சனி, 1 பிப்ரவரி, 2020

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் தவறு நடந்தது உறுதி போலீஸ் விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரை

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் தவறு நடந்தது உறுதி போலீஸ் விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரை தினத்தந்தி :  குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்து இருக்கிறது. சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 14 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.என். பி.எஸ்.சி. தட்டச்சர் மாணிக்கவேல் (வயது 26), கூரியர் வேன் டிரைவர் வே.கல்யாணசுந்தரம் (31) ஆகிய 2 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் மாணிக்கவேல் மதுராந்தகத்தையும், டிரைவர் கல்யாணசுந்தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.


இதனால் இவ்வழக்கில் கைது ஆனவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் அந்த தேர்வு தொடர் பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்து இருக்கிறது.

இதுதொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-ம் ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணைகளின் மூலம் தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த தேர்வர்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவர்.

இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் நடந்த குரூப்-2ஏ பதவிகளுக்கான தேர்விலும் தவறு நடந்துள்ளது என்று வந்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாணைய குழுமம் கவனமுடன் ஆராய்ந்து தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இந்த தேர்வு குறித்தும் விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் தவறு நடந்திருப்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தேர்வை பொறுத்தவரை முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்துத்துறை மூலமாக செய்யப்பட்டு அத்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் 33 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தற்போது ஐகோர்ட்டு தன்னுடைய ஆணையில் போக்குவரத்துத்துறை நடத்திய முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறி இப்பணியை முழுவதும் மறு ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்து எந்த வித சந்தேகமும் எழுப்பப்படவில்லை.

வேளாண் என்ஜினீயர் தேர்வில் அரசு விதிகளின்படி, இளநிலை பொறியாளர் (வேளாண் பொறியாளர்) பதவி, வேளாண் என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கான முன்னுரிமை பதவி ஆகும். வேளாண் என்ஜினீயரிங் படித்த தகுதியான தேர்வர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே இதர என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இந்த பணியில் இடம் அளிக்கப்படும்.

இந்த தேர்வு முடிவுகளில் மற்ற என்ஜினீயரிங் மாணவர்களை காட்டிலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த வேளாண் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற தேர்வர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். எனவே இதிலும் எந்த விதமான தவறுகளும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

2019-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் இறுதியாக தேர்வான 181 பேரில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகின. இதனை தேர்வாணையம் கவனமுடன் ஆராய்ந்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்ததன் அடிப்படையில் அதில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என உறுதிபட தெரியவருகிறது.

தேர்வு முடிவு வெளிவந்த ஒருவார காலத்துக்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக அளித்துள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டுகிறது. இவ்வாறாக பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில் ஒரே தேர்வரை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமைக்கோரும் போக்கு இருக்கிறது.

மேற்சொன்ன அனைத்திலும் புகார்கள் எதுவும் பெறப்படாமலேயே ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேர்வாணையம் விசாரணை செய்து முகாந்திரம் இருக்கும் இனங்களில் உரிய விசாரணை நடத்தப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் குறிப்பிட்ட புகார்கள், செய்திகள் தேர்வாணையத்தின் கவனத்துக்கு வரும்போது, அது எவ்வளவு சிறிய புகாராக இருந்தாலும் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

தேர்வர்களும் சமூக பொறுப்புணர்ந்து நேர்மையான வழிகளில் மட்டும் தேர்வினை எதிர்கொள்ளுமாறும், எவ்வித முறைகேடுகளுக்கும் துணைபோகாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இடைத்தரகர் களை நம்பவேண்டாம். இதுகுறித்த தகவல் தெரியவரும்போது தேர்வாணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மட்டுமின்றி வேறு எந்த தவறும் நிகழாத வண்ணம் இருக்க தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக