செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பொது தேர்வு கிடையாது! 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கிடையாது ... அரசு அறிவிப்பு

அரசின் முடிவுக்குப் பாராட்டும் கட்சிகள்!மின்னம்பலம் :
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்த நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் உட்படப் பலரும் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.
2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதன் மூலம் இடைநிற்றல் அதிகரிக்கும், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பலத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், விசிக திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்வாறு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று (பிப்ரவரி 4) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டையும், வரவேற்பையும் தெரிவித்து வருகின்றன. சிபிஎம், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம். தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
”5 ,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இப்போது ரத்து செய்தால் மட்டும் போதாது, “மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய கல்விக்கொள்கையில் அது இடம்பெற்றால் அதைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தமாட்டோம்” எனவும் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவிக்கவேண்டும்” என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று அறிக்கை வெளியிட்ட அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக நிறுவனர் ராமதாஸ், “பொதுத் தேர்வு ரத்து என்பது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாகச் செய்தது என்ன? திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எத்தனை முறை பேசினார்? என்பதைத் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதில் தோல்வி அடைந்து விட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் அரசின் முடிவை வரவேற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக