திங்கள், 27 ஜனவரி, 2020

தமிழகத்தில் முகத்தை மூடி செல்லக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

மின்னம்பலம் : தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் விஜயரகு, பாஜகவின் திருச்சி மண்டலச் செயலாளராக பதவி வகித்துவந்தார். இந்த நிலையில் இன்று (ஜனவரி 27) அதிகாலை காந்தி மார்க்கெட் பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி விஜயரகு உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை அருகே பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 27) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
இந்து என்ற ஒரு மதமே இல்லை என்ற ஒரு கருத்தை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மதமாற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன” என்று குற்றம்சாட்டினார்.

“இந்து என்ற உணர்வோடு யாரும் வாழக்கூடாது என்று அதற்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் விஜயரகு போன்றவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்திய பொன்.ராதாகிருஷ்ணன்,
“இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணம் யார், அவர்களுக்கு எங்கிருந்து உதவி வந்தது என்பதை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே, முகத்தை மூடிக்கொண்டு யாரும் நடக்கக் கூடாது என கூறும் அளவுக்கு இலங்கை அரசு சென்றிருக்கிறது. முகத்தை மூடிக்கொண்டு வருபவர் எந்த மதம், எந்த பாலினம் என்று யாருக்கும் தெரியாது. தமிழகத்திலும் முகத்தை மூடிக்கொண்டு யாரும் செல்லாத அளவுக்கான நிலையை அரசு உருவாக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இந்த நிலையில் விஜயரகு கொலை பற்றி மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் கூறுகையில், “திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். மதத்தின் பெயரால் கொலை நடைபெற்றதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக