திங்கள், 10 பிப்ரவரி, 2020

BBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிராட் பிட்

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், வல்லுநர் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.
அதே போன்று, சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார்.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஸ்டோரி 4' வெல்ல, அதை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜோனாஸ் பெற்றுக்கொண்டார்.
சிறந்த குறும் ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'லேர்னிங் டு ஸ்கேட்போர்டு இன் ய வார் சோன் (இப் யூ ஆர் ய கேர்ள்)" எனும் திரைப்படம் தட்டிச்சென்றது. சென்ற ஆண்டு இதே பிரிவிற்கான விருதினை, மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்' வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக