ஞாயிறு, 19 ஜனவரி, 2020

சிஏஏவை மாநிலங்கள் எதிர்ப்பது சட்டவிரோதமானது: கபில் சிபல்

சிஏஏவை மாநிலங்கள் எதிர்ப்பது சட்டவிரோதமானது: கபில் சிபல்மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறுவது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருந்த நிலையில் அதற்கு மாறாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாபிலும் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாஜக அல்லாத மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் சிஏஏவை அமல்படுத்தமாட்டோம் என்று தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல், சட்ட ரீதியாக பார்த்தால் நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட சிஏஏவை மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று கூற முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டவிரோதமானது. மாநிலங்கள் அதனை எதிர்க்கலாம், திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்கலாம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால் அமல்படுத்தமாட்டோம் என்று கூற முடியாது. அது சிக்கல் மற்றும் சிரமங்களை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொருவரும் வளர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சாதித்தது என்னவென்று கேள்வி எழுகிறது. நாட்டின் வளர்ச்சியைவிடத் தனது வளர்ச்சிக்காகவே அவர் நிறைய செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்சட்ட ரீதியாக சிஏஏவை மாநிலங்கள் அமல்படுத்த முடியாது என்று கபில் சிபல் கூறிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் சிஏஏவுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும், காங்கிரசார் பாஜக பக்கம் திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தனது கருத்துக்கு மாறாக இன்று கபில் சிபல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும், அதைத் திரும்பப் பெறுவதற்கும் அரசியலமைப்பில் உரிமை உண்டு. ஆனால் ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் அதற்கு பின்னர் அதை எதிர்ப்பது பிரச்சினைகளை உருவாக்கும் என்று பதிவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக