சனி, 22 பிப்ரவரி, 2020

27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

சீன மருத்துவப் பணியாளர்கள்விகடன் :சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, 27 நாள்களுக்குப் பிறகே அதற்கான அறிகுறிகள் தெரியவந்திருக்கிறது
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, அந்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சார்ஸ் தாக்குதலைவிட, இதன்பாதிப்புகள் பெருமளவு என்பதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் முயற்சிகளை எடுத்துவருகிறது சீனா. உலக சுகாதார நிறுவனமும் தடுப்பு மருந்து, பரவலைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,345-ஆக அதிகரித்திருக்கிறது. அதேநேரம், 76,288 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 397 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகவும், 109 பேர் உயிரிழந்ததாகவும் சீனா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு நமக்கு சொல்கிறது.
இந்த நிலையில், சீன அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு ஆய்வாளர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 14 நாள்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் என்று இதுவரை நம்பப்பட்டுவந்தது. ஆனால், இந்தத் தகவலை பொய்யாக்கும் சம்பவம் ஹூபேயில் நடந்திருக்கிறது. ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த ஜியாங் என்பவர், கடந்த ஜனவரி 24ல், ஹூபே மாகாணத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் சென்னாங்ஜியா பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அவர் தனது சகோதரி வீட்டில் தங்கியிருக்கிறார். சில நாள்களுக்குப் பின்னர், அவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 70 வயதான ஜியாங்-குக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னரே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. < இதனால், கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாள்களுக்குள் அறிகுறி தெரியத் தொடங்கும் என்ற நம்பிக்கை உடைந்திருக்கிறது. அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு 27 நாள்களுக்குப் பின்னரே வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஹூபே மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்தப் புதிய தகவல், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக