வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ரஜினிக்கு சலுகை சசிகலாவுக்கு தண்டனை ..: வருமான வரித் துறையின் " நேர்மை : "

ரஜினிக்கு உண்டு, சசிகலாவுக்கு கிடையாது: வருமான வரித் துறை!மின்னம்பலம் : ரஜினிக்கு அளித்தது போல சசிகலாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறைக்கு தவறான தகவல் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2005ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான ரஜினிகாந்தின் முறையீட்டை ஏற்று, அபராதத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் வாபஸ் பெற்றது.
“1 கோடிக்கும் குறைவான அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கைவிடும்படி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் 2019, செப்டம்பர் 8ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது” என அதற்கு வருமான வரித் துறை விளக்கம் அளித்தது.

இதே விதியை தன் மீதான வழக்குக்கும் பயன்படுத்தி, வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு வருமான வரித் துறை, சசிகலாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என பதிலளித்துள்ளது.
இந்த வழக்கு 1994-95ஆம் நிதியாண்டில் சசிகலா தாக்கல் செய்த வருமானம் சம்பந்தமானது. அப்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 80 ஏக்கர் நிலம் வாங்கியதை சசிகலா கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவுக்கு வருமான வரித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில், வருமான வரித் துறை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது.
2008ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்துவரும் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு கோடிக்கும் குறைவான தொகை என்பதால் வருமான வரித் துறையின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.செந்தில்குமார், “வசூலிக்க வேண்டிய தொகை 1 கோடிக்கு குறைவாக இருந்தாலும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முடிவு சசிகலாவுக்கு பொருந்தாது. வருவாய் தணிக்கை பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தாலோ அல்லது ஒரு வழக்கில் நடவடிக்கை தொடங்கிவிட்டாலோ அந்த வழக்கை கைவிட முடியாது. சசிகலாவுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இணைக்கப்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நிலை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தியதுடன், வழக்கின் விசாரணையையும் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக