புதன், 12 பிப்ரவரி, 2020

"டயர்" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும்- முதலமைச்சர் பேச்சு

சியேட் டயர் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாலைமலர் : சென்னை: ஸ்ரீபெரும்புத்தூர் கண்ணன் தாங்கல் பகுதியில் “சியேட் டயர்” தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இன்று நான் துவக்கி வைத்துள்ள இந்தத் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி எனது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு பதினெட்டே மாதங்களில், உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான 4,000 கோடி ரூபாயில், முதல்கட்டமாக, 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை துவக்கியுள்ளது சியேட் நிறுவனம்.
வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ்., யோகோ ஹாமா என திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.


இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மணிமகுடத்தில், மேலும் ஒரு மாணிக்கமாக இந்தத் தொழிற்சாலை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சியேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தான் தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் அனைத்து திட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை நான் பெருமையுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் நின்ற நிறுவனங்கள் கூட, அம்மா அரசின் சிறப்பான செயல்படுகளால் புத்துயிர் பெறும் சூழல் உருவாகி இன்றைக்கு திறக்கப்பட்டு வருகின்றன.
தற்போது டயர் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான சிந்தடிக் ரப்பரை மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் தமிழ்நாட்டில் உருவாவதன் மூலம், டயர் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் குறைவான விலையில் இங்கேயே கிடைக்கக்கூடிய நல்ல சூழல் உருவாகும். இதனால், உற்பத்தி செலவு குறைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்திகளில் ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான்.

சியேட் நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை துவங்கியதைப் போல, விரைவில் தனது ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் துவங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியிலே நான் ஆனந்த் கோயங்காவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இன்று உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கின்றது என்றும், நாள் ஒன்றுக்கு 30,000 கார் டயர் உற்பத்தி செய்யப்படும் என்றும் சொன்னார்.

அதோடு, இங்கு பணிபுரிகின்றவர்களில் 40 சதவீதம் பெண்கள் என்ற செய்தியையும் சொன்னார், உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்கான உதவியை செய்ய வேண்டுமென்று இங்கே மேடையில் என்னை கேட்டுக்கொண்டார். அரசு அதற்கு அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், தொழிற்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சியேட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கா, வாலாஜாபாத் கணேசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக