செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்வி ஆகிய மூன்று முக்கிய .. ..

Shalin Maria Lawren : இன்று உலக வாக்குறுதிகளின் நாள் (global promise day)
இந்தியாவில் அதிகமாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு அவை
நிறைவேற்றப்படாத இடமாக அரசியல் இருக்கிறது. அரசியல் என்றாலே கொடுத்த வாக்குறுதிகளை நிவர்த்தி செய்யாத ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் என்றாலே பொய் வாக்குறுதிகள் என்று மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
இத்தகைய சூழலில்தான் 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 70 வாக்குறுதிகளை கொடுத்து இருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதில் 30 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளதாகவும், 60 சதவிகிதம் வேலைகள் நடந்து வருவதாகவும், 10 சதவிகிதம் எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்தியா நடத்திய ஆய்வு கூறுகிறது.
தில்லியில் காங்கிரஸ் கட்சி செய்த சேதாரம் மிக பெரியதாக இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் கேஜ்ரிவால் முதல்முறை இராஜினாமா செய்துவிட்டு சென்ற போதும் அதற்கு அடுத்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
அப்பொழுது அவர்கள் மூன்றே மூன்று விஷயத்தை திரும்பத் திரும்ப கூறினார்கள்
"நாங்கள் உங்களுக்கு தண்ணீர் கொடுப்போம், உங்கள் மின்சாரத்தை பாதுகாப்போம் மற்றும் கட்டணங்களை குறைப்போம், உங்கள் கல்வி தரத்தை உயர்த்துவோம்".

ஆம் ஆத்மி கட்சி இந்த ஆண்டும் மீண்டும் நல்ல பலத்தோடு ஆட்சிக்கு வருகிறது என்றால் இந்த மூன்று தான் முக்கிய காரணம்.
தண்ணீர்
மின்சாரம்
கல்வி
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரிய சமூக நீதி புரட்சி சிந்தனை கருத்துக்களை எல்லாம் பேசி விடவில்லை. சமூக நீதியை பற்றி அவர்களுடைய ஞானமும் வெகு ஆழமாக இல்லை. ஆனால் சமத்துவம், வளங்களை சமமாக மற்றவர்களுக்கு அடையச் செய்தல் மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வது இவர்களின் ஆன்ம கருத்தியலாக இருந்தது.
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் ஓட்டுப்போடும் ஒரு நபருக்கு தன் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளே அவனை தீர்மானிக்க செய்யும் ஒரு கருவியாக இருக்கும். அந்த பிரச்சினைகளையே குறி வைத்தது ஆம் ஆத்மி கட்சி.
முதலில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். டெல்லியைப் பொறுத்தவரை 200 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்தினால் கட்டணம் இல்லை மற்றும் நான் ஒரு யூனிட்டுக்கு கீழே பயன்படுத்தினால் வெறும் 50 சதவிகித கட்டணம் தான். மேலும் மின்சார துண்டிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ஆம் ஆத்மி கட்சி மின்சார வழங்கும் கட்டமைப்புகளை புதிதாக செழுமைப்படுத்தியது மற்றும் பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தியது.
தண்ணீரும் அவ்வாறு பல தசாப்தங்களாக இருந்த தண்ணீர் பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி தீர்த்து வைத்தது. வீடுகள் தேடி தண்ணீர் வந்தது. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களை தேடி கண்ணீர் வந்தது. காலனிகளை தேடி தண்ணீர் வந்தது. மக்கள் தண்ணீரை தேடி எங்கேயும் செல்லவில்லை. பல புதிய ஆறு ஏரி இணைப்புகள் டெல்லி மாநகருக்குள் வந்தது.

மூன்றாவது மிக முக்கியமான விஷயம் கல்வி. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கல்வித்துறையில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தெரிந்து இருந்தது. கல்வித்துறையில் என்ன பிரச்சினை அதை எவ்வாறு சீர்செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஒரு மாஸ்டர் பிளான் ரெடி செய்து வைத்திருந்தார்கள். அதில் குறிப்பாக டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் ஆத்திஷி மார்லேனா அவர்களின் பங்கு வரலாற்றில் பதிக்க வேண்டியது.
ஆம் ஆத்மி கட்சி 2015 இல் ஆட்சிக்கு வரும் பொழுது டெல்லியின் அரசுப் பள்ளிகளின் நிலைமை மிக மிக மோசமாக இருந்தது. அப்பொழுது துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விடம் கல்வித்துறை வழங்கப்பட்டது. ஆத்திஷி அவரின் முக்கிய ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார். அன்றிலிருந்து டெல்லி பள்ளிக்கூடங்கள் உயிர் பெற்றன. பள்ளிகளின் கட்டமைப்பை முதலில் மாற்றினார்கள். வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்தார்கள். அதற்காக அதே பள்ளியில் அதிகமான வகுப்பறையை எழுப்பினார்கள். மற்றும் ஆசிரியர்கள் வருகையை அதிகரித்தார்கள். கூடவே ஆசிரியர்களின் அறிவுத்திறனையும்.
ஆசிரியர்களுக்கு பெயர் போன கல்வியாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது. எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் கற்றலை எப்படி மாணவர்களின் திறனுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றினார்கள். ஸ்மார்ட் போர்டு ,காணொளி மூலம் பாடங்கள்,அதிநவீன ஆய்வகங்கள் என்று கல்வித்தரத்தை உயர்த்தினார்கள். பள்ளிக்கு வருகை அதிகரித்தது.
உங்களுக்கு தெரியுமா டெல்லி அரசு பள்ளிகளில் "மகிழ்ச்சிக்கு" என்று ஒரு வகுப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாது கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி திட்டமும் பயிற்சியாளர்களும் அரசு பள்ளிகளில் நியமிக்கப் பட்டார்கள்.
இந்தியாவில் மிகச்சிறந்த 10 பள்ளிகளில் டெல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளி வந்தது ஆம் ஆத்மி கட்சியின் சாதனை
இதற்கெல்லாம் ஆம் ஆத்மி கட்சி செய்து ஒன்றுதான். மாநில பட்ஜெட்டில் கல்விக்கான தொகையை அதிகமாக ஒதுக்கியது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு. 2015இல் கிட்டத்தட்ட 6,000 கோடி, 2016 இல் 8000 கோடி என்று கல்விக்கான பட்ஜெட்டை முதன்மையாக உயர்த்தி தற்போதைய பட்ஜெட் 16 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல தனியார் பள்ளிகளில் கட்டணத்தை குறைத்து சீர் செய்தது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி.
இதையெல்லாம் கேஜ்ரிவாலின் அரசாங்கம் முக்காமல் முனுங்காமல் செய்திருக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியது. மேலும் பல வருடங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை வெளியேற்றி விட்டு புதிதாக வரும் கட்சி கஜானா காலி என்று சொல்லி வேலைகளை தள்ளிப்போடும் சூழலில் ஆம் ஆத்மி கட்சி அதையெல்லாம் செய்யாமல் மக்களுக்கான நலத் திட்டங்களுக்காக தன்னுடைய நிதியை எப்படி நிர்வாகம் செய்தது என்பதையே நாம் பல மாநிலங்களுக்கு பாடமாக எடுக்கலாம்.
ஒன்று தெரியுமா டெல்லியில் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தங்கள் முதல்வர் பற்றியும் அவர் கொண்டு வந்த திட்டங்கள் பற்றியும் நன்றாக தெரிகிறது. சிறுவயதிலேயே அவர்கள் மோடியை உதவாக்கரை என்று கெஜ்ரிவாலை நல்லவர் என்றும் கூறுகிறார்கள்.
மருத்துவத்துறையில் அவர்கள் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை என்றாலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீர்படுத்தி பராமரிப்பு அவைகளின் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.
அதேபோல் தில்லியின் ஏழைகளை நகரிலிருந்து அகற்றாமல் அவர்களுக்கு நகருக்குள்ளேயே மறுவாழ்வு அமைக்க திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தியும் வருகிறார்.
சொல்ல மறந்துவிட்டேன் ஆம் ஆத்மி கட்சியும் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்று minimum wage என்று சொல்லப்படுகிற குறைந்தபட்ச ஊதியத்தை 37% அதிகப்படுத்தியது தான். அது வெறும் திட்டமாக இல்லாமல் அதை அரசு தீவிரமாக கண்காணித்து நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதன் சிறப்பு.
இன்னொன்று மலக்குழி மரணங்களை குறைப்பதற்காக ஆய்வு செய்து கொண்டு வரப்பட்ட தானியங்கி இயந்திரங்கள். கடந்த வருடத்திலிருந்து தில்லியில் மலக்குழி மரணங்கள் வெகுவாக குறைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
அது மட்டுமில்லாமல் இன்னும் பல துறை களில் ஆம் ஆத்மி கட்சி முத்திரையை பதித்துள்ளது அதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
இதையெல்லாம் நான் வெறும் தரவுகளை படித்துவிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் சென்ற வருடம் தவிர்த்து நான் அதிகமாக தில்லிக்கு பயணித்திருக்கிறேன். அங்கே வாழும் விளிம்பு நிலை மனிதர்கள் ஒருவரையொருவர் உரையாடியிருக்கிறேன். அவர்கள் சொன்னதை வைத்து அரசியல் ஆய்வுகளை வைத்துமே இதை எழுதுகிறேன்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சி அரசாட்சியில் சமத்துவம் என்கின்ற தன்னுடைய கோட்பாட்டின்படி வெறும் பாதி கிணறு தான் தாண்டி உள்ளது இன்னும் அது பாய வேண்டிய பாய்ச்சல் தீவிரமாக தேவைப்படுகிறது.
ஆம் ஆத்மி துறைகளில் பலவீனமாக இருக்கிறார்கள் .
நான் பெரிதாக புகழ்ந்த கல்வித் துறையிலே அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் நடக்கும் ஆட்சியிலேயே ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி என் கவனத்தை ஈர்த்தது அதன் வாக்குறுதிகளை செயல்படுத்திய விதத்தில் தான். கொடுத்த வாக்கை காப்பாற்றுவது மட்டுமல்ல அவைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று தொடர் கண்காணிப்பின் மூலமாக அரசு இயந்திரம் மக்களின் இயந்திரமாக மாறி இருப்பதே அதற்குக் காரணம்.
ஆம் ஆத்மி கட்சி என்றால் சாமானியனின் கட்சி என்று அர்த்தம். அதன் அர்த்தம் மாறாமல் அந்த கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
மேலும் பிஜேபி கொஞ்சம் இடமாவது டெல்லியில் வந்ததற்கு முக்கிய காரணம் அதன் மதவாத அரசியல் மற்றும் அரசியல் அறிவு இல்லாத பணக்காரர்கள்.டெல்லியில் காவல்துறை அமித்ஷாவின் கீழ் வருகிறது என்று கூட தெரியாமல் சட்டம் ஒழுங்கை அரவிந்த் கேஜ்ரிவால் சரி செய்யவில்லை என்று பினாத்தி கொண்டு திரியும் மக்கள் அங்கேயும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மதநல்லிணக்கம் அரவிந்த் கேஜ்ரிவால் கெட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். சொல்லிக்கொண்டே அங்கே மதவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் அமித் ஷாவுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் முட்டாள்களுக்கு உலகத்தில் எங்கேயும் ஈடில்லை.
தங்களின் மேம்பாட்டை விட வெறுப்பு அரசியலை விரும்பும் மக்களும் டெல்லியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிஜேபியின் கொஞ்சம் வெற்றி இதற்கு ஆதாரம். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னும் சில மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கை பிறக்கிறது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டிய அனுராக் தாக்கூர் என்கின்ற மத்திய நிதித்துறை மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் CAA வுக்கு எதிராக போராடும் மக்களை "தேச துரோகிகள்" என்கிறார் "அவர்களை சுடுங்கள்" என்கிறார்.
அமித்ஷா கேஜ்ரிவாலை "தீவிரவாதி" என்று கூறுகிறார். இவ்வளவு எதிர்ப்பிற்கும் கொடுங்கோன்மைக்கும் மத்தியிலே ஆம் ஆத்மி கட்சி தில்லியில் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த ஆறுதலை கொடுத்திருக்கிறது.
கடந்த வருடம் டெல்லியின் கல்வித் துறை அமைச்சரும் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கிறார். அவரைப் பேட்டி எடுக்கும் 24 வயதான இளைஞன் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று கேட்கிறார் அதற்கு "என்னை மனிஷ் என்று கூப்பிடுங்கள்" என்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவாலை யாரும் பார்க்க முடிகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மந்திரிகள் ரோட்டு கடை களில் உணவருந்துகிறார்கள். அவர்களுக்கு Tinder ஐ பற்றி தெரிந்திருக்கிறது,Netflix பார்க்கிறார்கள். அவர்கள் எளிமையாக இருக்கிறார்கள் அவர்கள் ஆட்சியும் எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருக்கிறது.
இங்கே திமுக அதிமுகவுக்கு மாற்றாக தனியாக எந்த ஒரு மனிதனும் வெற்றி பெறாமல் போவதற்கு முக்கிய காரணம் இந்த எளிமையின்மைதான். ஒரு மேடையில் ஏறி ஏறி நின்றுகொண்டு டோக்கன் போட்டு ஆட்களை லைனில் முண்டியடிக்க வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். தங்கள் கோட்டைக்குள் உட்கார்ந்துகொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். இவர்கள் கதவை திறப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் முன்னாடியே தங்களை ராஜாக்களாக எண்ணிக் கொள்கிறார்கள்.
கமல்ஹாசன் எல்லாம் ஆம் ஆத்மி கட்சியைப்போல் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்தால் பற்றாது. அவர்களைப்போல் மனதிலும் வாழ்விலும் நடந்துகொள்ளவேண்டும். அவர் ஒரு மிகப் பெரிய நட்சத்திரமாக இருக்கலாம் ஆனால் அரசியலில் அவர் ஜீரோ பாயிண்ட் நின்று கொண்டிருக்கிறார் அதை அவர் யோசித்து முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் யோசித்து பார்த்தால் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கவே லாயக்கற்றவர்
மேலும் பாரம்பரியமிக்க கட்சிகள் மக்களிடமிருந்து விலகி நிற்கிறார்கள். மக்கள் இவர்களுக்கு வாழ்வு தந்ததையும் மறந்துவிட்டு இவர்கள் மக்களுக்கு வாழ்வு தந்ததாக மனதில் மமதையோடு சுற்றி வருகிறார்கள். பட்டப் பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள். ஜனநாயகமற்ற அரசியல் வாழ்வு முறையின் பெயர் திராவிட அரசியல். எவ்வளவு பெரிய முரண்.
ஆம் ஆத்மி கட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
பிகு : மனிஷ் சிசோதியா எழுதிய "My experiments as an Education Minister" என்கிற புத்தகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் படிக்கலாம்.நல்ல புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக