திங்கள், 17 பிப்ரவரி, 2020

சீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் ..?


தினமலர் : பீஜிங்: அண்டை நாடான சீனாவில், 'கோவிட் - 19' எனப்படும், 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, 1,770 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கோவிட் - 19 என்ற வைரஸ், அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங், கிழக்காசிய நாடான ஜப்பான் ஆகியவற்றிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடான சீனா, இந்த வைரஸ் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மரண பீதியில் உள்ளனர்.

 இந்த கொடூர வைரசை கட்டுப்படுத்துவதற்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று(பிப்.,16) ஒரே நாளில் மட்டும், சீனாவின் பல்வேறு பகுதிகளில், 105 பேர் இந்த நோய்க்கு பலியாகினர். இதையடுத்து, சீனாவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 1,770 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, 70 ஆயிரத்து, 548 பேர், வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், மேலும், 2,048 பேருக்கு, புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக