திங்கள், 10 பிப்ரவரி, 2020

திமுகவின் நடவடிக்கையில் பாரபட்சம்? எழுப்பும் உடன்பிறப்புகள்!

நக்கீரன் : உள்ளாட்சியில் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராத மாவட்ட செயலாளர்கள் மீது சாட்டையை சுழற்றி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் நடந்த செயற்குழு விவாதங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுகவில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆரோக்கியமானதுதான் என்கிற குரல்கள் உழைக்கும் தொண்டர்களிடம் எதிரொலிக்கும் நிலையில், ‘’ விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படுகிறது ‘’ என்கிற குரலும் அவர்களிடம் வெளிப்படுகிறது.
நம்மிடம் பேசிய தென்மாவட்ட உடன்பிறப்புகள், ‘’ தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் களை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், ஒரு கண்ணுக்கு மை; மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்கிற பாகுபாடுதான் ஜீரணிக்க முடியவில்லை. சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுத்தீர்கள். ஓ.கே.! ஆனால், தென்மாவட்டங்களில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? தென் மாவட்டங்களில் கட்சி தலைமை எதிர்பார்த்த 100 சதவீத வெற்றி திமுகவுக்கு கிடைத்து விட்டதா?


உதாரணத்திற்கு, கன்னியாகுமாரி மாவட்டத்தில் திமுக தோற்றதற்கு காரணம் சுரேஷ்ராஜன். இது, தலைமைக்குத் தெரியாதா ? ஏன், நடவடிக்கை இல்லை ? தூத்துக்குடியில் கயத்தாறு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளுக்கு வேட்பாளர்களையே நிறுத்தவில்லை கீதா ஜீவன். அங்கு தினகரனின் அ.ம.மு.க. ஜெயிக்கிறது. வேட்பாளர்களையே நிறுத்தாத இவர் மீது என்ன நடவடிக்கை ? இவர் நிறுத்தலையா ? அல்லது தினகரனுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்படுங்கள் என அறிவாலயத்தில் இருந்து யாரேனும் அறிவுறுத்தினார்களா ? இப்படி பல உதாரணங்களும் கேள்விகளும் இருக்கிறது. உண்மையாகவே களை எடுக்கப்பட வேண்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்கிற போதுதான் தலைமையின் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது‘’ என ஆதங்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக