புதன், 8 ஜனவரி, 2020

தனியார் மயமாக்கப்படும் திருச்சி பெல்!

தனியார் மயமாக்கப்படும் திருச்சி பெல்!மின்னம்பலம்:  பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யார் போராடினால் நமக்கு என்ன என்ற வகையில் மத்திய அமைச்சரவை இன்று சில நிறுவனங்களைத் தனியார் மயமாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாஜக அரசு , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. சில எண்ணெய் நிறுவனங்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிராகத்தான் லட்சக் கணக்கான ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கைக்குச் சிறிதும் செவிசாய்க்காமல் இன்று அவசர அவசரமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பெல் உட்பட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஓப்புதல் வழங்கியுள்ளது.
எம்எம்டிசி,தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி), பாரத மிகுமின் நிறுவனம் (பிஹெச்இஎல்), ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா முதலீட்டுக் கழகம், எம்இசிஓஎன் பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீலாஞ்சல் ஸ்பாட் நிறுவனத்தின் பங்குகளையும் அதன் பங்குதாரர்கள் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மின் உற்பத்திக்கான கனரக சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான பெல் தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை என நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இரண்டு கட்ட ஏல நடவடிக்கைக்குப் பிறகு எம்.எம்.டி.சியில் 49.78 சதவீத பங்குகளையும், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின் 10.1 சதவீத பங்குகளையும், இதுதவிர பெல் மற்றும் எம்இசிஓஎன் பங்குகள் 0.68 சதவீதம் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பங்குகள் விற்பனையில் இருந்து கிடைக்கும் நிதி சமூக மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கும் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் என்பது தொழிலாளர்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இந்நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக