திங்கள், 24 பிப்ரவரி, 2020

தென்கொரியா, ஈரான் நாடுகளில் கொரோனா வைரஸ் - இத்தாலியில் 2 பேர் பலி

தென்கொரியா, ஈரான் நாடுகளில் கொரோனா வைரஸ் - இத்தாலியில் 2 பேர் பலிமாலைமலர் :  : சீனாவை தொடர்ந்து, தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகிறது. இத்தாலியிலும் இந்த கொடிய வைரசுக்கு 2 பேர் பலியாகினர். சியோல்: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை பயங்கரமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்அந்த நாட்டின் கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்குள்ள சின்ஜியோன்ஜி என்ற தேவாலயத்தின் உறுப்பினர்கள்தான் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தேகு நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கி நேற்று வரை தினமும் ஒருவர் என்ற வகையில் 5 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 123 பேருக்கு நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்து உள்ளது.

இது குறித்து உயர்மட்ட சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அதிபர் மூன் ஜே இன், கொரோனாவால் தென்கொரியா மிக பயங்கரமான திருப்பு முனையை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத வழிபாடு உள்பட எந்தவொரு காரணத்துக்காகவும் மக்கள் பொதுஇடங்களில் கூட கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

தேவை ஏற்பட்டால் மட்டுமே தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்படியும், வயதானவர்கள், நீண்டகாலம் நோயால் அவதிப்படுபவர்கள் அங்கு செல்வதை முழுமையாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளன.

தென்கொரியாவை தொடர்ந்து, ஈரானிலும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. அந்த நாட்டின் குவாம் மற்றும் மர்காஷி மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டு அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி அங்குள்ள 14 மாகாணங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டு உள்ளன.

தென்கொரியா மற்றும் ஈரானை போல் ஐரோப்பிய நாடான இத்தாலியும் கொரோனா வைரசால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லம்பார்டி, வெனேடோ உள்ளிட்ட பிராந்தியங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

மேற்கூறிய 2 பிராந்தியங்களிலும் தலா ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகினர். மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க வடக்கு பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரித்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவற்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக