வியாழன், 20 பிப்ரவரி, 2020

கேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங்கே?!’ – சிஏஜி அறிக்கை

கேரள முதல்வர் பினராயி விஜயன்vikatan.com - தினேஷ் ராமையா : கேரள அரசு துறைகளில் நடைபெற்ற ஊழல் குறித்து தணிக்கைத் துறை சார்பில் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசு துறைகளில் அம்மாநில தணிக்கைத் துறை 2013-18 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 12ம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இருந்த விவரங்கள் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்ன.
அரசு துறைகளிலேயே மோசமான செயல்பாடு கொண்ட துறையாக வீட்டு வசதித் துறையை அந்த அறிக்கை பட்டியலிட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ.96.77 கோடி மதிப்பிலான பணிகளைச் செய்ய வீட்டு வசதித் துறை சார்பில் ரூ.289.96 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாதால் வரி வருவாய் இழப்பும் கேரள அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறியது அந்த அறிக்கை. குறிப்பிட்ட இந்தக் கால இடைவெளியில் மட்டும் எர்ணாகுளம் பகுதியில் கட்டட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே செய்யப்பட்ட 237 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படாததால், அரசுக்கு ரூ.11.06 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகக் கையாளப்படவில்லை என்றும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் முறையாகப் பாதுகாக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி எஸ்.சுனில்ராஜ், “2013-18 இடைப்பட்ட 5 ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் இருந்து 25 ரைஃபிள்கள் (5.56 எம்.எம்) மற்றும் 12,061 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் மாயமாகியிருக்கின்றன. அவை மீண்டும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த 25 ரைஃபிள்கள் தொடர்பாக எந்த ஆவணங்களும் அங்கு இல்லாத நிலையில், அவை காணாமல் போனதாகவும் அதுகுறித்து விசாரிக்க குற்றப்பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டாலியனில் உள்ள ஆவணங்கள் கூறுகின்றன” என்று கூறியது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா
கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா
ANI
அதேபோல், காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் முறைகேடா செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. `ரூ.1.10 கோடி மதிப்பில் வி.ஐ.பி பாதுகாப்புக்காகக் குண்டுதுளைக்கப்படாத வாகனங்கள் டெண்டர் எதுவும் அறிவிக்கப்படாமலேயே வாங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், எஸ்.ஐ மற்றும் ஏ.எஸ்.ஐக்கள் அளவிலான அதிகாரிகளுக்குக் குடியிருப்புகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.2.81 கோடி மதிப்பிலான நிதி, மாநிலக் காவல்துறை தலைவர் மற்றும் 3 கூடுதல் டிஜிபிக்களுக்குத் தனி வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக உள்துறைச் செயலர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். உள்துறைச் செயலர் விஸ்வாஸ் மேத்தா, இதுதொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறார். அதில், காவல்துறையில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்றும் கணக்கெடுப்பதில் நடந்த தவறே இந்தக் குற்றச்சாட்டுகள் எழக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்; அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு இதை மாற்ற வேண்டும்
தாமஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ
காவல்துறையில் ஊழல் என சி.ஏ.ஜி அறிக்கை குறிப்பிட்டிருந்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நியாயப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் உள்துறைச் செயலரின் விசாரணை அறிக்கை, இந்த விவகாரத்தில் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சிஏஜி அறிக்கையின் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவே உள்துறைச் செயலரின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொதிக்கிறார்கள்.




இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாமஸ், “காவல்துறை தலைவர் லோக்நாத் பெகரா உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் இதுதொடர்பாக விசாரித்த பின்னரே, சி.ஏ.ஜி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் துறையில் நடைபெற்ற ஊழலை மூடி மறைக்கும் வகையில் உள்துறைச் செயலரின் விசாரணை இருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்; அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு இதை மாற்ற வேண்டும்” என்றார்.




கேரள ஏடிஜிபி டாமின் தக்கன்கரே தலைமையிலான கிரைம் பிராஞ்ச் போலீஸார், திருவனந்தபுரம் போலீஸ் பட்டாலியனில் திடீர் சோதனை நடத்தினர். சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிட்டபடி எந்த ரைஃபிளும் மாயமாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் சோதனையை நடத்தி இரண்டு நாள்களுக்குப் பின்னர், உள்துறைச் செயலரின் விசாரணை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதேநேரம் கிரைம் பிராஞ்ச் போலீஸார் நடத்திய சோதனையில், 350 போலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக