேண்டுமானாலும் இரு ஆனால் அதை உன் விருப்பம்போல் இரு.உன் உடல்,உள்ளம் ,வாழ்வு சார்ந்த முடிவுகளை நீ எடுப்பதே பெண்ணியம் என்று பெரியார் சொன்னார் .நீ ஆணுக்கு எந்த விதத்திலேயும் கீழ் அல்ல ,நீ ஆணுக்கு சமம் .உன் புனிதநூல் போதிக்கும் ஆண் பெண் பாகுபாடு குப்பையை கொளுத்திப்போடு என்றார் .
கடவுள் இல்லை என்றார்.கடவுளே இல்லை அப்பொழுது மத புத்தகங்களும் வீண் என்றார் ,மத புத்தகம் நம்பகத்தன்மையற்றதென்றால் ஆண் பெண் பாகுபாடும் பொய் என்றார் .
பார்வை தெளிவு பெற்றது ,செவிட்டு காதுகள் கூர்மையாயின ,பேச்சு திறம்பட்டது .பெண்ணியம் மீட்கப்பட்டு பலம் பெற்றது .
சுயமரியாதை வாழ்வு துவங்கியது .கூடவே போராட்டமும்.
எதிர்த்து பேசும் பெண்களை யாருக்கும் பிடிக்கும்? சமூக கட்டுகளை உடைக்கும் பெண்களை யாருக்கு பிடிக்கும் ?உண்மையை உரக்க பேசும் பெண்களை யாருக்கு பிடிக்கும் ?ஆணை கண்டு வெட்கப்படாத,காலில் கோலம் போடாத பெண்ணை யாருக்கு பிடிக்கும் ? சண்டை துவங்கியது .
போடும் லிப்ஸ்டிக்கின் நிறத்தில் இருந்து அணியும் ஆடையின் நீளம் வரை ,குரலில் வலிமையை ,தைரியத்தை ,பகுத்தறிந்து பேசுதலை விமர்சிக்க ஆரம்பிக்கும் கூட்டம் ஒன்று.தினமும் ஒரு விமர்சனம் ,கேலி .தினமும் ஒரு கூட்டம் .அவர்களோடு தினமும் ஒரு போராட்டம் .ஆனாலும் மனம் தளரவில்லை .சண்டை செய்தேன் ."பெண்ணியம் என்றால் போராட்டம் " புரிந்து கொண்டேன் அனுபவத்தில்.
சிவசங்கரி சொன்னதுபோல் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி அல்ல .என் சண்டை ஆணாதிக்க சிந்தனையோடுதான் ,ஆண்களோடு இல்லை .எந்த ஒரு தனி ஆணும் எனக்கு பகையில்லை. ஆண்கள் இல்லா வாழ்வில் ருசி இல்லை .ஆனால் இதை இந்திய ஆண்கள் புரிந்துகொள்ளுவதே இல்லை .அவர்களை பொறுத்தவரை தேவையில்லா கலாச்சார குப்பைகளை மனதில் ஏற்றிக்கொண்டு தங்கள் வாழ்நாளில் உண்மையான மகிழ்ச்சியை கண்டடையாதவர்கள்.
அப்படி இல்லாத ஒரு ஆணை கண்டு ,பழகி ,காதலித்து ,இணையேற்பு செய்தேன் .பகுத்தறிவாளர்கள் ஒரே புள்ளியில் இணைந்தோம் .ஒரு நாள் விவாதித்து கொண்டே இருந்தபோது என்னை "நன்றிகெட்டவள் " என்றார் .திகைத்து போனேன் .
நீ பெண் ,இந்திய சமூக அமைப்பு உனக்கெதிரானது ஆனாலும் இந்த நாட்டில் உனக்கு கல்வி கற்க ,வேலைக்கு செல்ல ,சொத்தில் பங்கு கிடைக்க ,ஓட்டு போட என்று மதம் மறுத்த அனைத்திற்கும் இந்திய சட்டத்தின் படி உரிமை இருக்கிறதே அதை யார் உனக்கு பெற்று தந்தது என்று கேட்டார் .
அட ஆமாம் ....இவ்வளவு நாள் பழம் நழுவி பாலில் விழுந்ததே என்று தானே நினைத்து வந்தேன்.எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை எனக்கு யார் பெற்று தந்தது ? இந்த இந்திய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்க யார் காரணம் ? எனக்கு சொத்துரிமை ,ஓட்டுரிமை ,மகப்பேறு விடுப்பு ,மறுமண உரிமை என்று எல்லாவற்றையும் வகுத்து கொடுத்தது யார் ?
ஒரே பதில் -அம்பேத்கர் .
ஆம் நான் எந்த பாதையில் பெரியாரோடு நடந்து கொண்டிருந்தேனோ அந்த பாதையை போட்டு கொடுத்ததே பாபாசாகேப் அம்பேத்கர் தான் . பெண்களின் தனிமனித வாழ்வின் உரிமைகளை அவர்களின் சமூக நிலை தான் தீர்மானித்திறது என்று மிக துல்லியமாக கணித்து பெண்களின் சமூக விடுதலைக்காக பாடுபட்டவர் அம்பேத்கர் .இந்த நாட்டின் வளர்ச்சியை அதன் பெண்களின் வளர்ச்சியை வைத்துதான் தீர்மானிக்க முடியும் என்றவர் அவர்.பெண்களுக்கான சமூக ,அரசியல் மற்றும் பொருளாதாரா சமத்துவத்தை மனதில் வைத்து அதற்கான சட்டங்களை வகுத்தவர் ."பெண்ணியம் என்றால் சமூக மாற்றம் " என்று சொன்னார் அம்பேத்கர் .
அம்பேத்கரை படித்தவுடன் பாரதியர்களின் முகமூடி கிழிந்தது ,பாலச்சந்தர்களின் குறுகிய பார்வையும் புரிந்தது.
இங்கே பெண்ணியம் என்பது பல பரிமாணங்களில் பேச வேண்டியது .தனி மனித சுதந்திரம் ,ஜாதி ஒழிப்பு ,அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்துதல் ,பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ,வன்கொடுமை தடுப்பு ,பெண் தலைமை ,உடலரசியல் ,பெண்ணிய வர்க்க பார்வை என்று பறந்து விரிந்து கிடக்கிறது பெண்ணியம் .இதில் வேறு ஐநா சபை பெண்கள் உரிமைகள் என்று பட்டியலிட்டிருக்கும் விஷயங்களை இந்தியா கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்தியா .
இங்கே பெண்ணியம் அதிகம் பேச வேண்டும் ,இன்னும் பலமாக பேச வேண்டும் .
பேசுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக