வியாழன், 20 பிப்ரவரி, 2020

உனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம். 5 மில்லியன் டன் அமித் ஷா உளறல்

Shahjahan R : உனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம்...
என்று ஒரு டயலாக் இப்போதெல்லாம் அடிக்கடி பேஸ்புக்கில் பார்க்கிறேன். ஏதோவொரு திரைப்படத்தில் வந்திருக்க வேண்டும். எந்த்த் திரைப்படம், யார் பேசும் டயலாக் என எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த டயலாக் இன்றைய காவிகளின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட பேருக்குப் பொருந்துகிறது என்பதால், எந்தவொரு உளறலைப் பார்த்தாலும் இந்த டயலாக்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்று ஜக்கியின் உளறல்.
ஐந்து மில்லியன் டன் எகானமி என்று அமித் ஷா உளறியபோது பொத்திக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்ததுபோல, இந்த ஆள் இஷ்டத்துக்கு உளறும்போதும் எவனும் வாய்பேசாமல் கேட்டுக் கொள்கிறான். ஆனால், அந்த உளறலைப் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏகப்பட்ட கேள்விகள், விளக்கங்கள் வருகின்றன. அதனால் இந்தப் பதிவு.
இன்பாக்சில் கேள்வி கேட்டவர்கள், விளக்கம் அளித்தவர்கள் மீது எந்தக் கோபமோ வருத்தமோ இல்லாமல்தான் இதை எழுதுகிறேன். ஏனென்றால், அவர்கள்தான் என்னைப் படிப்பிக்கிறவர்கள். புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்க வைப்பவர்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.
ஜக்கி உளறலில் குறிப்பான இரண்டு அம்சங்கள் –
1. ஆண் குழந்தை பிறந்தால் ஒரு வகையான பால் சுரக்கும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு வகையான பால் சுரக்கும்.
2. இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மார்புகளிலும் இரண்டு வகையான பால் சுரக்கும்.

இதைக்கேட்டதுமே கெக்கேபிக்கே என்று சிரிப்பு வரவில்லை என்றால் அவர் பக்தராகவே இருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். அது கிடக்கட்டும். இப்போது விஷயத்தை அறிவியல்பூர்வமாகப் பார்ப்போம்.
தொடங்குவதற்கு முன்பே ஒருவிஷயத்தை சொல்லிவிடுகிறேன் – நான் துறைசார் விஞ்ஞானியோ வல்லுநனோ கிடையாது. இதுவரை வாசித்தறிந்த தகவல்களை அலசி, அதிலிருந்து கிடைத்த அறிவைப் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவே. உடற்கூறியல், தாய்ப்பால் ஆகியவை பற்றிய அறிவியல் விளக்கங்களுக்கெல்லாம் போக விரும்பவில்லை.
கால்நடை கன்று ஈனும்போது, பிறப்பது ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்து பால் அதிகம் சுரக்கும் என்பதான ஒரு கருத்து நிலவுகிறது. உதாரணமாக, ஒரு மாடு கன்று ஈனுகிறது. பிறப்பது பசுவாக இருந்தால், எருதுவுக்கு சுரப்பதைவிட அதிகம் சுரக்குமா என்பது ஒரு கேள்வி. இதைப்பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. சுரக்கும் பாலின் தரத்தில் வித்தியாசம் உண்டு, ஆனால் இந்த வித்தியாசம் பெரிய அளவுக்கு இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், இது 2.7% அதிகம்; கனடாவில் 0.5%. இதிலும்கூட, சிலவற்றில் முதல் ஈற்றின்போது சுரந்த பாலில் மட்டுமே அதிகமாக இருந்தது, சிலவற்றில் இரண்டாவது ஈற்றில் அதிக சக்தி சுரந்தது. சில நாடுகளில் இரண்டு ஈற்றிலும் அதிகம் சுரந்தது. இன்னொரு ஆய்வில், பிறப்பது பெண்ணாக இருந்தால்தான் அதிகம் பால் சுரந்தது என்று காட்டியது.
ஆக, ஆணை ஈனுவதைவிட பெண்ணை ஈனும் கால்நைட அதிக பால் தரும் என்பதற்கு உலக அளவில் ஒப்புக்கொள்ளத்தக்க கணக்கு இல்லை. இருந்தாலும், இதை அறிவியலார் முற்றாக நிராகரிக்கவில்லை. காரணம், பாலூட்டி விலங்குகளின் தன்மையைப் பற்றிய ஒரு கருதுகோள் உண்டு. டிரைவர்ஸ்-வில்லார்ட் என்பவர்களின் மதிப்பீட்டின்படி, ஒரு பாலூட்டி விலங்கு தன்னுடைய நிலைமையையும் சூழலைப் பொறுத்து, தன் பரம்பரையின் பாலினத்துக்கேற்ப சரி செய்து கொள்ளும்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5221817/
இது விளக்குவதற்கு கொஞ்சம் சிக்கலான விஷயம். நல்ல ஆரோக்கியத்துடன் புஷ்டியாக இருக்கும் ஒரு தாய், மகனைப் பெற்றால் அதிகப் பேரன்பேத்திகளைப் பெறலாம் என்பதற்காக மகனுக்கு அதிக சக்தி தரும். அவ்வளவாக புஷ்டியாக இல்லாத தாயாக இருக்கும்பட்சத்தில், பெண்ணுக்கு அதிக சக்தி தரக்கூடிய பாலைத்தரும்.
இதனை மனிதர்களுக்குப் பொருத்திப்பார்த்தால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், சுரக்கும் பால் சற்றே அதிக அடர்த்தியுடன் இருக்கும். சுமாரான ஆரோக்கியமுள்ள பெண்ணாக இருந்தால், ஆண் குழந்தைக்கு சுரப்பதைவிட பெண்குழந்தைக்கு அதிக கொழுப்புச்சத்துடன் பால் சுரக்கும்.
இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் விளங்காத விஷயம். இந்தக் கோணத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆண் குழந்தையைப் பெற்றவரின் பால், பெண் குழந்தையைப் பெற்றவரின் பால் இரண்டையும் பரிசோதனை செய்து, எதில் எந்தெந்தக் கூறுகள் அதிகம் என்று ஒப்பிடப்பட்டது. சூடானில் 48 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஆண் குழந்தைகளைப் பெற்ற 24 பேருக்கு லிபிட் 406 mg/dl இருந்த்து. பெண் குழந்தைகளைப் பெற்ற 24 பேருக்கு லிபிட் 271 mg/dl இருந்த்து. ஆனால் ஆணைப் பெற்றவர்களுக்கு அமினோ அமிலங்கள் 3.1. பெண்ணைப் பெற்றவர்களுக்கு 3.5 இருந்தது. ஆணுக்கு கால்சியம் 3.9, பெண்ணுக்கு 2.8. இதிலிருந்து, பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு லிபிட், கால்சியம் அதிகம் கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியும்.
http://www.imedpub.com/…/biochemical-differences-in-human-b…
ஆனால், பால் கொடுத்த அந்தத் தாய்மார்கள் என்ன உணவு உண்டார்கள் என்பதையும், அவர்களுடைய உடல்நிலைமையைப் பொறுத்தும்கூட லிபிட் / கால்சியம் அளவு மாறக்கூடும். பால் சுரப்புக்கும், பாலின் தரத்துக்கும் பல காரணிகள் உண்டு. எனவே, மேலே சொன்ன சூடான் ஆய்வாளர்களும்கூட, இதை இறுதி முடிவாகச் சொல்ல முடியாது; இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று சொல்கிறார்கள்.
எனவே, இதை இறுதி முடிவாக சொல்ல முடியாது. ஏனென்றால், இது நடத்தப்பட்டது ஒரே ஒரு நாட்டில் வெறும் 48 பேரிடம். (இதேபோல வேறு சில நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, அவையும் ஒரு நூறு பேருக்கு மட்டும்தான்.) இது போன்ற ஆய்வுகள் உலகெங்கும் பல்வேறு பிராந்தியங்களில் பல்வேறு இனக்குழு மக்களிடையே நடத்தப்பட்டு ஒப்பிடப்பட்டால்தான் உலகளாவிய முறையில் ஏற்க முடியும்.
ஆக, பிறக்கின்ற குழந்தை ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்து சுரக்கின்ற பால் சற்றே வித்தியாசப்படும் என்றாலும், அது எவ்வாறு என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டதில்லை. ஆண் குழந்தைக்காக அடர்த்தியாக சுரக்கும், பெண் குழந்தைக்காக அடர்த்தி குறைவாக சுரக்கும் என்று பொத்தாம்பொதுவாக சொல்ல முடியாது. சில பிராந்தியங்களில் பெண் குழந்தை பெற்றவர்களுக்கு கொழுப்பு அதிகமான பால் சுரந்ததும் உண்டு. இன்னும் ஆய்வுகள் தேவை என்பது தெளிவு. இதைப்பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட ஆய்வுக்கட்டுரையை வாசிக்கலாம்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6165076/…
இப்போது இரண்டாவது விஷயத்துக்கு வருவோம் - இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மார்புகளிலும் இரண்டு வகையான பால் சுரக்குமா?
ஒரே தாயின் ஒரே மார்பிலிருந்து சுரக்கின்ற பாலில்கூட வித்தியாசம் இருக்கும் என்கிறது அறிவியல். அதாவது, பாலூட்டத் துவங்கும்போது வருகிற பால், குழந்தை ஓரளவுக்கு அருந்திய பிறகு வருகிற பால் – இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கும். “பாலூட்டத் துவங்கும்போது” என்பதை, முதல்முதலாகப் பாலூட்டும் நிகழ்வாகப் பொருள் கொள்ள வேண்டாம். அது சீம்பால் என்பார்கள். சத்து நிறைந்தது என்பது வேறு விஷயம். இங்கே சொல்லப்படுவது, ஒரு தாய் தன் குழந்தையை மார்பில் வைத்து பாலூட்ட ஆரம்பித்ததும் வருகிற பால் முதல்பால் – foremilk. பாலூட்டி முடிக்கும்போது வருவது பின்பால் – hindmilk. முதல்பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். குழந்தை அருந்த அருந்த, சுரப்பிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பும் சேர்வதால் பின்பாலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இது இடது மார்பகம், வலது மார்பகம் என வித்தியாசப்படாது. இரண்டுக்கும் பொருந்தும் (மேலும் அறிய : https://kellymom.com/bf/got-milk/basics/foremilk-hindmilk/)
ஆனால், ஜக்கி பிராடு சொல்வதுபோல, இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மார்பகங்களிலும் வெவ்வேறு வகையான பால் சுரக்காது.
இதற்கு சரியான பதில் - there is no consistent compositional difference between milks from the two breasts unless one is infected.
ஏதேனுமொரு மார்பகத்தில் ஏதேனும் தொற்று இருந்தாலொழிய, இரண்டு மார்பகங்களிலிருந்தும் வரும் பாலில் எந்த வித்தியாசமும் இருக்காது.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/392766/?ncbi_mmode=std

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக