சனி, 22 பிப்ரவரி, 2020

கொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்குகிறார்கள் ... வீடியோ



/tamil.news18.com : கொடைக்கானலில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் நள்ளிரவு கேளிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் உட்பட 260-க்கும் மேற்பட்டோரை போலீசார் சுற்றிவளைத்தனர். 5 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூவர் பிடிபட்டனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்து வரும் 26 வயதான ஹரீஸ்குமார், ராஜக்காப்பட்டியைச் சேர்ந்த 23 வயதான தருண்குமார் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு முகநூலில் ஒரு இடுகையை பதிவு செய்தனர்.
அதில், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான குண்டுபட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் 6ஆம் தேதி நள்ளிரவு மதுவுடன் கேளிக்கை விருந்து நடப்பதாக அதில் கூறியிருந்தனர்.

நள்ளிரவு கேளிக்கையில் பங்கேற்க ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் என்றும் அவர்கள் முகநூலில் விளம்பரம் செய்தனர்.

கடந்த ஆண்டும் இதேபோல கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதாகவும், அதற்கான புகைப்படங்களையும் முகநூலில் பகிர்ந்தனர்.

இதையடுத்து எங்கு, எப்போது கேளிக்கை விருந்து நடக்கும் பங்கேற்கலாம் என காத்திருந்த தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேர், ஹரீஸ்குமார், தருண்குமார் பதிவிட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி பதிவு செய்யத் தொடங்கினர். உள்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் 2 வெளிநாட்டவர்களும் இதில் முன்பதிவு செய்தனர்.அவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகளும், கைகளில் கட்டிக்கொள்ளும் வகையில் பேன்ட்களும் அனுப்பி வைக்கப்பட்டு, கேளிக்கை விருந்து நடைபெறும் இடத்தின் லொகேஷனையும் ஷேர் செய்திருந்தனர்.

கட்டணம் செலுத்திய வெளிநாட்டவர், உள்நாட்டவர் உள்ளிட்ட 260க்கும் மேற்பட்டோர், கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுப்பிய பேன்டை கையில் அணிந்தபடி குண்டுபட்டியில் குவிந்தனர்.

பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள்தான என்பதை உறுதி செய்த பின்னர் அவர்களை கேளிக்கை விருந்து நடைபெற இருந்த தனியார் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கேளிக்கைக்காக ஒலிப்பெருக்கிகள், டென்ட் கொட்டாய்கள், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.

நள்ளிரவு 12 மணிக்கு பலத்த சத்தத்துடன் கேளிக்கை விருந்து தொடங்கியது. மது அருந்திக்கொண்டே லைட்டிங், ஆடல் பாடலுடன் 260க்கும் மேற்பட்டவர்கள் கேளிக்கையில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி சட்டவிரோதமாக நள்ளிரவு கேளிக்கை விருந்தில் ஏராளமானோர் பங்கேற்ற தகவல் தென் மண்டல ஐ.ஜி.-க்கு கிடைத்தது.

இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் கார்த்திகேயன், ஆத்மநாதன் உள்ளிட்ட 3 டி.எஸ்.பி க்கள் கொண்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை 3 மணி அளவில் கேளிக்கை நிகழ்ச்சி நடந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

சுமார் 5 மணி நேரம் 260க்கும் மேற்பட்டவர்களிடம் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல் வரிசையாக அமர வைத்து தனித்தனியாக விசாரித்து, அவர்கள் முகவரியை போலீசார் பெற்றுக்கொண்டனர்.

அவர்களில் ஏராளமானவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் மென்பொறியாளர்கள் என்பது தெரிய வந்தது.

விசாரணைக்கு பிறகு, மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து கேளிக்கையில் பங்கேற்க வந்தவர்களை போலீஸார் விடுவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கேளிக்கையை முழுமையாக அனுபவிக்க முடியாத ஏமாற்றத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அனுமதியின்றி இரவு நேரத்தில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்த ஹரீஸ்குமார், தருண்குமார் ஆகியோரையும், கேளிக்கை நிகழ்ச்சிக்கு தோட்டத்தை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர் கே.ஜி. கற்பகமணியையும் கொடைக்கானல் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மேலும் கேளிக்கை நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த கஞ்சா பொட்டலங்கள், உயர்ரக மதுபாட்டில்கள், போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போதை வஸ்துக்களுடன் நள்ளிரவு கேளிக்கை விருந்து, குத்தாட்டம் என்று முகநூலில் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து பல்வேறு ஊர்களில் இருந்தும், இளைஞர்கள், இளம் பெண்கள, மாணவர்கள், பொறியாளர்கள் மலை கிராமத்தில் திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக