வியாழன், 23 ஜனவரி, 2020

பெரியார் ஊர்வலம்: 'ரஜினிகாந்த் ஏன் துக்ளக்கை ஆதாரமாக காட்டவில்லை?' - கலி. பூங்குன்றன்


BBC : சேலத்தில் 1971ல் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை
ஒழிப்பு மாநாட்டில் ராமர் - சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் பேசிய விவகாரம் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் சொல்வதுபோல நடக்கவில்லையென மறுத்திருக்கிறது திராவிடர் கழகம். அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவரும், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான கலி. பூங்குன்றன், அந்தத் தருணத்தில் நடந்த சம்பவங்களை பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பகிர்ந்துகொண்டார். அவரது பேட்டியிலிருந்து:
கே. 1971ல் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் என்ன நடந்தது?
ப. 1971 ஜனவரி மூன்றாவது வாரத்தில் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு, ஊர்வலம் நடைபெற்றது. அதில் நான் நேரடியாகப் பங்கு கொண்டேன். முதல் நாள் மாநாட்டில் ஜி.டி. நாயுடு போன்றவர்கள் பங்குபெற்றார்கள். இரண்டாவது நாள் மாநாடு, ஊர்வலத்துடன் தொடங்கியது.
அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அது மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்பதால், இந்து மத புராணங்கள், இதிகாசங்களின் அடிப்படையில், ஓவியங்கள் வரையப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. உதாரணமாக, ஐய்யப்பன் என்றால் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர் என்று சொல்வார்கள். ஆகவே அந்தப் படத்தையும் போட்டு, கீழே விளக்கத்தையும் கொடுத்திருந்தோம். ராமர் படத்தையும் போட்டிருந்தோம்.

தந்தை பெரியார் ஊர்வலத்தின் முன்பாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பின்னால் இந்த டிரக்குகள் எல்லாம் வந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவற்றைச் செய்வதற்கு பக்தி அவசியமில்லை என்பதைக் காட்ட, சிலர் இவற்றைச் செய்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.
இந்த ஊர்வலத்திற்கு எதிராகக் கருப்புக் கொடி காண்பிப்பதற்கு ஜனசங்கத்தினர் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் வந்த ட்ரெக், அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த இடத்தை கடந்தபோது, அங்கிருந்த யாரோ செருப்பை வீசினார்கள். ஆனால், அவரது வாகனம் முன்னால் சென்றுவிட்டது. ஆனால், பின்னால் வந்த ராமர் வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள், அதனை எடுத்து "எங்கள் தலைவர் மீதா செருப்பை வீசுகிறீர்கள்? உங்கள் கடவுளை அடிக்கிறோம்" என அடித்தார்கள்.



இது மாநாட்டின் நோக்கமல்ல. அதற்காக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய். இம்மாதிரி நடந்ததெல்லாம் அந்த சமயத்தில் பெரியாருக்கே தெரியாது.
கே. இந்த சம்பவம் 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
ப. சட்டமன்றத் தேர்தல் மார்ச்சில் நடக்கவிருந்தது. இந்த சம்பவம் ஜனவரி 3வது வாரத்தில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி. மற்றொரு பக்கம் காமராஜரும் ராஜாஜியும் கூட்டணி. இதில் ராஜாஜிக்கு யுக்தியாக ஒரு பிரசாரத்தை முன்வைத்தார். அதாவது, தி.க. ராமரை செருப்பால் அடிக்கிறது. இதைத் தி.மு.க. ஆதரிக்கிறது என பெரிய அளவில் பிரசாரத்தை முன்வைத்தார்கள்.
தினமணி, ஹிந்து, துக்ளக் ஆகியவற்றில் இந்த செய்திகள் வெளிவந்தன. துக்ளக் ஆரம்பித்து அப்போதுதான் ஓராண்டாகியிருந்தது. அவர்கள் பெரிதாக பிரசாரம் செய்தார்கள். இது தொடர்பாக பெரிய பெரிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடிப்பதைப் போலவும் கருணாநிதி அதைப் பார்த்து சபாஷ் என்று சொல்வதைப் போலவும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.
லூதியானாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிரசாரத்திற்கு வரும்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் "தமிழ்நாட்டில் உங்களுக்கு சாதகமான நிலை இருந்தது. ஆனால், சேலம் சம்பவத்தால் எல்லாம் மாறிவிட்டதே" என்று கேட்டார்கள். அதற்கு இந்திரா காந்தி, என்ன நடந்தது எனக் கேட்டார். "ராமர் படத்தை செருப்பால் அடித்திருக்கிறார்கள்" என பத்திரிகையாளர்கள் சொல்லவும், யார் அப்படிச் செய்தது என இந்திரா கேட்டார். அதற்கு, "பெரியார்தான் அப்படிச் செய்தார்" என அவர்கள் சொன்னார்கள். "அவர்தான் 50 வருடங்களாக இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்" எனச் சொல்லிவிட்டார் இந்திரா.



ஆனால், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரசும் ராஜாஜியும் விடவில்லை. அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதால், அந்தக் கூட்டணிக்கு தாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற தன்னம்பிக்கையும் வந்தது. அந்த நேரத்தில் அரசின் உயரதிகாரியாக இருந்தவர், காமராஜரை சந்தித்து சால்வையெல்லாம் போர்த்தி வாழ்த்தினார். அமைச்சரவையில் யார் யார் இருக்க வேண்டும் என்றெல்லாம்கூட முடிவெடுத்துவிட்டார்கள்.
தினமணியில் சிவராமன் ஆசிரியராக இருந்தார். தினமும் தி.மு.க. தோற்பதற்காக நடத்தப்படும் பிரார்த்தனைகள் எல்லாம் அதில் வெளிவரும். ஆகவே, தேர்தல் முடிவு குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
1967ல் தி.மு.க. பெற்ற இடம் 138. ராமனை செருப்பால் அடித்த பிறகு, 184 இடங்களை தி.முக. பெற்றது. பலருக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. "என் பழி நீக்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்துவிட்டது. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை" என பெரியார், கருணாநிதிக்கு தந்தி அனுப்பினார்.
    1971ஆம் தேர்தல் பிரசாரம், பிராமணர் - பிராமணரல்லாதோர் போராட்டத்தைப் போல ஆகிவிட்டது. இது தொடர்பாக அப்போதைய குன்றக்குடி அடிகளாரும் ஓர் அறிக்கை வெளியிட்டார். "இன்றைய ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம். இன்றைய நாஸ்திகம் என்பது பெரும்பான்மையினரின் நலம்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
    இந்தத் தேர்தல் முடிவு தொடர்பாக கல்கியில் எழுதிய ராஜாஜி, "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழ தகுதி இழந்துவிட்டது. மகா புருஷர்கள் நாட்டைவிட்டே வெளியில் செல்ல முடிவெடுத்துவிட்டார்கள்" என்று கூறினார்.
    தி.மு.க. வெற்றிபெற்றவுடன் பெரியாரை அழைத்துச் சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது. பெரியார் முன்னிலையில் அது நடந்தது. எல்லோரும் பதவிப் பிரமாணம் செய்துவிட்டு, பெரியாரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
    இந்த மூட நம்பிக்கை மாநாட்டை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள். சோ போன்றவர்கள் எல்லாம் இந்த வழக்கில் சாட்சி சொன்னார்கள். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதான் நடந்தது.
    ஆனால், துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி உண்மைக்கு மாறான தகவல்களைச் சொல்கிறார். ராமர் படத்தை நிர்வாணமாக கொண்டுவந்ததாகவும் செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவும் சொல்கிறார். அது பச்சைப் பொய். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.




    இந்தப் பிரச்சனை பெரிதானவுடன் அதற்கு விளக்கம் சொல்வதற்காக ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். துக்ளக் விழாவில் பேசியபோது, எந்தப் பத்திரிகைக்கும் துணிச்சல் இல்லை; துக்ளக்கிற்கு மட்டும்தான் துணிச்சல் இருந்தது என்றார். அப்படியானால் அந்தப் பத்திரிகையைத்தானே ஆதாரமாகக் காட்டியிருக்க வேண்டும். துக்ளக்கை காட்டவேயில்லையே? அப்படியானால், அவர் சொன்னது தவறு என்றுதானே ஆகிறது?
    ஒரு பெரிய தலைவரைப் பற்றிப் பேசும்போது, சரியாகத் தெரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும். யாரோ சொன்னதைக் கேட்டுச் சொல்லியிருக்கக்கூடாது. அது முதிர்ச்சியான மனிதருக்கு அழகல்ல. ஆதாரமாக அவுட்லுக் பத்திரிகையை காட்டுகிறார். அவுட்லுக் பத்திரிகை 1995ல்தான் துவங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது 1971ல். அப்புறம், அவுட்லுக் எப்படி சரியான ஆதாரமாக இருக்க முடியும்? அவுட்லுக் இந்து குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகை என்கிறார். அவுட்லுக்கிற்கும் இந்து குழுமத்திற்கும் என்ன தொடர்பு? எல்லாம் அரைகுறைத் தகவல்கள்.
    அவர் துக்ளக் இதழ்களைப் பார்த்திருப்பார். அப்படி நடக்கவில்லை என்பது தெரிந்திருக்கும். அப்படியானால், மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அம்மாதிரி பண்பாட்டை தன்னிடம் எதிர்பார்க்க முடியாது எனக் காட்டியிருக்கிறார். செய்தியாளர்கள், ஊர்வலத்தில் பெரியார் மீது செருப்பு தூக்கியெறியப்பட்டதைப் பற்றிக் கேட்கிறார்கள். அதற்கு அவர் பதிலே சொல்லவில்லை. செருப்பு வீசியதற்கான எதிர்வினைதான் அந்த சம்பவம். பெரியார் மீது செருப்பு வீசப்பட்டதையடுத்து, தொண்டர்கள் இயல்பான கோபத்தில் அதைச் செய்தார்கள். ரஜினி இன்றைக்குப் பேசியிருப்பது, குளிக்கப்போய் சேற்றில் விழுந்ததைப் போலத்தான்.
      இவர் அரசியலுக்கு வரப்போவதாகச் சொல்கிறார். ஆன்மீக அரசியல் செய்யப்போவதாகச் சொல்கிறார். அவருடைய ஆன்மீக அரசியல் இப்படித்தான் இருக்கும்போலிருக்கிறது. 1971ல் ஆன்மீக அரசியல்தான் நடந்தது. மக்கள் பெரியார் பக்கம் இருந்தார்கள். இப்போது ஆன்மீக அரசியலை கையில் எடுத்திருக்கிறார்கள். 1971ல் என்ன நடந்ததோ, அதேதான் இப்போதும் நடக்கும்.
      கே. அந்த ஊர்வலத்தில் வேறு தெய்வங்களின் படங்கள் நிர்வாணமாகக் கொண்டுவரப்பட்டனவா?
      ப. நிர்வாணம் அல்ல. ஹரியும் ஹரனும் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளை என்பதால், அதற்கேற்றபடி படங்கள் வரையப்பட்டிருந்தன. கீழே அடிக்குறிப்பில் அது விளக்கப்பட்டிருந்தது. அதில் நிர்வாணம் என்ற பிரச்சனை எங்கிருந்து வருகிறது? ராமரும் சீதையும் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறார். அப்படியெல்லாம் நடக்கவேயில்லை. அந்தப் படத்தை ரஜினி காண்பிக்கவேயில்லையே? அப்படி ராமர் - சீதையை நிர்வாணமாக கொண்டுவரும் படம் இருந்தால் காண்பிக்க வேண்டியதுதானே? அது உண்மையல்ல. சேலத்தில் கொண்டுவரப்பட்ட படங்களை சென்னையில்கூட கண்காட்சியாக வைத்தோம்.
      கே. திராவிடர் கழகம் கடவுள் படங்களை, உருவங்களை அடித்த சம்பவங்கள் உண்டு. ஆனால், இப்போது அதையே ஒருவர் சொல்லும்போது ஏன் அவசரஅவசரமாக மறுக்க வேண்டும்?
      ப. ஏனென்றால் அது உண்மையில்லை. உண்மையைச் சொல்ல வேண்டிய கடமையைச் செய்திருக்கிறோம். நடந்ததைச் சொல்லியிருந்தால் சரி. நடக்காததைச் சொல்லி நாங்கள் credit வாங்க விரும்பவில்லை. பெரியார் கடவுள்களைச் செருப்பால் அடிக்கும் போராட்டத்தை எப்போதாவது செய்திருக்கிறாரா? ராமர் படத்தை எரித்திருக்கிறார். பிள்ளையாருக்கு சக்தி இல்லையென சிலையை உடைத்திருக்கிறார். அதும் முன்கூட்டியே, இடம் - நேரமெல்லாம் அறிவித்துவிட்டு செய்வார். இதுபோல, ஒளிந்து நின்று, பதுங்கி இருந்து செய்ய மாட்டார்

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக