புதன், 29 ஜனவரி, 2020

சுயநலம் ஒன்றே பூசைகளின் நோக்கம் .. சாமிக்கு லஞ்சம் கொடுக்கலாம்????

Dhinakaran Chelliah : !!சுயநலம் ஒன்றே பூசைகளின் குறிக்கோள்!!
வைதீக கோயில்களில் நடைபெறும் பூசை முறைகளில் மந்திரங்கள் ஒலிக்கும் அர்ச்சனையும் ஒன்று.அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது என்று பொருள்.அர்ச்சா என்பது சிலையைக் குறிக்கும்.
கோயிலுக்குச் சென்று ஒருவர் தனது கோத்திரம், பெயர், நட்சத்திரத்தைக் கூறி சுய சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சித்து தங்கள் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முறை.
ஒருவர் கோத்திரத்தை சொல்லும் போது அது அவரது பரம்பரையை மூதாதையர்களைக் குறிக்கிறது.அவர் பிறந்த நட்சத்திரத்தையும் பெயரையும், ப்ரவரத்தையும்
சொல்லும் போது அவருக்கென தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. இதை தனிப்பட்ட வகையில் புரோகிதர்கள் எடுத்துக் கூறவேண்டும். இந்த அடையாளங்களைச் சொல்லாமல் தேவ தேவதைகளுக்கு நம்மைப் பற்றி தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.மந்திரங்கள் ஒலிக்கப்படுவது ஆத்மாவிற்காகவே என்ற விளக்கம் தரப்படுகிறது வைதீர்கர்களால்.
“நம் (வைதீக) கலாச்சாரத்தில் இதைப் புரிந்து கொண்டு, ‘வம்சாவழி’ என்னும் முறையை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வந்தார்கள்.
அத்தோடு தங்களுடைய சக்திநிலையின் ஆதாரத்தை நிலை நாட்டி வைத்திருந்தார்கள். கோவிலுக்குப் போகும் போது, அவர்கள் எங்கோ மேலே இருக்கும் கடவுளிடம் பேசுவதில்லை. அவர்கள் தங்களையே பதிவு செய்துகொள்கிறார்கள். ‘இது நான், நான் இந்த வம்சாவழியைச் சேர்ந்தவன், இது என் கோத்திரம், இது என் நட்சத்திரம், இது என் குலம்‘ என்று அவர்கள் பதிவுசெய்து கொள்கின்றனர். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ‘இதுதான் என் மரபணு. எனக்கு நல்லது செய்து கொடு,’ என்று வேண்டுகிறார்கள். இது ஒரு விஞ்ஞானபூர்வமான வழி” இப்படி ஒரு விளக்கம் வைதீகர்களால் முன் வைக்கப் படுகிறது. இப்படி மரபணு வரை விரிவாக சாமிக்கு எடுத்துக் கூறும் முறைகள்தான் வைதீக சடங்கு வழிபாட்டு பூசை முறைகள்.
கோயில்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை என்கிறார்கள்.
மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம். அதாவது பலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியம் அல்லது பூசை. இது முற்றிலும் வைதீக பகவத்கீதையின் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” எனும் அறிவுரைக்கு எதிரானது. ஆக மொத்தம் பூசையின் அடிப்படையே சுயநலம்தான்.
ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இந்த நேரத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சுய-சங்கல்பம் ஆகும்.இப்படியான சுய நலத்தின் பொருட்டே அர்ச்சனைத் தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள்.
அதே போல் எப்போது கோயிலுக்குச் சென்றாலும் சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்தல் கூடாது என்கிறார்கள் வைதீகர்கள், நாட்டு நன்மை வேண்டி பொதுவான விடயங்களுக்கு அர்ச்சனை என்பதற்கு சாஸ்திரங்களில் பிரமாணம் இல்லை. ஆக,வைதீக அர்ச்சனை சடங்குகள் சுயநல அடிப்படையில் எழுந்தவை என்பது தெளிவாகிறது.
வைதீகர்களின் கோயில்களுக்கு தேவையில்லாமல் செல்லும் நாமும் சுயநல நோக்குடன் நமது பெயருக்கோ, நமது குழந்தைகள் அல்லது குடும்பத்தவரின் பெயருக்கோதான் அர்ச்னை செய்விக்கிறோம். ஒரு நாளும் பக்கத்து வீட்டுக் காரருக்கோ,ஊருக்காகவோ, உலகில் உள்ள அனைத்து சீவராசிகளுக்கோ, மனித இனத்திற்காகவோ அர்ச்சனையோ மற்ற பூசைகளையோ செய்விப்பதில்லை. இப்படி சுயநலமே உருவான வழிபாட்டினால் யாருக்குமே நன்மை இல்லையே?!
பொதுவாக, பூசைகள் எனும் பதினாறுக்கும் மேற்பட்ட உபசாரம் முறைகள் ஆவாஹனத்தில் தொடங்கப்படுகின்றன. அதாவது கும்பிடப் போகும் சாமியை சிலையெனும் படிமத்தில் எழுந்தருளுமாறு பணித்தல். எழுந்தருளிய பிறகே அது பூசைக்குரியது, இல்லையேல் அது சிலைதான்.
பின்பு ஆசனத்தில் அல்லது இருக்கையில் அமரச் செய்தல்
பின்னர் அர்க்கியம் என கை கழுவி விடுதல்
ஆசமனியம் என பருக நீர் அளித்தல்
பாத்யம் என பாதங்களைக் கழுவுதல்
அபிஷேகம் என நீராட்டு பல்வேறு திரவியங்களால் குளிப்பாட்டுதல்
வஸ்திரம் என ஆடை அணிவித்தல்
ஆபரணம் என அணிகலன்களைப் பூட்டுதல்
கந்தம் என சந்தனம் குங்குமம் பூசுதல்
அர்ச்சனம் என பூமாலை மற்றும் மலர்களை சூட்டுதல்
தூபம் என அகில் மற்றும் சாம்பிராணி புகை காட்டுதல்
தீபம் என நெய்விளக்கேற்றி திருஉருவத்தை சுற்றுதல்
நிராஜனம் என கற்பூற ஆரத்தி எடுத்தல்
தாம்பூலம் என வெற்றிலை பாக்கு அளித்தல்
நைவேத்தியம் என பழம் உணவு பால் அளித்தல்
உற்சவம் என மூர்த்தியை ஊர்வலமாகக் கொண்டு செல்லுதல்
மேலுள்ள உபசார முறைகள் அனைத்தும் வைதீக சாஸ்திரங்களில் ஆகமங்களில் சொல்லப்படும் பூசைகளுக்கான முறைகள்.
இந்த உபசாரம் கர்மங்கள் சாமியைக் குளிர்விக்கும் முயற்சிகளே, அனைத்தும்
சுயநலம் சார்ந்து எழுந்தவை.உபசாரம் செய்து வேண்டியதை சாதித்துக் கொள்வது.இது லஞ்சம் கொடுத்து வேண்டியதை அடைந்து கொள்வதற்குச் சமமானது.இந்த வழிபாட்டில், பூசையில் பாமரன் ஒருவன் எப்படி தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள இயலும்?! உள்ளம் உருகி சாமியுடன் தன்னை எப்படி இணைத்துக் கொள்ள இயலும்?! இனியாவது கோயிலுக்குச் செல்லும்போது அங்கு நடைபெறும் பூசை முறைகளை தெளிவாக கவனியுங்கள். சுயநலமில்லாத காரியம் நடக்கிறதா என உற்று நோக்குங்கள். மற்றவர்களுக்காக நாம் என்று உருகுகிறோமோ அப்போதுதான் நமக்கும் விடிவு பிறக்கும். சுயநலத்தில் ஏறெடுக்கும் எந்தக் காரியமும், பூசையும்,ஆடம்பர உபசார முறைகளும் நமக்கே சரியில்லை எனத் தோன்றும் போது சாமிக்கு தெரியாதா என்ன?!
உலகில், சுயநல நோக்கில் தாங்கள் மட்டுமே நல்லா இருக்கனும் எனும் எண்ணத்தில்
வாழ்ந்த சமூகம் என்றும் உயர்வடைந்ததில்லை!
அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும், வரியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் சமூகமே மேண்மை அடைய முடியும். மனிதநேயம் உள்ள சமூகமே உயர்வடைய முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக