சனி, 8 பிப்ரவரி, 2020

2 கோடியை தாண்டிய கையெழுத்து: ஸ்டாலின்


மின்னம்பலம் : சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டோர் குறித்த தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. சிஏஏவின் பாதிப்புகளை விளக்கி ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு வந்தது. இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் திமுக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றுவருகிறார். அந்த வகையில் திருவள்ளூரில் இன்று (பிப்ரவரி 8) பொதுமக்களிடம் சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து வாங்கினார்.
அப்போது உரையாற்றிய ஸ்டாலின், “சிஏஏவுக்கு எதிராக பெறப்படும் அனைத்து கையெழுத்துக்களும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. ஒரு கோடி கையெழுத்துக்களை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கத்தை துவங்கினோம். ஆனால் நேற்று வந்துள்ள தகவல்படி, இரண்டு கோடி கையெழுத்துக்களை தாண்டிச் சென்றுள்ளது. சிஏஏ உள்ளிட்டவற்றின் கொடுமைகளை தெரிந்துகொண்டு மக்களாகவே முன்வந்து கையெழுத்திடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தது தொடர்பாக பேசிய ஸ்டாலின், “கையெழுத்து இயக்கத்தை கேலி செய்து அதனை தடை செய்ய வேண்டும் என்று கூட சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான். இலங்கை தமிழர்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் அவர்களுக்கு ஆதரவாக இதனை நடத்துகிறோம்” என்றும் கருத்து தெரிவித்தார்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக