சனி, 18 ஜனவரி, 2020

காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்...அலை மோதிய மக்கள் கூட்டம் சென்னையில்...

கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில்அலை மோதிய மக்கள் கூட்டம்சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் தினத்தந்தி ::  சென்னையில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரையில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து ஓடி, ஆடி விளையாடி மகிழ்ந்தனர். சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் உற்சாகத்தில் திளைத்தனர். மெரினா கடற்கரையில் உள்ள ராட்டினம் உள்பட விளையாட்டு உபகரணங்கள் நேற்று ஓய்வில்லாமல் இயங்கின. குதிரை சவாரியும் விறுவிறுப்பாக நடந்தது.
வழக்கம் போல் கடலில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனவே மணற்பரப்பில் அமர்ந்து கடல் அலையை மக்கள் ரசித்தனர்.


எனினும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை குதிரைப்படை போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த நபர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பொதுமக்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாடுகிறார்களா? என்பதை அறிய உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 13 இடங்களில் தற்காலிக உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். ட்ரோன் கேமரா மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக் கள் மூலமாகவும் மக்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையை போன்று, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற் கரை பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர். அந்த இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர்.

சென்னையில் காணும் பொங்கலை சுற்றுலாதலங்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக வசதியாக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நகரின் முக்கியமான பகுதிகளில் வழக்கமான பஸ்களுடன் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

காணும் பொங்கலையொட்டி நேற்று காலை முதலே மக்கள் உணவுப்பண்டங்களுடன் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை சமாளிப்பதற்காக வழக்கமாக டிக்கெட் வழங்கப்படும் 2 கவுண்ட்டர்களுடன் கூடுதலாக 6 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். மக்கள் எளிதில் உள்ளே சென்று வருவதாக வசதியாக தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர் களை எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்கள் கை மற்றும் சட்டையில் பெற்றோர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் எழுதப்பட்ட ஸ்டிக்கரில் ஓட்டப்பட்டன. மேலும் பெண்களின் நகைகள் திருட்டு போகாமல் இருப்பதை தடுப்பதற்காக நகைகளை தங்கள் உடைகளுடன் இணைத்து கொள்வதற்கான ஊக்குகளையும் போலீசார் வழங்கினர்.

கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வருகை தந்த சிறுவர்கள் அங்குள்ள மான், மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை உற்சாகமாக பார்வையிட்டு மகிழ்ந்தனர். சிறுவர்களுக்கான ஊஞ்சல், கயிறு ஏறுதல், கம்பி பார்களில் உற்சாகமாக விளையாடி குதூகலித்தனர். பெரியவர்களும் அங்குள்ள ஆலமரத்தின் விழுதுகளை பிடித்து தொங்கியபடி விளையாடி மகிழ்ந்தனர். விலங்குகள் அருகில் நின்று பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த ‘3-டி’ தொழில்நுட்ப அரங்கை பார்வையிட்டு உற்சாகத்தில் திளைத்தனர்.

கிராமத்தில் பொங்கலிடுவது போன்று அமைக்கப்பட்டிருந்த மாதிரி முன்பு மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதே போன்று கிண்டி பாம்பு பண்ணையில் உள்ள பாம்புகள், பல்லி வகைகள், ஆமைகள் உள்ளிட்டவையும் சிறுவர்கள் பார்த்தனர்.

இந்தியாவிலேயே எந்த வன உயிரின பூங்காவிலும் இல்லாத விஷம் உமிழும் மலேசிய நாட்டு பாம்பு மற்றும் தமிழகத்தில் எந்த வன உயிரின பூங்காவிலும் இல்லாத வெள்ளை நிற மலைப்பாம்பு ஆகியவற்றையும் ஆர்வத்துடன் பார்த்தனர்.

வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சிங்கம், புலி, மனித குரங்கு, யானை, காட்டு மாடு, குதிரை, மான் உள்ளிட்ட வன விலங்குகளை பார்த்து ரசித்தனர். விலங்குகள் முன்பு ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்ததுடன், ‘டிக்-டாக்’, ‘பேஸ்-புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.

மனித குரங்கு சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிங்கம், புலி போன்ற விலங்குகள் அருகில் வந்து உலாவிய போது பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் வன உயிரியியல் பூங்கா கூண்டுக்குள் இருக்கும் விலங்குகள் 2 பெரிய அகன்ற திரைகள் மூலமும் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டன.

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பூங்காவின் இயக்குனர் யோகேஷ் சிங், துணை இயக்குனர் சுதா ராமன் ஆகியோரும், கிண்டி சிறுவர் பூங்காவுக்கான ஏற்பாடுகளை வன உயிரின காப்பாளர் டி.எச்.பத்மா, வன சரகர் வி.மோகன், வனவர் கன்னியப்பன் ஆகியோரும், கிண்டி பாம்பு பண்ணையில் காணும் பொங்கல் ஏற்பாடுகளை பண்ணையின் செயல் தலைவர் எஸ்.பால்ராஜ், துணை இயக்குனர் எஸ்.ஆர்.கணேஷ் ஆகியோரும் செய்து இருந்தனர்.

சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, சென்னை நந்தனம் புத்தக கண்காட்சி, சென்டிரல் அருகே நடைபெறும் சர்க்கஸ் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

திரையரங்குகள், வணிக வளாகங்கள், தனியார் பொழுதுபோக்கு தலங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினார்கள். காணும் பொங்கல் கொண்டாட்டம் காரணமாக கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலாதலங்கள் களை கட்டியது.

சென்னை மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் மக்கள் அதிகம் கூடிய மற்ற இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக