வியாழன், 16 ஜனவரி, 2020

காணும் பொங்கல்: கடலில் கால் வைக்க தடை


minnamblam : காணும் பொங்கல் அன்று சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, காணும் பொங்கல் (ஜனவரி 17) அன்று மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை போன்ற கடற்கரையில் அதிகமாக மக்கள் கூடுவர். இதனால், பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை, பனையூர், அக்கரை கடற்கரை பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, உயர் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கல் அன்று கடற்கரையில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். அத்துடன் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் நெரிசல் இல்லாமல் சுற்றிப் பார்க்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை (ஜனவரி 17 அன்று) 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவை அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும். அதேபோல், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்ஜிஎம், முட்டுக்காடு படகு குழாம், கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக