வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

அதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் திமுக குழப்பி வருகிறது

மின்னம்பலம் : என்பிஆர், என் ஆர்சி : அதிமுக விளக்கம்! தமிழகத்தில் அதிமுக அரசுக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள ம் முடியாமல் இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் திமுக குழப்பி வருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. முதல்வர் சட்டமன்றத்தில், ‘குடியுரிமை சட்டத்தில் யார் பாதிக்கப்பட்டார்கள் ?” என்று ஆவேசமாக கேட்டது முதல் அதிமுக மீதும் இஸ்லாமியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இஸ்லாமிய சமூகத்தினர் குழப்பத்துக்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஹஜ் மானியமாக 5 கோடி ரூபாய், ரம்ஜான் கஞ்சிக்காக 5145 மெட்ரிக் டன் அரிசி, மாவட்ட ஹாஜிகளுக்கு 20 ஆயிரம் மதிப்பூதியம், உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட அதிமுக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள துணை முதல்வரும், முதல்வரும்,
“இஸ்லாமிய சமுதாயத்துடன் அதிமுகவுக்கு இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து எல்லாரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட இஸ்லாமிய சகோதர சகோதரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியதல்ல. சிறுபான்மை சமூகத்தினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறு எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், “ இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்றவரை இணக்கமாக இருந்து தமிழகத்துக்கான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அரசு செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்,.
தவிர, “2003 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த பாஜக கூட்டணி ஆட்சியில்தான் என்.பி.ஆர். , தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏதுவாக குடியுரிமை சட்டம் 1955 இன் கீழ் குடியுரிமை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளின் அடிப்படையில் 2010 திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் முதல்முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அங்கமாக தேசிய குடிமக்கள் பதிவேடு என்பிஆர் உருவாக்கப்பட்டது.
என்பிஆர் பதிவேட்டில் இந்தியாவில் ஆறு மாதமோ அதற்கு மேலோ வசிக்கிற அனைத்து நபர்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்களின்படி பதிவு செய்யப்படுகிறது.
தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த தேதி. பிறந்த இடம், ஆதார், கைபேசி எண்,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள் 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக