திங்கள், 24 பிப்ரவரி, 2020

எழுவர் விடுதலையும் வரலாறும் ... .. சமுகவலையில் ....

LR Jagadheesan : சாவித்திரி கண்ணன் சோனியாகாந்தியே பரிந்துரைத்து கலைஞர் நளினியின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்ததை எதிர்த்து ஜெயலலிதா “தேசவிரோத கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை கலைக்க” கோரிக்கை வைத்ததையும் சோனியா “பதி பக்தியற்றவர்” என மேடைக்கு மேடை முழங்கியதையும் இதில் சேர்த்திருக்கலாம். அப்பேர்கொத்தவர் தான் எழுவர் விடுதலையை ஆதரிப்பதாக நாடகமாடினார். அதற்கே அவரை “ஈழத்தாய்” என்று விதந்தோதினார்கள் தமிழ்நாட்டின் தமிழ்தேசியர்கள். ஈழத்தமிழர் விவகாரத்தை வெறும் திமுகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தியவர்கள் இரண்டுபேர். முதலில் எம்ஜிஆர் பிறகு ஜெயலலிதா. அதனால் அரசியலில் அதிகம் பலன் அடைந்தவர்களும் அவர்களே. முடிந்தவரை நன்மை செய்தது கலைஞரும் திமுகவும் திகவும். ஆனால் புலிகள் தமிழ்நாட்டில் செய்த பத்மநாபா படுகொலை தொடங்கி ராஜீவ் கொலை வரையிலான எல்லா கேடுகளின் மொத்த பாதிப்பும் அவர்கள் தலையில் தான் விடிந்தது. இப்போதும் கூட எடப்பாடிக்கு பதில் கலைஞரோ ஸ்டாலினோ முதல்வராக இருந்து இந்த எழுவர் விடுதலை இப்படி இழுபட்டுக்கொண்டிருந்தால் இந்த தமிழ்தேசியர்கள் இப்படித்தான் அமைதியாக இருந்திருப்பார்களா? நெஞ்சத்த்தொட்டு சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அரசியலையே கலக்கி யிருப்பார்களே? அப்படி எந்த கொந்தளிப்பும் இல்லாமல் திடீர் வள்ளளார்களாக இவர்கள் இப்போது வலம் வருவது எதனால்? உண்மைக்காரணம் உனக்கும் தெரியும் கண்ணன். நீ வெளியில் சொல்லமாட்டாய்.  

சாவித்திரி கண்ணன் : ;தமிழர்களுக்கும்,இந்திய தேசியத்திற்குமான இட்டு நிரப்பமுடியாத இடைவெளியைத் தான் உணர்த்துகிறது இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த முப்பதேழு ஆண்டுகளாக இங்கு குடியுரிமை மறுக்கப்படும் விவகாரமும், எழுவர் விடுதலை மறுப்பும்!துரதிர்ஷ்டவசமாக இந்த விவகாரம் இன்று திராவிட இயக்கங்களும்,தமிழ் தேசிய இயக்கங்களும் மட்டுமே குரல் கொடுக்கும் விவகாரமாக சுருங்கிப் போனது!


அடிப்படையில் நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனுமல்ல,தமிழ் தேசிய ஆதரவாளனுமல்ல! ஆனால்,இந்த இயக்கங்களில் அளப்பரிய நண்பர்கள் உண்டு! என்னுடைய 14 வயது தொடங்கி,காந்தியமும்,பொதுவுடமைத் தத்துவமும் என்னை ஈர்த்து, இன்றுவரை என்னை வழி நடத்திவருகின்றன!
என்னுடைய 18 வயது தொடங்கி,இலங்கை பிரச்சினைகளை அவதானித்து வருகிறேன்! 1980 களிலேயே ஒரு ’போட்டோ ஜர்னலிஸ்ட்’ என்ற வகையில் பல இலங்கைத் தமிழ்போராளி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தேன்.ஆனால், எல்.டி.டி இயக்கத்தின் நிறைய நண்பர்களோடு பழகினாலும் அவர்களின் ஆதரவாளனாக ஒரு போதும் இருந்ததில்லை!
ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட சிலரோடு அவர்கள் சிறைக்கு செல்வதற்கு முன்பே நெருங்கி பழகியவன்! அந்த வகையில் ஆரம்ப காலத்தில் - யாருமே அவர்களை சிறை சென்று சந்திக்க அச்சப்பட்ட காலத்திலேயே - அடிக்கடி சென்று சந்தித்தவன்! இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளான சி.பி.ஐ.யின் ரகோத்தமன், சிவாஜி உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பும் கொண்டிருந்தேன்!
இப்போதும் காங்கிரஸ் இயக்கத்தில் எனக்கு நெருக்கமான நண்பர்கள் உண்டு! எனவே, இதில் ஒரு பாரபட்சமற்ற பார்வையை,அணுகுமுறையை என்னால் வெளிப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
இலங்கை அகதிகள் விவகாரத்தில்,அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதன் மூலம் இங்கே இந்திய தேசியத்திற்கு எதிரான, தனித் தமிழ்நாடு கோரிக்கை வலுப்பெற்றுவிடுமோ என்ற அச்சம் அவசியமற்றது மட்டுமல்ல,முட்டாள்தனமானது என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்!
திபெத் அகதிகள் விஷயத்தில் குடியுரிமை தந்து வெளிப்படுத்திய அணுகுமுறையை,இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் வெளிப்படுத்த முடியாதது, இந்திய ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் மேலாதிக்க வர்க்கம் இலங்கை அகதிகள் விவகாரத்தை, திராவிட இயக்கம் மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள் சார்ந்த அவர்களுக்கேயுள்ள ஒவ்வாமைப் பார்வையுடன் அணுகுவதேயாகும்!
இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி,வாதாடி இலங்கைத் தமிழ் அகதிகள் மீதான நம்பிக்கையை,கரிசனத்தை இந்திய மேலாதிக்க வர்க்கத்திற்கு உணர்த்தும் திறன் பெற்றவர்களாக அல்லது ’கமிட்மெண்ட்’ உள்ளவர்களாக நமது இரு திராவிட இயக்க ஆட்சியாளர்களும் கடந்த காலங்களில் செயல்படவில்லை என்பதும் இந்த அநீதி தொடர்வதற்கு காரணமாகும்!
ராஜிவ் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவகாரத்திலும் இந்திய மேலாதிக்கவர்க்கத்தின் பார்வை மிகவும் பழுதானதேயாகும்!
ஏனெனில்,தற்போது சிறையில் உள்ள சம்பந்தப்பட்ட ஏழு பேர் மட்டுமல்ல, கைது செய்யப்பட்ட அனைவருமே ராஜிவ் கொலையில் நேரடி தொடர்பு இல்லாதவர்கள் என்பதை அதிகாரவர்க்கம் நன்றாகவே அறியும்!
தனு,சிவராஜன் ஆகியோரை உயிருடன் பிடிக்க முடியவில்லை.மற்றும் அவர்களை ஏவியவர்களை இன்று வரை சரியாக அம்பலப்படுத்தவும் முடியவில்லை. ஆகவே, இது போன்ற சம்பவங்கள் இனி இங்கு நடக்க யாரும் ஆதரவளிக்க கூடாது என்பதே மொத்த விசாரணை மற்றும் தீர்ப்பின் நோக்கங்கள்! இதை தலைமை அதிகாரியாயிருந்த கார்த்திகேயன் தனிப்பட்ட முறையிலான ஒரு உரையாடலில் 22 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் கூறினார்!
ஒரு பத்திரிகையாளன் என்பதால், இந்திய மேலாதிக்க வர்க்கத்துடன் அடிக்கடி அளவளாவும் வாய்ப்பு பெற்ற வகையில், அவர்களின் ஆழ்மனதில் இந்த எழுவரின் விடுதலை தமிழ் தேசிய மற்றும் திராவிட இயக்க அரசியலுக்கு இங்கு பால்வார்க்ககூடிய வாய்ப்பை உருவாக்கித்தருவதாக அமைந்துவிடும் என்று நம்புவதாக நான் உணர்கிறேன்.
இந்த அச்சம் களநிலவரத்தை கணிக்கத் தெரியாத அவர்களது பத்தாம்பசலித்தனமான நம்பிக்கை சார்ந்தது! இதனால்,தமிழகத்திடமிருந்து இந்திய தேசியமே அந்நியப்படும் நிலைமை தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதைக் கூட உணர மறுப்பவர்களாக உள்ளனர் என்பது தான் உள்ளபடியே கவலையளிக்கிறது!
ஏனெனில், இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்திய திமுக தலைமை கூட போகப் போக இந்த கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை உணர்ந்து ஆதரவு தரமுன்வந்தது! எனவே,திமுக அந்த ஆதரவை அறுவடை செய்து கொள்வதை தடுக்கவே, அதிமுக இதில் தானும் எழுவர் விடுதலைக்கு குரல் கொடுத்தது.
கருணாநிதியை இந்திய மேலாதிக்க வர்க்கம் எப்போதும் ஒருவித அச்சத்துடனே அணுகி வந்தது என்பதால்,அவரால், இதில் நம்பிக்கை கொடுக்க முடியவில்லை. ஆனால் அதே சமயம் இந்திய மேலாதிக்க வர்க்கத்தின் பரிபூரண நம்பிக்கை பெற்றவராயிருந்த ஜெயலலிதா மட்டும் இதில் சற்றே ஆத்மார்த்தமாக ஈடுபாடு காட்டியிருந்தால், இந்த எழுவர் விடுதலை என்றோ சாத்தியமாயிருக்கும்.
ஆனால்,இந்த விவகாரத்தை பொறுத்தவரை, கருணாநிதியை வீழ்த்துவதற்கான ஒரு கேம்பிளிங்காகவே அவர் அணுகினார் – இதற்கு சில தமிழ் தேசிய இயக்கங்களும் துணைபோயின!
இந்திய மேலாதிக்க வர்க்கத்தின் அதே சிந்தனை போக்கே ஜெயலலிதாவிடமும் இருந்தது. அவர்களுடன் பேசி இணக்கத்தை,இசைவை உருவாக்காமல் இந்த சட்டமன்ற தீர்மானம் செல்லுபடியாகது என்பது நன்கு தெரிந்தும், அவர் அதற்கு ஒரு சிறிதும் முயற்சிக்கவில்லை!
எந்த முயற்சியும் எடுக்காமலே அவருக்கு தமிழ் தேசிய இயக்கங்கள் புகழாரம் பாடவும்,பூமாலை சூடவும் போட்டிபோடும் போது ஏன் அனாவசியமாக செய்யவேண்டும் என ஜெயலலிதா சும்மா இருந்துவிட்டார்!
அவர் மறைவுக்குப் பிறகும், தற்போது மத்திய அரசுக்கு மிக இணக்கமாக,இந்திய மேலாதிக்கவர்கத்தின் நம்பிக்கையை தங்களது விசுவாசத்தின் மூலமாக நிருபித்துவரும் தற்போதைய ஆட்சியாளர்களும் முயற்சிக்கவில்லை!
ஏன்? கவர்னர் என்ன வானுலகத்திலா இருக்கிறார்? நேரடியாக சென்று என்ன பிரச்சினை? ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டு அவர் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, இந்த விடுதலையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை,சட்டம் ஒழுங்கிற்கும் பாதிப்பிருக்காது என்று வலியுறுத்தி அவரது நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சிக்கலாமே....!
சோனியாவும், ராகுலுமே இவர்களை மன்னித்துவிட்டதால், எங்களுக்கும் ஆட்சேபனை இல்லை என சமீபத்தில் சட்டமன்றத்தில் காங்கிரசின் விஜயதாரணி சொல்லும் அளவுக்கு அவர்கள் நிலைபாட்டிலிலும் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை பார்க்கமுடிகிறது!
ஒரு வகையில் இந்திய மேலாதிக்கவர்க்கமானது, இஸ்லாமியர்கள்,திராவிட இயக்கத்தினர்,தமிழ் தேசியவாதிகள் அனைவரையும் ஒரே தட்டிலே வைத்து - மாற்றமுடியாத அளவுக்கு - ஆழமான அவநம்பிக்கை கொண்டுள்ளது என்பதே எனது கணிப்பு!
இது அவர்கள் கட்டமைத்து காப்பாற்ற விரும்பும் இந்திய தேசியத்திற்கே ஆபத்தாகத்தான் முடியும்!
இன்றைக்கு,தமிழகத்தில் ஒரு வாக்கெடுப்பு இது தொடர்பாக நடத்தினால், இலங்கை அகதிகளின் பல்லாண்டு கால காத்திருப்புடன் கூடிய அவலத்தையும், எழுவரின் நீண்ட நெடிய சிறைவாசத்தையும் கருத்தில் கொண்டு, சந்தேகமில்லாமல் 80 சதவிகித தமிழகமக்கள் இந்த இரு விவகாரத்திலும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் தந்தே வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக