புதன், 15 ஜனவரி, 2020

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்

கேஎஸ் அழகிரிதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்மாலைமலர் : திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், முதலில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.


இந்த நிகழ்வின் மூலம், காங்கிரஸ் தலைமை மீது தி.மு.க. அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

இதற்கிடையே, கட்சித் தலைமை கே.எஸ்.அழகிரியை கண்டித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென அவசர அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். 

இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் கேஎஸ் அழகிரி கூறும்போது:- 

எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சியில் சில பகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்பட வில்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதங்கத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தற்போது கூட பொங்கல் வாழ்த்து கூறியுள்ளேன். 
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப் போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம்? கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் அது வாக்கு வங்கியை பாதிக்காது என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக