சனி, 4 ஜனவரி, 2020

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு மனு!

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு மனு! மின்னம்பலம் : மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று (ஜனவரி 4) ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அம்மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. கல்வி, மாநில பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வினை அறிமுகப்படுத்தி, மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது என மாநில அரசுகள் நீதிமன்றத்தில் வாதிட்டன. இதனால் நீட் தேர்வு அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு மோடி அரசால் மீண்டும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. 2016ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு எதிராகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அன்றைய தமிழக முதல்வரான ஜெ ஜெயலலிதா எழுதினார்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் மாணவர்கள் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் பல சர்ச்சைகள் கிளம்பின. மேலும் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிறமொழி கேள்விகள் வெவ்வேறாக உள்ளன என்று தொடரப்பட்ட வழக்கில் நீட் தேர்விற்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. சென்னை நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
அப்போது உச்ச நீதிமன்றத்தில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி ரிதுஸ்ரீ, வைஷியா வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நீட் தேர்வு தான் காரணமாக இருந்திருக்கிறது என்று அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அனைத்து முயற்சிகளும் வீணாகிப்போயின.
இந்நிலையில் வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 6ஆம் தேதியே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. 2017 மற்றும் 2018ல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக