ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

சங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்துத்வா பிரசாரகர் ரஜினி

சாவித்திரி கண்ணன் : எல்லோரும் நினைப்பது
போல பாஜகவும்,இந்துத்துவ
சக்திகளும் ரஜினியை பின்னிருந்து இயக்குவது என்பது ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையப்படுத்தி மட்டுமல்ல!
உண்மையில் ரஜினி அரசியல் மைய நீரோட்டத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட மறைமுக இந்துத்துவ ஆதரவாளராக இருபதாண்டுகளுக்கும் மேலாக களத்தில் இயங்கி கொண்டு தான் உள்ளார்!
அவரது பாபா படமே பகிரங்கமாக இந்துத்துவ அரசியலை ஆதரித்து எடுக்கப்பட்ட படம் தான்!
அதுவும் எந்த காலகட்டத்தில் அந்தப் படம் வந்தது என்பதும் கவனத்திற்குரியது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு ஆண்டு கொண்டிந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது....!
தீடிரென்று ஒரு நாள் ரஜினி கலைஞரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். எதற்காக அவர் கலைஞரை சந்தித்தார் என்று பத்திரிகையாளர்கள் பலவாறாக யூகித்தும் சரியான விடை கிடைக்கவில்லை.
ஆனால்,ஒருசில நாட்களில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞரே அதனைச் சொன்னார்.

அயோத்தி விவகாரத்தில் அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டிருந்தார்! ’’சங்கராச்சாரியாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என வேண்டுகோள் வைத்தே ரஜினி தன்னை சந்தித்தார் என்றும் அந்தப்படியே நானும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்’’ என்றும் கலைஞர் சொன்னார்.
அன்று காஞ்சி ஜெயேந்திரர் அயோத்தி விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்த்தம் செய்வது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருந்த காலகட்டம் அது!
ஏனென்றால்,பாபர் மசூதி இடிக்கவும் அங்கு ராமர் கோயில் கட்டவும் செங்கலோடு புறப்பட்ட கரசேவகர்களை ஆசிர்வத்தித்து அனுப்பியவர் சங்கராச்சாரி என்பதால்,அவருக்கு மத்தியஸ்த்தம் செய்யும் யோக்கியதை கிடையாது என்ற வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் தான், பாஜாகவுடன் திமுக மத்திய ஆட்சியில் பங்கு கொண்டிந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சங்கராச்சாரிக்கு வாழ்த்து கேட்க கலைஞரை சந்தித்தார் ரஜினி!
இன்று, ’’இஸ்லாமியர்களுக்கு சி.ஏ.ஏ வால் பாதிப்பு ஏற்படுமென்றால்,அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பேன்’’ என்று சொல்லும் ரஜினிகாந்த் அவர்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது குரல் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்த நிகழ்வுக்கு சில நாட்கள் முன்பு குஜராத்தில் மூஸ்லீம்கள் நர வேட்டையாடிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியதையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்ததோடு,அயோத்தியில் முஸ்லீம்களை கட்டபஞ்சாயத்து செய்து பணிய வைக்க முயன்ற சங்கராச்சாரிக்காக அன்றே பாஜகவினரால் களத்தில் இறக்கப்பட்டார் என்பதையும் இணைத்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஆக,இன்று, நேற்றல்ல…., ரஜினியின் அரசியல் ஈடுபாடு என்பது ஆரம்பகாலத்திலிருந்தே இந்துத்துவ சக்திகளுடன் இணக்கத்தை பேணும் விதமாகத் தான் இருந்துள்ளது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக