வியாழன், 16 ஜனவரி, 2020

ஜல்லிக்கட்டு.. ஒருவர் உயிரிழப்பு .. திருச்சி சூரியூரில்...

ஜல்லிக்கட்டு: விளையாட்டும் மரணமும்!மின்னம்பலம் : பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையே மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று( ஜனவரி 15) பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜனவரி 16) பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியில் அவற்றை அடக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்தப்பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல பகுதிகளிலும் தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த வீரவிளையாட்டைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு பார்வையாளர்களாகக் குழுமியுள்ளனர். அதே போன்று திருச்சி அருகே சூரியூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. சீறி வரும் காளைகளை அடக்க வீரர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் அங்கு போட்டியைக் காணவந்த ஜோதிலட்சுமி என்பவர் மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக விளையாட்டைப் பார்க்க வந்த அனைவரையும் இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பல பகுதிகளிலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக