வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க ". "ஒன்..டூ ..." நிசப்தமானது! .ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1.

Shalin Maria Lawrence : ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1
நேரம் சரியாக காலை 7 மணி 8 நிமிடங்கள் .அந்த உயர்தர அதிநவீன ஆஸ்பத்திரியின் மூன்றாம் தளத்திலுள்ள லேபர் வார்டிலிருந்து பச்சை நிற கவுன் உடையணிவித்து தலையில் பிளாஸ்டிக் உறையில் மூடப்பட்டு ஒரு நீண்ட ஸ்ட்ரெச்சரில் என்னை வைத்து ஒரு வார்டுபாய் தள்ளி கொண்டு இரண்டாம் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதயம் திக் திக் என்று அடித்து கொண்டிருந்தது .காலையில் நடந்த ஆஸ்பத்திரி சடங்குகளில் இந்த நிலை ஏற்பட்டிருந்தது .
உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்று தெரியாது .அதிகாலை கண் விழித்ததும் ஆசனவாயில் நெருப்பு மாத்திரைவைக்கப்படும் .காலை கடனை முடித்து ,குளித்து முடித்த பின்னே அந்தரங்க இடங்களில் சர்.... சர்... என்று சவரம் செய்வார்கள் .பொதுவாக சோப்பைக்கொண்டு ஈரப்படுத்தி செய்யும் சவரம் போல் இது கிடையாது .காய்ந்த தோளின்மேல் ஒரு மெல்லிய பிளேடால் சிறு முடிகளை மழிக்கும்போது சர்..சர்..சர்..என்கிற சத்தம் அந்த அதிகாலை நிசப்தத்தை கிழிக்கும் .யாரோ ஒருவர் நமது அந்தரங்கத்தை எந்த ஒரு விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டு அதை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறார் என்கிற ஒரு சிந்தனை அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுக்கும் .அந்த நொடியில் நாம் என்ன பாலினம் என்று மறந்துபோவோம் .ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நான் ஒரு உடல் மட்டும். .

பாலினம் என்பது சிந்தனை சார்ந்ததுதானே ? குறிப்பாக பெண்களுக்கு இந்த நிலை ஒரு தனி சந்தோஷத்தை கொடுக்கும் .கீழ்வயிற்றின் கீழே இருந்து அந்த சிறு முடிகளை அப்புறப்படுத்தியப்பின் மீண்டும் ஒரு ஆசுவாசம் .ஒரு சுதந்திரநிலை .அப்பொழுதுதான் தொண்டையை நனைக்க வேண்டும் என்று தோன்றும் .தண்ணீர் கேட்டால் தர மாட்டார்கள் .அறுவைசிகிச்சைக்கு முன்பு இரவில் இருந்து தண்ணீர் கிடையாது ."ஒரு டம்ளர் ?" ஹுஹும் ..."அரை டம்பளர்?" ஹுஹும் ..."ஒரு சொட்டு ?" அந்த பொறுமை மிகுந்த குட்டி உருவம் கொண்டிருந்த மலையாளி நர்ஸ் பொறுமை இழக்காமல் ,முகத்தில் எந்த ஒரு சலனமும் இன்றி சொல்லி கொண்டிருந்தாள் .
இந்த மலையாளி நர்ஸுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என் அவர்களுக்கு மட்டும் இவ்வளவு பொறுமை என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா ? நான் பொதுமைப்படுத்த விழையவில்லை.இருந்தாலும் இதை சொல்லியே ஆகவேண்டும் .பொதுவாக நர்ஸுகளுக்கே பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகமாக இருக்குமென்றால் அதில் மலையாள நர்ஸுகள் ஒரு படி அதிகமாகவே இருக்கிறார்கள் .இது என் அனுபவம் .நான் பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் IELTS என்கிற ஆங்கில தகுதி நிர்ணயிப்பு பரீட்சைக்காக தென் மாநிலங்களில் இருக்கும் பலரோடு தொடர்பில் இருக்க வேண்டி இருந்தது .அந்த பரீட்சையை எழுதுவதில் எண்ணிகையில் கேரளா முதலிடத்தில் இருந்தது .அதிலும் குறிப்பாக அதிகமான கேரள பெண்கள் வெளிநாடுகளில் நர்ஸ் வேலைக்காக அந்த பரீட்சையை எழுதினார்கள் .கேரளாவின் எந்தெந்த மூலையில் இருந்தோ ஓமான் .லிபியா ,சிரியா ,ஏமன் என்று ஏதேதோ தொலைதூர ஊர்களுக்கு நர்ஸுகளாக படையெடுப்பார்கள் .சில சமயம் யோசிப்பேன் அரபு நாடுகளில் கருணையை காட்டகூட இந்திய பெண்கள் தேவைப்படுகிறார்கள் போல என்று .அவர்கள் துணிந்து எல்லா இடத்திற்கும் செல்லுவார்கள் ,தங்களுக்கான வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள .அவர்கள் எந்த ஆணின் உத்தரவிற்காகவும் காத்துக்கிடப்பது கிடையாது .நேரம் வரும்போது பறந்துகொண்டே இருப்பார்கள் .ஆம் அவர்கள் எனக்கு உணவிற்காக காலநிலை மாற்றங்களில் கூட்டம் கூட்டமாக பறந்துசெல்லும் வெள்ளை நிற பறவைகளை ஞாபப்படுத்தினார்கள் .அவர்கள் சென்ற இடங்களை செழிப்பாக்கினார்கள் .அவர்களுக்கு மூப்பு கிடையாது ,பறவைகளை போல .
இதில் கிறிஸ்தவ நர்ஸுகள் அதிகமாக இருந்தார்கள் .அவர்கள் பெயர்கள் லிஷா ,லிஜி,ஷினு ,லிஸ்ஸி என்று அழகழகாக இருந்தது .அவர்கள் பாடினார்கள் ,பேசவில்லை .மலையாளி நர்ஸுகள் பற்றி என்னால் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச முடியும் .ஆனால் நான் எழுத போவது அதைப்பற்றியல்ல .ஆக இப்படியாக அந்த நர்ஸ் என்னை பிரசவ அறுவைசிகிட்சைக்காக தயார்படுத்தினார் .
ஆயிரம் சொல்லுங்கள் ,"எழுந்து ஸ்ட்ரெச்சர்ல படுங்க " என்று வார்டுபாய் சொல்லும்போது எவ்வளவு பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் உள்ளே கிலி எடுக்கத்தான் செய்யும் . அப்படி ஒரு கிலி எனக்கும் எழுந்தது .நினைவற்ற நிலையில் ஸ்ட்ரெச்சரில் இழுத்து செல்லப்படுவதும் ,முழுதும் விழித்துக்கொண்டு இருக்கும்போது இழுத்து செல்லுவதும் வெவ்வேறு அனுபவங்கள் .ஏறி படுத்ததும் அத்தனை முகங்கள் நம்மை சூழ்ந்து பார்க்கும்போது இனம் புரியாத பயம் வரவே செய்யும் .ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு சிந்தனை ரேகைகள் . அம்மாவுக்கு நான் முழுவதாய் மீண்டு வரவேண்டும் என்கிற ஜெபம்,இணையருக்கு நானும் குழந்தையும் ஆரோக்கியமாய் வெளியே வர வேண்டும் என்கிற கவலை,மாமியாருக்கு ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமென்கிற மகா வேண்டுதல் ,அப்பா ஜெபமாலையை என் தலையில் வைத்து நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார்.இது போன்ற வேளைகளில் பகுத்தறிவெல்லாம் வேலை செய்வதில்லை பாஸ் .பிடித்துக்கொள்ள ஏதோ ஒன்று வேண்டும் .இப்படி ஓவொருவரும் ஒவ்வொன்றை சிந்தித்து கொண்டிருக்க அந்த வேலையில் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு தலையணை .
ஸ்ட்ரெச்சர் செல்லும் வழியெல்லாம் "தலகாணி குடுங்க ,தலகாணி குடுங்க" என்று கத்தி கொண்டே போனேன்.
என்னால் தலையணை இல்லாமல் நேர்கோட்டில் படுக்க முடியாது .எனக்கு தலைசுற்றும் .இப்படி ஒரு தலைசுற்றலோடு இருந்த என்னை ஸ்ட்ரெச்சரோடு லிப்ட்டில் ஏற்றினார்கள் .அது இன்னொரு தலைவலி .எனக்கு மூடிய ஜன்னலற்ற சிறு அறைகள் என்றால் பயம் .claustrophobia அதன் பெயர் .ஜன்னலற்ற சிறு அறையில் இருப்பதுபோல் கற்பனை செய்தால் கூட எனக்கு மூச்சு திணறும் .அப்படியாப்பட்ட என்னை லிப்ட்டில் படுக்கவைத்து கொண்டு சென்றால் எண்ணத்திற்குஆவது ? தலைசுற்றலோடு படபடப்பும் ஆரம்பம் .சுற்றி இருந்த நர்ஸுகள் "ஆள் தி பெஸ்ட் மேம் " என்று சொல்லுவதெல்லாம் கனவில் நடப்பதுபோல் இருந்தது .
2018 ஆம் ஆண்டு கர்ப்பப்பையில் நடந்த ஒரு பெரிய அறுவைசிகிட்சையால் இயற்கைமுறையில் பிரசவம் ஆக கூடாதென்பதால் அறுவைசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .ஆனால் சாய்ரா நார்மல் டெலிவரிக்கு தன்னை தயார்படுத்தி கொண்டதால் அந்த அறுவைசிகிட்சையை அவசரம் அவசரமாக செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது .ஆகவே ஏற்கனவே என்னை தயார்படுத்தி வைத்திருந்தாலும் அன்று கட்டுக்கடங்காத பயம் என்னை ஆட்கொண்டது .
அறுவைசிகிச்சை அறையின் ...இல்லை ஆபரேஷன் தியேட்டர் என்றே இனி சொல்கிறேன் .தமிழ் வார்த்தை பயமுறுத்துகிறது .
ஆபரேஷன் தியேட்டர் வாசலில் ஸ்ட்ரெச்சர் நின்றதும் மிகவும் அழகான பெண் ஒருவர் வந்து கைகளை பற்றிக்கொண்டார்."ஷாலினி நான்தான உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்க போறேன் ,டென்சன்லாம் ஆகாதிங்க நான் பாத்துக்குறேன் ,இடுப்புல ஊசி போற்றுலாமா ?" என்று கேட்ட அவர் ஒரு மயக்கமருந்து டாக்டருக்கான எந்த ஒரு அச்சுறுத்தலு இல்லாத அழகியாக இருந்தார் .நல்ல மேக்கப் ,மரூன் லிப்ஸ்டிக் ,வைரத் தோடு போட்டு நல்ல சென்ட் அடித்து இருந்தார் .calvin klein என்று நினைக்கிறன் .சென்ட் வாசம் மயக்கியது ."இல்ல டாக்டர் முழு மயக்கம் குடுங்க கண்ண திறந்து என்னால இருக்க முடியாது .ஆபரேஷன் தியேட்டர் பார்த்தா பயமா இருக்கும் ,அதுவும் இல்லாம நான் ரொம்ப ஆக்ட்டிவா இருப்பேன் ,முதுகு ஊசி எனக்கு சரிப்படாது " என்றேன் . சரி என்று சிரித்துவிட்டு உள்ளே இழுத்து சென்றார்கள் என்னை .போகும் வழியில் இணையரிடம் முத்தம் கேட்டேன் "யம்மா ரொம்ப சீன்போடாத" என்று சொல்லியபடியே வெட்கத்தோடு ஒன்று கன்னத்தில் வழங்கப்பட்டது .
ஆபரேஷன் டேபிளில் படுக்கவைக்க பட்டதும் பயத்தை போக்க உதவியாளர்களிடம் ஏதேதோ உளறினேன் .கதவு திறந்து என் மருத்துவர் வந்தார் கூடவே அவரின் உதவியாளர்கள் ."ஷாலின் ரொம்ப தைரியசாலி டிவில எல்லாம் வருவாங்க தெரியுமா?" என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார் .
"ஷாலின் ரெடியா" என்றார் . "கொஞ்சம் நெர்வஸா இருக்கு டாக்டர் " என்றேன் ."அதெல்லாம் ஒன்னும் பயப்படவேணாம்" என்று தலைப்பக்கம் வந்து சிரித்தார் .
பின்பு ஆடைகள் எல்லாம் களையப்பட்டு நிர்வாணம் ஆக்கி இரண்டு கைகளை விரித்து படுக்க வைத்தார்கள் .ஆண்கள் பெண்கள் என்று ஒரு பத்து பேர் சுற்றி நின்றுகொண்டார்கள். ஆடைகள் களையப்பட்டு சிலுவையில் அறைந்த யேசுநாதர்போல் எனக்கு தோன்றியது .அனால் அவர்களுக்கோ நான் நிச்சயம் இந்தியன் படத்தில் வரும் ஒட்டகம் கடித்த கவுண்டமணியாகத்தான் தெரிவேன் என்று தெரியும் .அவரவர் கோணங்கள் என்று நினைத்துக்கொண்டேன் .ஊசிகள் போடப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது .மயக்க டாக்டர் சொன்னார் "ஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க ".
"ஒன்..டூ ..." நிசப்தமானது.
தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக