திங்கள், 27 ஜனவரி, 2020

துணை சபாநாயகர் பதவி…!’ – கோரிக்கை வைத்த டி.ஆர்.பாலு; கொந்தளித்த ஸ்டாலின்

டி.ஆர்.பாலு, ஸ்டாலின்கே.என்.நேருகனிமொழிvikatan.com - ஆ.விஜயானந்த் - தினேஷ் ராமையா : தி.மு.க முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலுவுக்குப் பதிலாக கே.என்.நேரு அமர்த்தப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னர் தி.மு.கவில் பல்வேறு விவாதங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, கூடுதலாக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கான வேலைகளையும் பார்ப்பது கடினமான காரியம் என்பதால், கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது. முதலில், தி.மு.க தலைமையின் இந்த முடிவை கே.என்.நேருவும் ஆட்சேபித்ததாகவும் ஸ்டாலின் சமாதானம் செய்த நிலையில் அவர் அமைதியானதாகவும் சொல்கிறார்கள்
இந்தநிலையில், முதன்மைச் செயலாளர் மாற்றம் குறித்த ஆலோசனையின் போது பல்வேறு விவாதங்கள் எழுந்ததாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். இதுதொடர்பாக தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு என இருவருமே இருக்கும் வகையில், இரண்டு முதன்மைச் செயலாளர்கள் பதவியை உருவாக்கலாம் என முதலில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

ஆனால், டி.ஆர்.பாலு இதை ஏற்கவில்லை. `அந்தப் பதவியில் நான் இருக்கிறேன். இல்லையென்றால் அதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதன்பின்னர், `நீங்கள் நாடாளுமன்றப் பணிகளைப் பாருங்கள்’ என்று சொல்லி கே.என்.நேரு முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்” என்கிறார்கள் < இந்தநிலையில், டி.ஆர்.பாலு வேறு விதமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். இதுகுறித்து விசாரித்தபோது,

“மக்களவை துணை சபாநாயகர் பதவியை நமக்குக் கொடுக்க பா.ஜ.க முன்வந்திருக்கிறது. அந்தப் பதவியை எனக்குப் பெற்றுத் தர தலைமை அனுமதிக்க வேண்டும்” என ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார். ஆனால், இதை ஏற்க மறுத்த ஸ்டாலின், “ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வரும் நாள்களில் கொண்டுவரப்போகும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

 முன்னதாக, அ.தி.மு.கவின் தம்பிதுரைக்கு அந்தப் பதவியைக் கொடுத்து, அவர்களுக்கு அனுசரித்துப் போகும் வகையில் செய்தனர். அதேபோல், அவர்கள் கொடுக்கும் பதவியை ஏற்றுக்கொண்டால் நாமும் அனுசரித்துப் போகவேண்டிய சூழல் ஏற்படும்” என்று கூறி டி.ஆர்.பாலுவின் கோரிக்கையை ஏற்க மறுத்திருக்கிறார். ஆனால், டி.ஆர்.பாலு தனது கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 டி.ஆர்.பாலுவின் இந்தக் கோரிக்கையால் ஸ்டாலின் அப்செட் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தநிலையில், “டி.ஆர்.பாலுவின் மகனும் எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பியுமான கௌதம் சிகாமணி ஆகியோருக்கு இளைஞரணித் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கவும் தலைமை முடிவு செய்திருக்கிறது” என்றும் தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்தார். அப்போது மக்களவையில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர வகுப்பினர் இங்கு வந்து வாழ்கின்றனர். எனவே, உள்துறை அமைச்சர் அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று பேசினார்.

`தமிழ்நாட்டுக்குள் நம்மால் கால்வைக்க முடியாது!’ -டி.ஆர்.பாலு செயலால் தகித்த தி.மு.க எம்.பி-க்கள்

பின்னர், `நாங்கள் இந்த மசோதாவைத் திருப்தியுடன் ஏற்கவில்லை. எனவே, வெளிநடப்பு செய்கிறோம்’ எனக் கூறி எழுந்து சென்றுள்ளார். இதை எதிர்பார்க்காத எம்.பி ஒருவர், `குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லையென்றால் தமிழகத்தில் நம்மால் கால்வைக்க முடியாது’ எனக் கூறியதாக தி.மு.க தரப்பிலிருந்து தகவல் வெளியானது. ஆனால், அதை டி.ஆர்.பாலு பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கலானபோது தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என அப்போதே கனிமொழி எம்.பி மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. “குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது. தி.மு.க என்றைக்கும் சிறுபான்மையினரைக் கைவிடாது. 10/12/2019 அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதம் முடியும் வரை இருந்து, கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்ற பொய்ப் பிரசாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி” எனக் கனிமொழி குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக