திங்கள், 20 ஜனவரி, 2020

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியளிக்க மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியளிக்க மாட்டோம்: அமைச்சர்மின்னம்பலம் : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டியது இதுவரை அவசியமாக இருந்துவந்தது. அதுபோலவே, கிணறு அமையவுள்ள பகுதியின் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் கட்டாயமாகும். 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த விதியில் திருத்தம் செய்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி, இனி ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச் சூழல் துறையின் அனுமதியையோ அல்லது பொதுமக்களின் கருத்துக்களையோ கேட்கத் தேவையில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், அதனை சமாளிக்கவே இப்படி ஒரு உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சதிகாரமாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உயிராதாரமான காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்கும் முயற்சி தொடர்ந்தால் சுமார் 56 இலட்சம் மக்கள் சொந்த மண்ணிலேயே வாழ்வை பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமை நடக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ள வைகோ, “தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை வாலஜா சாலையில் இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது. மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசின் ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது. கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுவது தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல உள்ளது. மாநில அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் கொள்கை முடிவு எப்படி எடுக்க முடியும் என்பது பாமர மக்களுக்கு கூட தெரியும்.மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் கொண்டுவர முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்ததே திமுகதான். அவர்கள் ஏன் அப்போது கொள்கை முடிவு எடுக்கவில்லை. அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு போன்று ஒரு மாயையை ஸ்டாலின் உருவாக்க நினைக்கிறார். ஸ்டாலின் மீண்டும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது” என்றும் விமர்சித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக