வெள்ளி, 31 ஜனவரி, 2020

தமிழக மனிதச் சங்கிலி போராட்டம் : CAA-வுக்கு எதிராக .... வீடியோ


kalaignarseithigal.com  :   குடியுரிமை திருத்தச்சட்டம் எதிராக மாநிலம் முழுவதும் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரியிருந்த நிலையில் அனைத்துக்கட்சிக்களும் மனிதச் சங்கிலி இயக்கத்தில் பங்கேற்கும் என அறிவித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு மக்களைப் பங்கேற்க வைப்பதற்காக சுமார் 10 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.அருணன் தெரிவித்தார்.
இந்நிலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் கட்சி வேறுபாடுன்றி ஒன்றுகூடிய மக்கள், மனிதச் சங்கி இயக்கத்தில் பங்கேற்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் திருவொற்றியூர் தேரடி முதல் தாம்பரம் வரை 37.1 கி.மீ தூரத்திற்கு மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. குறிப்பாக சென்னை திருவொற்றியூரில் தி.மு.கவினர் தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
அதேபோல், பல்வேறு பகுதியில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், வி.சி.க என பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி பேரணியில் கலந்துகொண்ட சிறுவர், பெண்கள், ஆண்கள் என அனைவரும் NO CAA, NO NPR, NO NRC என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், தேசியக் கொடியும் ஏந்தியவாறும் சாலை ஓரத்தில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 70 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக