வியாழன், 2 ஜனவரி, 2020

நெல்லை கண்ணன்: நீதிமன்றத்தில்... சோலியை முடித்தல் என்றால் தோற்கடித்தல் என்றுதான் பொருள்.. வழக்கறிஞர் வாதம்

தாய் மாமன் நெல்லை கண்ணன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?மின்னம்பலம் : ‘அமித் ஷாவின் சோலியை முடித்தால்  மோடியின் சோலி முடிந்து போகும்’ என்று பேசியதற்காக நேற்று (ஜனவரி 1) கைது செய்யப்பட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன், இன்று (ஜனவரி 2) மதியம் 1.30க்கு திருநெல்வேலி மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து நெல்லைக்கு போலீஸ் வேனிலே அழைத்துவரப்பட்ட நெல்லை கண்ணனை இன்று காலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார்.
அங்கே அவருக்கு சில சோதனைகள் நடத்தப்பட்டன. இதயம் தொடர்பான எக்கோ டெஸ்ட் எடுக்கப்பட்டதில் இதயம்  நார்மலாக இருப்பதாக தெரிவிக்கப்பட, அதன் பின்  பகல்  1.30க்கு  நெல்லை மாவட்ட  நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் நெல்லை கண்ணன்.

தொடர்ச்சியான  பயணம், மற்றும் போலீஸார் பெரம்பலூரில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றால்  மிகவும் களைப்புற்றிருந்தார்  நெல்லை கண்ணன்.  அவரைக் காண எஸ்டிபிஐ அமைப்பினர், மதிமுகவினர், கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுவான சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். நெல்லை கண்ணனுக்காக ஆஜராவதற்காக சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தயாராக இருந்தார்கள். இருந்தாலும்  சமூக ஆர்வலர் பிரம்மா, மதிமுக வழக்கறிஞர் அமல்ராஜ், செந்தில் ஆகியோர் நெல்லை கண்ணனுக்காக ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் ஏபிபி ஏஞ்சல், பாஜக சார்பில் இண்டெர்வெயினர் அதாவது குறுக்கீட்டாளர் என்ற வகையில் சீதாலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.

நெல்லை கண்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரிமாண்ட் ரிஜெக்ட் என்பதையே அடிப்படையாகக் கொண்டு வாதாடினார்கள்.
“நெல்லை கண்ணனை கைது செய்ததே தவறு. அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளின்படி  அவரை  உடனடியாக கைது செய்ய முடியாது.  புகார் கொடுக்கப்பட்ட அன்று நெல்லை கண்ணன்  மீது  504, 505/1பி 505/2 என்ற மூன்று பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 504 பிரிவுக்கு  ஜாமீன் உண்டு.  மற்ற இரண்டுக்கும் ஜாமீன் கிடையாது.  இப்பிரிவுகளின்படி குற்றம் சாட்டப்பட்ட நெல்லை கண்ணனிடம் விளக்கம் கேட்டு, அதன் பின் நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்ற பிறகே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால்  ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம், போலீஸாரின் எதேச்சதிகாரத்தால் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இவரால் இரு தரப்புக்கிடையே  கலவரம் உருவாக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப் போனால் வாபரை வழிபட்ட பிறகுதான் அய்யப்பனை வழிபடுகிறார்கள் என்று மத நல்லிணக்கம் பற்றிதான் பேசியிருக்கிறார்.
முதலில் போட்ட சட்டப் பிரிவுகளின் படி நெல்லை கண்ணன் கைதானது சட்டப்படி செல்லாது என்பதை  அறிந்துகொண்டே இன்று (ஜனவரி 2)  காலை கூடுதல்   தேச துரோகம் (153/ஏ),   மிரட்டல் 506/1  பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்து சேர்த்துள்ளனர்.  நெல்லை கண்ணனின் பேச்சால் புகார்தாரரான  தயாசங்கருக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே கைது செய்யப்பட்டதே தவறு” என்று வாதாடினார்கள்.

தொடர்ந்து, “நெல்லை கண்ணன் பயன்படுத்திய சோலியை முடித்தல் என்ற வார்த்தைக்காகவே இந்த வழக்கு அவர் மீது போடப்பட்டிருக்கிறது.  சோலி என்றால் வேலை. தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்கும் வேலையை முடிப்பீர்கள் என்று நினைத்தேன் என்ற பொருளில்தான்  அவ்வாறு பேசியிருக்கிறார்.  சோலியை முடித்தல் என்றால் கொடுத்த வேலையை செய் என்றுதான் அர்த்தம். கொலை செய் என்று அர்த்தமில்லை. இதோ அதற்கான  ஆதாரம்” என்று 500 வருடம் பழமையான தமிழ் அகராதியை வழக்கறிஞர்கள்  நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அந்தத் தமிழ் அகராதி பாளையங்கோட்டை சதக் கல்லூரியில்  இருந்து இதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்தது.

 “நெல்லை கண்ணன் உடல் நலம்  குன்றியிருக்கிறார். இரு நாட்களாக சிகிச்சையில்தான் இருந்தார். சிகிச்சைக்காக சென்னை செல்ல முடிவெடுத்திருந்தார். அதற்காக போகும் வழியில்தான் பெரம்பலூரில் தங்கினார். எனவே அவரை கைது செய்ததே தவறு. நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் கூடாது” என்று வாதாடினார்கள்.
ஆனால்  அரசு வழக்கறிஞர்  ஏபிபி ஏஞ்சல், “கலவரத்தை உண்டாக்குதல், கொலை செய்யும் நோக்கத்தை  உண்டாக்குதல்  போன்ற பின்னணியில் நெல்லை கண்ணன் பேசியிருக்கிறார்.  கைது செய்து  சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

இந்த வழக்கில் இண்டர்வியினர் என்ற வகையில் பாஜகவின்  வழக்கறிஞர் சீதாலட்சுமி ஆஜராகி   “நெல்லை கண்ணன்  பயன்படுத்திய சோலியை முடித்தல் என்ற வார்த்தை கொலை செய்வதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இது க்ளியர் கட்டாக இறையாண்மைக்கு எதிரான பேச்சு.  புரிதல் கம்மியான கூட்டத்தில் அவர்  இப்படி பேசியிருப்பது குற்றமே. எனவே அவரை விடக் கூடாது” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரை விட கடுமையாக வாதாடினார்.
நீதிபதி பாபு நீதிமன்றத்தில் நின்ற நெல்லை கண்ணனைப் பார்த்து ஏதாவது சொல்ல விரும்புறீங்களா என்று கேட்டார்.

 “அய்யா... என்னால வீட்ல இருக்கும்போதே சரியாக நடக்க முடியல. ரெண்டு பேர் துணையிருந்தாதான் நடக்க முடியும். உடல் நிலை சரில்லை. நான் அன்று பேசினதை முழுதா கேளுங்க. நான் தவறாக பேசவில்லை. வன்முறையைத் தூண்டும் படியாக பேசவில்லை. நான் சொன்னதை வேறு மாதிரியாக கற்பிதம் பண்ணியிருக்கிறார்கள்” என்றார்.
 “போலீஸ் உங்களை தொந்தரவு செய்தார்களா?” என்று நீதிபதி கேட்க,   “அதிர்ஷ்டமாகவோ, துரதிர்ஷ்டமாகவோ போலீஸார் எனக்கு நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்றார் நெல்லை கண்ணன்.
இதற்கிடையில் நெல்லை கண்ணன் பேசிய பேச்சின்  வீடியோ பதிவை   உள்ளே சென்று  லேப்டாப்பில் பார்த்தார் நீதிபதி.
இதன் பின்னர், “ஜனவரி 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன். பெயில் மனுவை தனியாக தாக்கல் செய்யலாம்” என்று உத்தரவிட்டார் நீதிபதி.

இதையடுத்து பிற்பகல் 2.30 மணியளவில் நெல்லை கண்ணனை சிறைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த இஸ்லாமிய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பலர் நெல்லை கண்ணனை சூழ்ந்துகொண்டு, ‘மாமா... கவலைப்படாதீங்க. நாங்க உங்களுக்காக களமாடுவோம்’ என்று சொல்ல, ‘என்ன சொன்னே?” என்றார் நெல்லை கண்ணன். ‘நீங்கதான் எங்களுக்கு தாய்மாமன்” என்று அவர்கள் மீண்டும் சொல்ல புன்னகைத்தபடியே கண் கலங்கினார் நெல்லை கண்ணன்.
பாளை சிறைக்கு சென்றுகொண்டிருக்கும்போதே, ‘அவரை பாளை சிறையில் அடைத்தால் பல பேர் பார்க்க வந்துக்கிட்டே இருப்பாங்க. அவரை திருநெல்வேலியை விட்டு எங்காவது கொண்டு போங்க” என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வர, அதன்படியே நெல்லை கண்ணனை திடீரென சேலம் சிறையில் அடைக்க அழைத்துக் கொண்டு திரும்பினர் போலீஸார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக