திங்கள், 20 ஜனவரி, 2020

சிதம்பரத்தால் ஸ்டாலினுக்கு வந்த கோபம்!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்கியது. இதுதொடர்பாக கடந்த 18ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு கூட்டணி தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இந்த நிலையில் இதுபற்றிய மேலும் சில தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்தன.
கே.எஸ்.அழகிரி அறிக்கை தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசினார். பாலுவிடம் பேசிய பிறகு குலாம் நபி ஆசாத் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மறுப்பு வெளியிடும்படி கே.எஸ்.அழகிரியிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கூட்டணி தொடர்பான அறிக்கையைத் தெளிவுபடுத்துவதற்கான பதில் அறிக்கை ஒன்றை அழகிரி தயார் செய்தார். அந்த அறிக்கையில், ‘சில மாவட்டங்களில் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களைச் சுட்டிக்காட்ட முனைந்தோமே தவிர, கூட்டணி தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எங்களது அறிக்கை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது. திமுகவின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ உள்ளிட்ட திமுகவைச் சமாதானப்படுத்துவது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்திருக்கிறது.

முக்கியமான அறிக்கை என்பதால் வெளியிடுவதற்கு முன்பாக அனுமதி வாங்குவதற்காக மேலிடத்திற்கு அனுப்பினார் கே.எஸ்.அழகிரி. அறிக்கையின் ஒரு நகல் ப.சிதம்பரத்திடமும் சென்றது. அறிக்கையைப் படித்துப் பார்த்த சிதம்பரம், குலாம் நபி ஆசாத்திடம் பேசி அறிக்கை வெளியிடுவதைத் தடுத்துள்ளார். ‘அறிக்கைக்குப் விளக்க அறிக்கையெல்லாம் விடத் தேவையில்லை. பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று சிதம்பரம் சொன்னதால், பதில் அறிக்கை வெளியீடு நிறுத்தப்பட்டது.
இந்தத் தகவல் அப்படியே திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் சென்றது. ‘சிதம்பரம் தலையிட்டு அறிக்கை வெளியிட வேண்டாம் என்று நிறுத்திவிட்டார். கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என அழகிரியிடமிருந்து அறிக்கை வெளியிட வைத்ததும் ப.சிதம்பரம்தான். அதற்கான விளக்க அறிக்கையை நிறுத்தியதும் அவர்தான்’ என்று ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. இதனால் கோபமான ஸ்டாலின், உடனடியாக டி.ஆர்.பாலுவைத் தொடர்புகொண்டு, காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
இதன் பிறகுதான் கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கூறும்போது நாங்கள் எப்படி காங்கிரஸின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என டி.ஆர்.பாலு ஊடகத்தில் வெளிப்படையாகப் பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் கவலையில்லை என்று துரைமுருகனும் கருத்து தெரிவிக்க, அதற்கு ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரம் பதிலடி கொடுக்க, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.
பின்னர் சோனியா காந்தியே நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசினார். அதன்பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்துதான் கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுகவினர் பேச வேண்டாம் என்று அறிக்கை விடுத்தார் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக