சனி, 25 ஜனவரி, 2020

கே.சி. பழனிசாமி: அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோவையில் கைது

bbc :அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற
உறுப்பினராகவும் பதவிவகித்த கே.சி.பழனிசாமி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் பெயர் மற்றும் கட்சி சின்னத்தை அனுமதியின்றி முறைகேடாக பயன்படுத்திய குற்றம்சாட்டின் பேரில் கே.சி.பழனிசாமி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பழனிசாமி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, 482, 485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தியதால் இவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யார் இந்த கே.சி. பழனிசாமி?
1989ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா கட்சி தலைமை ஏற்பதற்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தார். இதனையடுத்து இவர் மீண்டும் கட்சியில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது.
>தலைமைச் செயலகத்தில் கட்சிப் பணிகளை மேற்கொண்டதாக முதல்வர் மீது இச்சந்திப்பின் அடிப்படையில் தி.மு.க குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பதிலளித்த முதல்வர், கே.சி.பழனிசாமியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே சந்தித்தாகவும், மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என்று அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக