வியாழன், 27 பிப்ரவரி, 2020

BBC : டெல்லி வன்முறை 33 பேர் இதுவரை உயிரிழப்பு


டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி வன்முறை தொடர்பில் வெறுப்புப் பேச்சுகள் பேசியதாக யார் மீதும் வழக்குத் தொடரவேண்டாம் என்று கவனமாகவே முடிவெடுத்திருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் அப்படி வழக்குத் தொடர்வது, அமைதியும், சகஜ நிலையும் மீள்வதற்கு உதவாது என்றும் அது தெரிவித்தது. அத்துடன் டெல்லி வன்முறைகள் தொடர்பாக 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தங்களுக்குத் தெரிந்து 3 பேருடைய வெறுப்புப் பேச்சுகளை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், நிறைய பேர் அப்படிப் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா.
குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த சோனியா, மன்மோகன் இதனிடையே, இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடங்கிய குழு அவரிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தது.
பிறகு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, மத்திய அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை சூழ்நிலை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் பேசும்போது, "இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த சம்பவங்கள் ஆழமான கவலைக்குரியவை. வெட்கக்கேடானவை. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்ததை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஜிடிபி என்றழைக்கப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளரான சுனில் குமார் கெளதம் தெரிவித்துள்ளதாக ஏஎன் ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜெபி) மருத்துவமனையில் மூன்று பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, நேற்று (புதன்கிழமை) சம்பவ இடத்துக்கு சென்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஓர் இஸ்லாமிய மாணவி கதறி அழுதார். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 என்று ஜிடிபி மருத்துவமனைமருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கெளதம் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், வன்முறை நடைபெற்ற வடகிழக்கு டெல்லியில் உள்ள மோஜ்புர் குடியிருப்புவாசிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து பேசினார்.
நேற்றைய தினம் வன்முறை நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்ட அஜித் தோவல், மீண்டும் இன்று இரண்டாவது முறையாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு மட்டுமின்றி, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளிடமும் நிலைமை கேட்டறிந்தார்.




அப்போது ஓர் இஸ்லாமிய மாணவி அஜித் தோவலிடம், "நாங்கள் இங்கு பாதுகாப்பாக இல்லை. கடைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. நாங்கள் மாணவர்கள். ஆனால் எங்களால் படிக்க இயலவில்லை. காவல்துறை அவர்கள் பணியை சரியாக செய்யவில்லை. நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். இரவில் உறங்கக்கூட முடியவில்லை," என்று கூறி கதறி அழுதார்.
அப்போது அந்த மாணவிக்கு பதிலளித்த அஜித் தோவல், "கவலைப்பட வேண்டாம். காவல்துறையினர் அவர்கள் கடமையைச் செய்வார்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இன்ஷா அல்லா (கடவுள் விரும்பினால்) எல்லாம் சரியாகிவிடும். பதற்றமடைய வேண்டாம். நாம் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளை அதிகப்படுத்தாமல், அமைதி காக்க வேண்டும்," என்று கூறினார்.
அவர் சந்தித்த மக்களிடமும் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அஜித் தோவல் கூறினார். "யாரும் யாருக்கும் எதிரி இல்லை. இந்த நாட்டையும் சமூகத்தையும் நேசிப்பவர்கள் சுற்றிலும் வசிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர். அனைவரும் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சில சமூக விரோத சக்திகள் உள்ளன. அவர்களை வன்மையாகக் கையாள்வோம். இன்ஷா அல்லா.. இங்கு அமைதி உண்டாகும்," என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த அஜித் தோவல், தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், காவல்துறை அதன் கடமையை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் எம்.எஸ்.ரந்தவா, இதுவரை 106 பேரை கைது செய்திருப்பதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் வலுவான ஆதரங்களை வைத்து கலவரக்காரர்களை கைது செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.



டெல்லி வன்முறை குறித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவொன்றில், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அவர்களை இடத்துக்கு அழைத்து செல்ல முழு அளவில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினரை அமர்த்த டெல்லி போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களால் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியின் சில இடங்களில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சேவைகள் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஹர்ஷ்வர்த்தன் கூறுகையில், ''உயிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆகி உயர்ந்துள்ளது. திங்கள்கிழமையன்று 81 பேர் வன்முறையால் காயமடைந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு வந்தனர். செவ்வாய்கிழமை காயமடைந்த 69 பேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 30 முதல் 40 பேர் வரை சிகிச்சை முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் உள்ள சிலரின் உடல்நிலை கவலை தருவதாக உள்ளதாக கருதப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
மேலும் டெல்லி கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அமைதியை நிலைநாட்டவேண்டுமென்றும் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு முன்பாக இரவில் குழுமியவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.




டெல்லி அரசின் கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டதை அடுத்து பிப்ரவரி 26 அன்று நடக்கவேண்டிய சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வடகிழக்கு டெல்லியில் மட்டும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
"வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் நாளை புதன்கிழமை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். எல்லா மாநிலத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகின்றன. நாளைய சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமையன்று வடகிழக்கு டெல்லி வன்முறையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மூவர் மற்றும் ஒரு கேமிராமேன் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் சமூகஊடங்களில் இந்த செய்தி பகிரப்பட்டது.
முன்னதாக வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று பகலில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

பிபிசி செய்தியாளர்களின் அனுபவம்

டெல்லியின் வடகிழக்கு பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி செய்தியாளர்கள், இந்து கும்பல் கற்களை வீசி எறிந்தும், கோஷங்களை எழுப்பி சென்றதையும் பார்த்துள்ளனர். மேலும் அந்த கூட்டத்தில் இருந்த சிலர் "துரோகிகளை சுடுங்கள்" என்றும் கோஷமிட்டுள்ளனர்.
பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயே, டயர் மார்க்கெட் ஒன்று தீ வைக்கப்பட்டு புகை வரும் காட்சியை பார்த்துள்ளார்.
மேலும் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், ஷஹாத்ரா பகுதியில் மசூதி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.
சிலர் மசூதியின் தூபியின் மேல் உள்ள பிறையை சேதப்படுத்துவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வன்முறை தொடங்கியது எப்படி?

வடகிழக்கு டெல்லியின் மோஜ்பூர் பகுதியில் டிசம்பர் மாதம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர்கள், சனிக்கிழமை, ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராடத் தொடங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
போராட்டம் காரணமாக அங்கு மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த சாலைகளும் மூடப்பட்டன.
ஞாயிறன்று ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவானவர்கள் பேரணியாக செல்லத் தொடங்கியதும் பதற்றம் உண்டானது.
ஊடங்கங்கள் மற்றும் சமூக ஊடங்களில் வெளியான காணொளிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரான போராட்டக்காரர்கள் கற்களை வீசிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.




இதனால் ஏற்பட்ட வன்முறைகளில் வடகிழக்கு டெல்லியின் பகுதிகளில் கடைகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் மற்றும் படங்களும் ஊடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
பொது மக்களின் சொத்துகளை தீக்கிரையாக்கி, சூறையாட முயன்ற கூட்டத்தை கட்டுப்படுத்த தாங்கள் தடியடி நடத்த வேண்டி இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

திங்கள் கிழமை என்ன நடந்தது?

திங்கள் மதியம் மற்றும் மாலையில் நடந்த வன்முறை சம்பவங்களில் நால்வர் உயிரிழந்தனர்.




டெல்லி கோகுல்புரி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரானவர்கள் இடையே நடந்த மோதலில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதாகவும், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
இறந்த போலீஸ் கான்ஸ்டபிளான ரத்தன் லால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும், கடந்த 1998-இல் டெல்லி போலீசில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்தார் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
முகமது சுல்தானின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவரது காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த மற்றொருவரான ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் ஆல்வி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''என் சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இன்றைய போராட்டத்தின்போது அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
ஜாபராபாத்தில் காவல்துறையினர் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக