சனி, 1 பிப்ரவரி, 2020

BBC : 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட்)

பட்ஜெட் பற்றி நிர்மலா சீதாராமன் என்ன சொல்கிறார்? வெளிநாடுவாழ்
இந்தியர்கள் வருமானவரி கட்ட வேண்டுமா? 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (சனிக்கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
தனிநபர் வருமானவரியில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மக்களின் சேமிப்பை மட்டுப்படுத்தாதா ?
வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காகவே இந்த சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளோம். தனிநபர் வருமானவரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம், மக்களின் பணம் அவர்களது கையிலேயே இருக்கும். நடுத்தர வர்க்க குடும்பங்களை மனதில் கொண்டே வருமானவரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதே முறையையே இங்கேயும் கையாண்டுள்ளோம். அதாவது, வருமானவரியில் விலக்குகள் வேண்டுமானால், பழைய வரிவிதிப்பு முறையையும், இல்லையென்றால் புதிய முறையையும் பின்பற்ற முடியும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களும் வருமானவரி கட்ட வேண்டுமா?
இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 240 நாட்களுக்கு மேல் வசித்தால்தான் அவருக்கு இந்தியாவில் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதே போன்று, இந்தியாவை சேர்ந்த ஒருவர் எந்த ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டிலும் தொடர்ந்து வசிக்காமல் இருந்தால் அவர் பெறும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும் என்ற இரண்டு மாற்றங்களை முன்மொழிந்துள்ளோம்.
புதிய வருமானவரி விதிப்பு முறையில் அனுமதிக்கப்படும் விலக்குகள் என்னென்ன?

ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட பல்வேறு முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் விலக்குகள் புதிய வரிவிதிப்பு முறையிலும் தொடர்கிறது. ஆனால், கிட்டத்தட்ட குறுகியகால/ நீண்டகால சேமிப்பு திட்டங்கள் பலவற்றிற்கும் புதிய வருமானவரி விதிப்பு முறையில் விலக்கு அளிக்கப்படவில்லை.
இன்று பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிதிநிலை அறிக்கை மீதான முதலீட்டாளர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறதா?
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் தாக்கம் பங்குச்சந்தையில் முழுமையாக வெளிப்படுவதற்கு ஒருநாள் ஆகும். எனவே, வரும் திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நேர்மறையான மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் மோசமான நிலையில் உள்ள வாகன உற்பத்தி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லையா?
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிப்பை வெளியிடும் செயல்பாடு அல்ல. அடுத்த ஓராண்டில் அரசின் நிதிசார்ந்த திட்டங்கள் குறித்த பார்வையையே இது வழங்குகிறது. எனவே, தேவை ஏற்படும்போது தக்க அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மற்ற விடயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


பல பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது ஏன்?
இந்திய தொழில்துறையால் அதிக அளவில், நிறைந்த தரத்துடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடுத்து, இறக்குமதி செய்யப்படும் சில வகை பொருட்களுக்கே இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது/ உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில், உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீண்ட நேரம் ஆனது ஏன்?
நான் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு நீண்ட நேரம் ஆனது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக