சனி, 25 ஜனவரி, 2020

நிர்பயா குற்றவாளிக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது: வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

நிர்பயா குற்றவாளிக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது: வழக்கறிஞர் குற்றச்சாட்டு! மின்னம்பலம் : நிர்பயா குற்றவாளிக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது: வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனையைத் தாமதப்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளைக் குற்றவாளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
2012ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். பின்னர் மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த அந்த பெண் இந்தியாவின் மகள் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 2013ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 2018ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இருந்த போதும் இதுவரை தண்டனை நிறைவேற்றுவதைக் குற்றவாளிகள் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வது, அது தள்ளுபடி செய்யப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டால் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளிப்பது எனக் குற்றவாளிகள் 4 பேரும் இதனைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளான வினய் குமார், பவன் குப்தா, அக்‌ஷய் சிங், முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கம் போல் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்குக் கருணை கேட்டு ஜனவரி 17ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனால் ஜனவரி 22ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தண்டனை சட்ட விதிமுறைப்படி பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் குற்றவாளிகள் வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் வினய் குமாருக்குக் கருணை மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும். அக்ஷய் குமாருக்கும், பவன் குப்தாவுக்கும் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சிறைத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுத் தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனு இன்று டெல்லி நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல் துறை தரப்பில், வழக்குக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தரப்பட்டுள்ளது. தண்டனையைத் தாமதப்படுத்துவதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிறை அதிகாரிகள் வழங்கிய டைரியைக் கூட தாக்கல் செய்திருக்கிறோம். வினய் குமார் வரைந்த ஓவியங்களையும் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளோம். நீதிமன்றம் அனுமதித்தால் அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறப்பட்டது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிடுகையில், வினய் குமாருக்கு திகார் சிறையில் ஸ்லோ பாய்சன் வழங்கப்பட்டு அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மருத்துவ அறிக்கையைக் கேட்டால் சிறைத் துறை தர மறுக்கிறது. வினய் குமார் கை முறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரத்தை நாங்கள் காட்ட விரும்புகிறோம்.
சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்ட நிலையில் டைரி, மருத்துவ அறிக்கை வழங்கப்படவில்லை. இதனை எல்லாம் சிறைத் துறை தர மறுக்கிறது. வினய் குமாரின் ஓவியம் மூலம் கிடைத்த பணம் குறித்து குடியரசுத் தலைவரிடம் தெரிவித்து கருணை மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம்.
அதுபோன்று பவன் குப்தா தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மருத்துவ அறிக்கையும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. சிறை அதிகாரிகள் தேவையான ஆவணங்களையும், புகைப்படங்களையும் வழங்குவார்கள். அதனை நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் இதற்கு மேல் உத்தரவு பிறப்பிக்க எதுவுமில்லை என்று தெரிவித்த அவர் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று குற்றவாளிகள் முகேஷ் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கு இறுதிக் கட்டம் எட்டியுள்ள நிலையில், குற்றவாளிகள் இதுபோன்று தொடர்ந்து தண்டனையைத் தாமதப்படுத்த முயன்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக