சனி, 18 ஜனவரி, 2020

ரஜினி-காங்கிரஸ்- திருமாவளவன்: ரகசிய நகர்வுகள்

 டிஜிட்டல் திண்ணை:  ரஜினி-காங்கிரஸ்- திருமாவளவன்: ரகசிய நகர்வுகள்மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் கே..எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூற, அதில் இருந்து புறப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
கடந்த ஜூன் மாதமே காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக அப்போது இருந்த கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாம் தனித்தே போட்டியிடலாம்’ என்று பேச அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு காரசாரமாக பதில் கூறினார். ‘திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று நேரு திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இந்த சர்ச்சையில் கராத்தே தியாகராஜனின் தலை உருட்டப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இன்னும் அவர் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார். சில நாட்கள் முன்புகூட ப.சிதம்பரத்துடன் ஒரே விமானத்தில் பயணித்தார் கராத்தே.
கராத்தே தியாகராஜன் அன்று சொன்னதைத்தான் 5 மாதங்களுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் வந்த பின் ஒவ்வொரு மாவட்ட தலைவரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியைத் தொடர்பு கொண்டு கூற ஆரம்பித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் நடப்பது உறுதியானதுமே மாவட்டச் செயலாளர்களே இடப் பங்கீடு பற்றி முடிவு செய்துகொள்வார்கள் என்று அறிவாலயம் சென்ற அழகிரியிடம் சொல்லியனுப்பிவிட்டார்கள். அதன் பிறகுதான் பல மாவட்டத் தலைவர்கள் அழகிரிக்கு போன் செய்து தங்கள் மாவட்டத்தில் திமுக உரிய முறையில் பங்கீடு செய்யவில்லை என்று புகார் கூற ஆரம்பித்தார்கள். இதற்கு, தான் போகவேண்டாமென்று தன் தனிச் செயலாளர் சேரனையும்,செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவையும் அறிவாலயத்துக்கு ஒவ்வொரு முறையும் அனுப்பினார் அழகிரி. அவர்கள் ஆர்.எஸ்.பாரதியிடம் புகார் சொல்வதும் , ‘நான் மாவட்டச் செயலாளர்கிட்ட சொல்லிடுறேன். பாத்துக்கலாம்’ என்று அவர் பதில் சொல்வதுமாகவே இருந்ததே தவிர எதுவும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் மாவட்டச் செயலாளர் போன் போட்டால் எடுக்க மாட்டேங்குறாரு. தேர்தல் பிசியில இருக்காரு போல என்றும் அறிவாலயத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

அறிவாலயத்தின் அலட்சியம் ஒருபுறம் மாவட்டத் தலைவர்களின் நெருக்கடி மறுபுறம் என்று தவித்த அழகிரி இதை ப.சிதம்பரத்திடம் சென்று முழுதாக கூறியிருக்கிறார். அதன் பிறகுதான், ‘நீங்க ஒரு அறிக்கை விடுங்க. அறிக்கை விடலைன்னா காங்கிரஸ்காரங்களை நாமே கைவிட்ட மாதிரி ஆயிடும்’ என்று சிதம்பரம் சொல்ல அதன் பிறகே அந்த அறிக்கை வந்திருக்கிறது.

அழகிரி அறிக்கைக்கு சிதம்பரம் சொன்ன விளக்கம் இன்னும் திமுகவை சூடேற்றியது. ‘தமிழ்நாட்டில் திமுக காங்கிரசை விட மூன்று மடங்கு வலிமையான இயக்கமாக இருக்கலாம். காங்கிரஸ் ஒன்று என்றால் திமுக மூன்றாக இருக்கலாம். ஆனால் அரசியலில் 3+1+ 4 கிடையாது. அது ஐந்தாக இருக்கலாம், ஆறாக இருக்கலாம். ஜார்க்கண்டில் அதுதான் நடந்தது’ என்று கூறினார். சிதம்பரத்தின் செய்தி எனன்வென்றால் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு இருக்கலாம். ஆனால் காங்கிரசுடன் சேர்ந்தால்தான் திமுக ஆட்சி அமைக்க முடியும்,. காங்கிரஸ் இல்லையென்றால் திமுகவில் இவ்வளவு கூட்டணிக் கட்சிகளும் இருக்காது என்ற பொருளில்தான் சிதம்பரம் சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகுதான் அன்பழகன் அறிக்கை, டி.ஆர்.பாலுவின் பேட்டி, திமுகவால்தான் காங்கிரஸ் ஜெயித்தது என்ற மு.க.ஸ்டாலின் பேச்சு எல்லாம் அடுத்தடுத்து வெளிவந்தன.

கொஞ்சம் பக்குவமாக நடந்து வந்த வார்த்தை மோதல்களின் அடுத்தகட்டமாக காங்கிரசை இறங்கியடித்தார் திமுக பொருளாளர் துரைமுருகன். ’விலகிப் போகிறவர்கள் போய்விட்டுப் போகட்டும். அதனால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. குறிப்பாக நான் கவலைப்படவில்லை. அவர்கள் போனால் ஒன்றும் பாதிக்காது. ஒட்டு இருந்தால்தானே பாதிக்க? கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆனால், நான் பதிலே சொல்லிவிட்டேன்’ என்றார் துரைமுருகன். இதற்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்த சூடான பதிலோடு, விருதுநகர் எம்பி மாணிக் தாக்கூர், ‘ஸ்டாலினை முதல்வராக விடாமல் தடுக்க திமுகவில் சதி நடக்கிறது’ என்று துரைமுருகன் மீது புதுகுண்டு போட்டார்.

காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே இதைவிட ஏராளமான மோதல்கள் முன்னர் நடந்தும் பிறகு சமாதானமாகி கூட்டணி அமைந்திருக்கிறது என்றாலும் இப்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள் சிதம்பரம் தரப்பில்.

‘வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ரஜினிகாந்த் களம் காண இருக்கிறார். 96 இல் ரஜினி திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்துக் குரல் கொடுத்ததற்குக் காரணம் மூப்பனாரும், சிதம்பரமும்தான். சிதம்பரம் மேல் அரசியலைத் தாண்டி பெரும் மரியாதை வைத்திருக்கிறார் ரஜினி.
சிதம்பரமும், தனக்கு 75 வயதாகிவிட்டது காங்கிரஸ் தமிழகத்தில் நல்ல நிலையில் வருவதைப் பார்க்க வேண்டும். அதற்கு ரஜினியிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஏற்கனவே ரஜினியின் தொடர்பு எல்லைக்குள் காங்கிரஸ் என்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியாகியிருக்கிறது.
அந்த வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி, காங்கிரஸ் இணைந்து சந்திக்க வேண்டும் என்றும் அப்படி சந்தித்தால் திமுக கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சிகளும் திமுகவை விட்டு வரக் கூடும் என்று கருதுகிறார் சிதம்பரம். இது தொடர்பான பேச்சுகளை சிதம்பரம் தொடங்கிவிட்டார். சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தை திமுக புறக்கணித்தும் அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டதை சுட்டிக் காட்டும் சிதம்பரம் ஆதரவாளர்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் நிச்சயம் தங்களுடன் திருமாவளவன் வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இதையெல்லாம் விட காங்கிரஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ‘சட்டமன்றத்தேர்தலில் செலவு பண்ணுவதற்கும் நாம் தயங்கக் கூடாது என்று சிதம்பரத்தின் மிகத் தனிப்பட்ட வட்டாரத்தில் பேசிவருகிறார்கள்’ என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான இடைவெளி வர வர அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதன் அடிப்படையில் 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி நகர்வுகள் மாறிக் கொண்டே இருக்கிறது. இதைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக